(Reading time: 36 - 71 minutes)

முழுவதும் அதிந்து போனாள் மிர்னா.

“இது எப்ப இருந்து...? என் பேரண்ட்ஸ் இன்னும் பெருசா ஒரு கேஸ் கோர்ட்னு ஒரு சீனும் போடாம அமைதியா இருக்காங்களேன்னு ரொம்ப தடவை யோசிச்சிருக்கேன்....நீங்க தான் அவங்க வாய மூடின மந்திரவாதியா?”

“நீ என் அம்மா கூட சேர்ந்துக்கிறப்ப நான் உன் வீட்ல சேர்ந்துக்க கூடாதாமா?”

ஆங்....இவன் என் கேட்டரிங் கதையை கண்டு பிடிச்சுட்டானா...இல்ல அம்மா சொன்ன மாதிரி எல்லாம் தெரிஞ்ச மாதிரி சீன் போடுறானா?

“அது...”

“நீ இன்னைக்கு ஃபங்ஷன்ல பாதி நேரம் எங்க அம்மா கூட தான் இருந்திருக்க ....நான் கவனிக்கலைனு நினைக்காத...”

ஹப்பா வாயவிட்டு நான் மாட்டிகிடலை..எப்படி பார்த்தாலும் நீ புத்திசாலி எம் எம்.

“அது...உங்கள எப்டி தம்ப் கன்ட்ரோல்ல வச்சிகிறதுங்கிறத பத்தி டிஸ்கஸ் செய்துகிட்டு இருந்தோம்...உங்க அம்மா ரொம்ப நல்லவங்க...டீடெய்லா சொல்லி தந்தாங்க...”

இவள் முகத்தை முறுவலுடன் பார்த்திருந்தவன் வாய்விட்டு சிரித்தான்.

சிந்திய சிரிப்பை செவ்வரி ஓடிய விழிகளால் சிதறாமல் சேமித்தாள் தன்னுள்ளே.

அடுத்து மிர்னா வியன் மற்றும் மிஹிகிருடன்  சென்றது லண்டனுக்கு. அங்கு நடந்த உலகளாவிய போட்டியில் அடுத்த உலக சாதனையுடன் தங்கம் வென்றவள் ப்ரேசில் தலை நகரம் ரியோடி ஜெனிரோவிற்கு பறந்தாள்.

அந்த படகு சம்பவத்திற்கு பிறகு எந்த விபத்தோ விபரீதமோ நடக்கவில்லை என்பதாலும் லண்டன் பயணத்திலும் பாதுகாப்பு ப்ரச்சனை எழவே இல்லை என்பதாலும், அதோடு அது பெரும் வெற்றி பயணமாக அமைந்ததாலும் ரியோ கிளம்பிச் சென்றபோது இவர்கள் அனைவரும் படு மகிழ்ச்சியுடனே சென்றனர்.

அம்மட்டும் வந்தது சுகராகம்.

வேரிக்கு இது ஐந்தாம் மாதம். மசக்கையும் மிக குறைந்துவிட்டது. நீலா மனோகர் தம்பதியருக்கு ஒலிம்பிக்கில் இளைய மருமகள் பங்கேற்பதை காண ஆவல். அதோடு அது முடியவும் உடனடியாக வியன் மிர்னா திருமணத்தை நடத்தி விட வேண்டும் என்பது அவர்களது எண்ணம்.

காதல் திருமணத்தைவிட நிச்சயிக்க பட்ட திருமணத்தை அதிகமாக விரும்பும் மக்கள் அவர்கள். திருமணத்திற்கு முந்தைய ஒழுக்கம் அதன் பின் தம்பதிகளுக்குள் ஒருவர் மீது ஒருவருக்கான நம்பிக்கையை பலப்படுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்ற நம்பிக்கை உடையவர்கள்.

கவின் பெரியவர்கள் நிச்சயிக்கும் திருமணம் தான் தனக்கு என்று சொல்லிக்கொண்டிருந்தவன் வேரியின் மீது கண்ட்தும் காதல் என்று சொன்ன போதும்  அதை உடனடியாக செயல் படுத்தியும் விட்டதில் அவர்களுக்கு முழு திருப்தியே.

ஆனால் ஆரம்பத்தில் இருந்து “நான்லாம் லவ் மேரேஜ் தான் செய்வேன்.....என் வைஃப் ஐ நான் தான் செலக்ட் செய்வேன்...” என்று சொல்லிக்கொண்டிருந்த வியன்,

 கவின் சொன்னவுடன் மறு வார்த்தை பேசாமல், நிச்சயிக்கபட்ட திருமணத்தைப் போல்  மிர்னாவை திருமணம் செய்ய முடிவெடுத்ததில் இவர்களுக்கு பரம திருப்தி என்றாலும், அதை உடனடியாக செயலாக்காமல் இழுத்தடிப்பதில் அவர்களுக்கு சற்று தவிப்புதான்.

ஆக ரியோ விற்கு கிளம்பிவிட்டனர்.

மேலும் மூத்த மகனுக்கும் மருமகளுக்கும் தனிமை தர வேண்டும் என்பதும் அவர்கள் எண்ணம்.

