(Reading time: 36 - 71 minutes)

வள் அறையின் அட்டாச்ட் வாஷ் ரூமிற்குள் சென்றிருந்த நேரம் கவினும் இன்னும் யாருமோ அந்த அறைக்குள் நுழையும் சத்தம் கேட்டது.

இன்னொருவர் கிளம்பி போகட்டும்...இவள் வாஷ்ரூம் அறையை திறந்து கவின் எதிர்பாரா நேரம் முதலில் சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும்.....பின் மெல்ல ஃபாக்டரியில் என்ன ப்ரச்சனை என்பதை விசாரிக்க வேண்டும்.

ஒஃபிலியா விஷயத்தைப் போல் இதிலும் கவின் மனம் சுகிக்கும் படி நடந்து கொள்ள வேண்டும்.

இதை எண்ணும்போதுதான் அந்த மெயிலில் குறிப்பிட்டிருந்த விஷயமே ஞாபகம் வருகிறது. கூடவே அவள் அம்மா மாலினி முன்பு சொன்ன செய்தியும்.

முன்புவரை அவளுக்கு இப்படி தோன்றியதில்லை...ஆனால் இப்பொழுதோ உண்மையில் அந்த இடம் கவினுக்கு முக்கியமானதாக இருந்திருக்குமோ என்று ஒரு சுரீர் நினைவு.

வெளியே சொன்னால் வேலையை விட்டு தூக்கிவிடுவேன் என கவின் சொல்லி இருப்பதாக அவள் கேள்விபட்ட செய்தியின் தாக்கம் அது.

மனதிற்குள் கசப்பு கரைந்து பரவியது. சே...எவனோ என்னமோ சொன்னான்னு கவினைப் போய்...என்ன நினச்சுட்ட நீ... இவள் மனதிற்க்குள் தன்னை கடிந்து கொள்ள தொடங்கிய நொடி அறைக்குள் கவினுடன் வந்திருந்தவன் குரல் இவளை அடி வயிற்றில் குத்தியது

“சார்....நம்ம ஃபாக்டரிய மாத்தி கட்டிருக்கமே அந்த லேண்ட் இஷ்யூ முடிஞ்சிட்டுன்னு சொல்லிக்கிறாங்களே ....முடிஞ்சிட்டா சார்....? அப்ப நாம...”

“ஷட் அப்...இதைப் பத்தி இங்க வச்சு பேசாதீங்கன்னு சொல்லிருக்கேன்ல...பக்கத்துல கான்ஃப்ரென்ஸ் ரூம்...அதுல யார் இருந்தாலும் அவங்களுக்கு கேட்கும்...அதுவும் என் வைஃப் வேற இங்க வந்திருக்கிறதா கேள்விபட்டேன்....அவ காதுல விழுந்தா அவ்ளவுதான்” சத்தம் உயர்த்தாமல் கடுமையாக சீறினான் கவின்.

அடி வேரறுந்தது வேரிக்கு.

அடுத்து எப்படி உணர வேண்டும் என்று அவளுக்கு புரியவில்லை.

தன் வாய் பொத்தி தன் சத்தம் தனக்கே கேட்டுவிடக் கூடாது என்றபடி எத்தனை நேரம் அவள் அங்கு நின்றாளோ....

கவின் அறையை விட்டு வெளியேறிவிட்டான் என்பது உறுதியானவுடன் கதவை திறந்து வெளியே சென்றவள் காரையும்  டிரைவரையும் பார்க்க  கூட இல்லை.

நடந்து மெயின் கேட்டை தாண்டி வெளியே வந்தவள் சற்று தொலைவில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டுக்கு  சென்று ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தாள்.

வீட்டிற்கு வந்ததும் தன் மெயில் ஐடியை ஓபன் செய்தாள்.

அந்த மெயிலுக்குப் பின் வேறு மெயில்கள்  எதுவும் அப்போதைக்கு வரவில்லை என்பதாலும், அதை செய்தது ஒஃபிலியா என்று நினைத்திருந்ததாலும் அக்கடிதத்தை மறந்திருந்தாள் வேரி.

 அதோடு எஃப் பி பக்கம் செல்வதையும் நிறுத்தி இருந்தாள்.

 இப்பொழுது எஃப்பியில் வந்து கிடந்தன செய்திகள் .