இப்படியாக அவர்கள் கிளம்பிச் செல்ல, வேரிக்கு மீண்டும் ஆரம்பித்தது துன்பம். உடல் மிகவும் படுத்தாமல் இருந்தாலும் இயந்திரங்கள் ஏற்படுத்தும் ஒருவித அதிர்விலேயே அலுவலகத்தில் இருக்க வேண்டி இருப்பதால், அதை தவிர்க்க அவள் வீட்டில் தனித்திருக்க நேரிட்டது.

உடல் நிலையில் துன்பம் இல்லை என்பதால் முன்பு போல் அவள் கவினுடன் மனதிற்குள் சண்டையிட்டு கொண்டு இருக்காவிட்டாலும், ப்ரச்சனை வேறு உரு எடுத்து வந்தது.

ன்று வீட்டிலிருக்க போரடிக்கிறது என்று கவினுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என்ற எண்ணத்துடன் அலுவலகம் கிளம்பிச் சென்றவள் காதில் விழுந்த அந்த தகவல் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது.

ஆலையின் நுழைவுப் பகுதியிலும், ஆலையின் இயந்திரங்கள் இயங்கும் பகுதியிலுமாக கவினுக்கு இரு அறைகள் உண்டு.

இவள் அந்த நுழைவுப் பகுதியில் உள்ள அறைக்கு சென்றாள். அவள் எதிர் பார்த்தது போல் கவின் அந்நேரம் உட்பகுதிக்கு சென்றிருந்தான். இன்னும் 10 அல்லது 15 நிமிடங்களில் வந்துவிடுவான்.

அவனது தினசரி நடவடிக்கைகள் அவளுக்கு தெரியுமே....

அவன் வந்து அறையை திறக்கும் போது அவன் எதிர்பாரா வகையில் இவள் உள்ளிருக்க வேண்டும் என்று நினைத்தபடி இவள் வந்த தடயமே இன்றி உள்ளே காத்திருந்தாள்.

அந்த அறைக்கு அடுத்தது ஒரு சிறு கான்ஃபிரன்ஸ் ரூம்.

அங்கிருந்து பேசும் சத்தம் இங்கு புரிந்து கொள்ளும் அளவிற்கு கேட்கும் என்பது அவளுக்கு அன்றுதான் தெரியும்.

காரணம் இருவர் அங்கிருந்து எதை எதையோ பேசிக்கொண்டிருந்தனர்.

இவள் அதை கண்டுகொள்ளவில்லை.

“என்ன இன்னும் எம் டி ய காணோம்...இப்ப வந்துருவார்தானே...?” இருவரில் ஒருவர் கேட்க அடுத்த அறையில் இருந்த வேரியின் கவனம் அவர்கள் பேச்சில் சென்று நின்றது.

பேசுவது கவினைப் பற்றி ஆயிற்றே.

“வருவார்...வருவார்...வராம எங்க போயிடப் போறார்...? அந்த ஃப்யூயல் ஃபாக்டரி இஷ்யூல சார் தலைய பிச்சுகிட்டு இருக்கார்...அதான் நம்ம மில்லை கவனிக்கிறதுல கொஞ்சம் டிலே...”

“ஆமா...அதுல எதோ ப்ரச்சனைனு சொல்றாங்க...என்னன்னு கேட்டா யாருக்கும் ஒன்னும் தெரியல...” 

“ஏன் தெரியாம...எங்க டீம்ல பெரிய தலைங்க எல்லாருக்கும் தெரியும்...ஆனா சொல்ல மாட்டோம்...சொல்ல கூடாதுன்னு எம்.டி ஆர்டர்...”

“அப்ப உங்களுக்கும்தான் தெரிஞ்சிருக்கும்...நீங்கதான் பெரியாளாச்சே...”

“தெரியும் தான் சார் ஆனால் சொல்ல முடியாது...சொன்னால் வேலை போயிடும்”

அடுத்து அவர்கள் பேச்சு வேறு திசை செல்ல வேரிக்குள் சிறு நெரிஞ்சு முள் ஜனனம்.

வேலையை விட்டு எடுத்துடுவேன்னு கவின் தன் ஊழியர்களை மிரட்டும் அளவுக்கு என்ன ப்ரச்சனை? அவ்ளவு பெரிய ப்ரச்சனையை கவின் இவளிடம் ஏன் சொல்லவில்லை?

அப்பொழுது கூட அந்த இ மெயில் விஷயம் உண்மையாக இருக்கும் என்று வேரிக்கு நினைவில் கூட தோன்றவில்லை. ஆனால் கவின் அவளிடம் விஷயத்தை மறைக்கிறான் என்பது மனதிற்கு கஷ்டமாக இருந்தது.

ஒரு மனைவியாக அவன் துன்பத்தில் ஆறுதலாக இருப்பாள் வேரி என்று அவனால் இன்னும் நினைக்க முடியவில்லைதானே. பயந்து போய் அழத்தான் செய்வாள் என்று நினைக்கபோய்தானே கவின் இவளிடம் உண்மையை சொல்லவில்லை?

இன்னும் கூட அவனால் இவளை ஒரு தைரியசாலியான பெண்ணாக நம்ப முடியவில்லைதானே?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.