“எனக்கு இந்த விஷயம் உன் கல்யாணதுக்கு பிறகுதான் தெரியும் பைத்தியம்...அதோட அதுக்கு பிறகு தான வியன் என்னை தூக்கி எறிஞ்சிட்டு உன் அக்கா மிர்னா லூசை கூட்டிகிட்டு சுத்றான்....அவன் சுய ரூபமே அதிலதான் எனக்கு புரிஞ்சிது.... “

என்றது ஒரு செய்தி.

அடுத்த செய்தியில் இவள் இடம் எது, கவினின் இடத்தின் எல்லை எது...அவனது தொழிற்சாலை இவளது எல்லைக்குள் எவ்வளவாய் வந்திருக்கிறது என, ஃபோட்டோ வரை படங்களுடன் விளக்கம்.

எது எப்படியாய் இருந்தால் என்ன இவள்தான் இடத்தை எழுதிக் கொடுத்தாயிற்றே....

அடுத்த செய்தியில் மிர்னாவை எங்கு எப்படி கொலை செய்ய முயன்றார்கள், அந்த ஒவ்வொரு நிகழ்விலும் வியன் குடும்பத்தார் யார் எப்படி அதை செய்ய முனைந்தார்கள் என்ற விளக்கம்.

கயிறு அறுந்த நிகழ்வில் வியன்தான் மலை மீது இருந்து கயிறை வெட்டினான் என்று விளக்கியது அது.

விஷம் கொடுத்த நிகழ்வில் சாட்சியே தேவையில்லை அந்த பழரசத்தை மிர்னாவிற்கு கொடுத்ததே வியன் தான்.

படகிலிருந்து தள்ளிவிட்ட நிகழ்வில் மிர்னா அருகில் நின்றது வியன். ஆனால் பின்னிருந்து தள்ளியது திருமதி நீலா மனோகர். அப்பொழுது அவர் கலோனிலிருந்தார் என்பது மிர்னாவிற்கே தெரியும் என்றது அது.

இத்தனை சாட்சிகளை கொடுத்தபின்பும் நீ நம்பவில்லை என்றால் உன்னைவிட பெரும் பைத்தியம் யாருமில்லை என்று முடிந்தது செய்திகள்.

“நீ என்ன சாட்சி சொல்வது அதான் கட்டியவனே சொல்லிவிட்டானே....” உடைந்து போனாள் வேரி....

“நான் பைத்தியம் தான்...என் அம்மா அத்தனை சொல்லியும் இந்த கவினையும் அவன் குடும்பத்தையும் நான் எத்தனையா நம்பினேனே...எல்லாம் இந்த காதலால வந்த நாசம்....நான் தான் நொண்டியே..என்னை பெத்த அம்மாவுக்கே என்னை பிடிக்காதே...பேர் கூட வைக்காம தூக்கி போட்டுட்டு போனாங்களே...அப்புறமும்...இந்த கவின் எவனோ ஒருத்தன் என்னை விரும்புறான்...காதலிக்கிறான்...அன்பா இருக்கான்னு நான் நம்பினேனே....நான் பைத்தியம் தான்....”

வாய்விட்டு அழுதாள் வேரி. பின்பு எதற்கும் இருக்கட்டுமென்று கலோன் சென்றுவிட்ட ஒஃபிலியாவை அலைபேசியில் அழைத்தாள்.

“ஹாய் அண்ணி...குட்டி பாப்பா உங்கள எப்படி வச்சுருக்காங்க.....வாமிட்லாம் வரவைக்காம நல்லா பார்த்துகிறாங்களாமே அம்மாவ...மிர்னு சொன்னா.” சமீப காலமாக இவளை அண்ணி என்று அழைத்துப் பழகி இருந்தாள் ஒஃபிலியா.

“ம்....கொஞ்சம் அவசரமா ஒரு விஷயம் வேணும்....எனக்கு...அந்த...எதாவது மெயில் அனுப்பி இருக்கீங்களா நீங்க....?”

“இல்லையே அண்ணி...நான் எதுவும் அனுப்பலையே....என்ன விஷயம்..?”.

“ஓ....நீங்க இல்லையா...ஓ கே...தேங்க்ஸ்....அப்புறமா பேசுறேன்...பை....”

அடுத்து வேரி அழைத்தது மிர்னாவிற்கு.

“நீலாம்மா கலோன் வந்திருந்தாங்களா?”

எடுத்தவுடன் இவள் கேட்க “என்னாச்சு வேரி...?” என சாதாரணமாக கேட்டாள் மிர்னா. கோபம் பொத்துக் கொண்டு வந்தது இளையவளுக்கு.

“பதில் சொல்லு லூசு...கேட்கிறேன்ல...”

“ஆமாம்.....அதுக்கு ஏன் இவ்ளவு கோப படுற...?”

வேரி இணைப்பை துண்டித்திருந்தாள்.

அப்படியானல் மெயிலில் வந்திருக்குமனைத்தும் தீர விசாரித்து கண்டு பிடிக்கப் பட்ட உண்மை. வேறு யாருக்கு இவளது பெயர் வெரோனிக்கா என விசாரிக்காமல் தெரிய முடியும்? இவளுக்கு தெரியாத நீலாவின் கலோன் விஜயம் இந்த மெயில் கார நபருக்கு தெரிந்ததெப்படி?

க அந்த இடம் இவளிடம் இருந்ததால் தான் இவள் அம்மா சொன்னது போல் இவள் இஷ்டபடி ஆடி இருக்கிறானா கவின்? நடித்து இவளிடம் எழுதி வாங்கவா? அதை அவனுக்கு கொடுத்துவிட்டாளே இனி இவள் கதை எச்சிலையா?

இன்னும் ஏன் உடன் வைத்திருக்கிறான்? மிர்னாவை கொன்றுவிட்டு இவளையும் கொன்று விடுவானோ? இல்லை இதற்குள் ஒன்றிரண்டு கொலை முயற்சி தோல்வி அடைந்து விட்டதா....இவளுக்குத்தான் தெரியவில்லையோ...?

குழந்தை வேண்டாம்  என்றானே? வாழ்வது நடிப்பு எனும்போது குழந்தை வேண்டும் என்று எப்படி தோன்றும்?

இவள் மனம் வருந்தினால் இடத்தை எழுதித்தருவதில் தொல்லையாகிவிடும் என பிள்ளைக்கு சம்மதித்துவிட்டான் போலும்...அப்படி வந்த பிள்ளை மேல் எப்படி விருப்பு வரும்? அதனால் தான் அசட்டை செய்திருக்கிறான்.

விலகிச் விலகி சென்றவளை வசியம் செய்ய அந்த குழந்தை ஷர்மிலியை  வைத்து நாடகம்.  இவள் கவினிடம் விழுந்த பின்பு  அந்த குழந்தை ஷர்மிலி  இறந்த போது கூட  இவன் கண்டு கொள்ளவே இல்லை.

அவன் தாய் தந்தையுடன் சேர்ந்து கொள்ள வேண்டுமாம் இவள், ஆனால் இவள் அம்மா வீட்டோடு சங்கார்த்தமே கூடாதாம். அவர்கள் இவன் நாடகத்தை இவளுக்கு புரிய வைத்துவிடுவார்கள் என்பதால் தானே...

எல்லாவற்றையும் என்னமாய் நம்பினாள்? எப்படியாய் கழுத்தறுத்து விட்டார்கள். கால் ஊனமாய் இருந்தது தவறில்லை...ஆனால் இவள் அறிவு ஊனமாக இருந்திருக்கிறதே...

“எனக்காவது கால்தான்டா ஊனம்...உன் குடும்பத்துக்கு மனசு ஊனம்...கொலைகாரங்க.....”

புலம்பிக் கொண்டிருந்தவளுக்கு அப்பொழுதுதான் உறைத்தது ...இங்கிருந்து இவள் இப்படி அழுது கொண்டிருந்தால்...கவின் வந்ததும் இவளுக்கு விஷயம் தெரிந்துவிட்டது என்று அவன் கண்டுபிடித்து இவளை தீர்த்துகட்டிவிட்டால்...மிர்னாவை காப்பாற்றுவது யாராம்?

கவின் வீட்டை அடைந்தபோது வேரி அங்கு இல்லை.

Friends  என்னைத் தந்தேன் வேரோடு இன்னும் சில வாரங்களில் முடிவடைந்துவிடும். இந்த 14 வது எபிசோடிற்கும் இனி வரும் எபிசோடுகளுக்கும் உங்கள் கருத்து மற்றும் கமெண்டை பதிவு செய்யுங்கள். லாஜிகலி கதையில் ஏதாவது முன்னிற்கு பின் முரண்பாடுகள் இருப்பின் தயவு செய்து சுட்டி காண்பியுங்கள். நன்றிகள்.

தொடரும்

Ennai thanthen verodu - 13

Ennai thanthen verodu - 15

{kunena_discuss:831}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.