(Reading time: 20 - 40 minutes)

ப்பா இவளிடம் “நாளைக்கு ஃப்ளைட்ல ஆதிக் உன்னை கொண்டு போய் உங்க ஃஸ்கூல் டீம் ஃஸ்டே செய்ற இடத்துல ட்ராப் செய்துடுவார், நீ போறியாமா? ஆதிக் கூட வரதால பயப்பட எதுவும் இல்லை…..ஆனா உங்க ஸ்கூல்ல யார்ட்டயும் நீ ஆதிக் கூட வந்தேன்னு காமிச்சுகாத…..” என்று கேட்ட போது தலைசுற்றியது ரேயாவுக்கு.

அப்பாவுக்கு ஆதிக் மீது இப்படி ஒரு நல்லெண்ணமா? ஆதிக் நீ எங்கப்பாட்ட பாஃஸாயிட்ட என்று இவள் உள்ளம் அப்பொழுது துள்ளி குதித்ததே தவிர எந்த ஒரு வாலிப ஆண் பெண் பழக்கத்தையும் அனுமதிக்காத அப்பா இப்பொழுது எப்படி இதற்கு சம்மதிக்கிறார் என்று யோசிக்கவே இல்லை.

அப்பாவுக்கு ஆதிக் மேலிருந்த நம்பிக்கையும் நல்லெண்ணமும் மட்டும் இதற்கு காரணமில்லை அதற்கும் மேலாக அவர் மனதில் வேறு ஒரு திட்டம் இருந்ததும் அதற்கு காரணம் என அவளுக்கு அப்பொழுது தெரியவே இல்லை.

1990 ஆம் ஆண்டு

வீட்டில் தனிமையில் அடைந்து கிடந்து குமைந்து கொண்டிருப்பதிலிருந்து தப்பிப்பதற்காக உடனடியாக அந்த பள்ளி வேலையில் சேர்ந்துவிட்டாள் மலர்விழி. பள்ளி மிக அருகில் இருந்தாலும் வசீகரன் தானே அவளை பள்ளியில் தினம் காலை ட்ராப் செய்யவும் மாலை பிக் அப் செய்யவும் விரும்பினான்.

அவனுக்கு எல்லா நேரமும் அவள் அருகில் இருக்க ஆசை. ஆனால் இரண்டே நாளில் அதை மறுத்துவிட்டாள் மலர்விழி. மத்திய தர வர்கத்தினர் மட்டுமே பணி புரிந்த அப்பள்ளிக்கு அவள் மிகுந்த பணக்காரியாக தெரிய, யாரும் அவளிடம் இயல்பாக பழகாதது போல் ஒரு உணர்வு. அதோடு காலையும் மாலையும் கிடைக்கும் அந்த சிறு நடையும் மனதிற்கு பிடித்துப் போய்விட்டது.

இவள் ஒன்றாம் வகுப்பு ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டிருந்தாள். அதற்குள் அவள் வகுப்பு மாணவிகளுக்கு மட்டுமல்ல மொத்த ஸ்கூலுக்குமே மலர்விழி பேவரைட் டீச்சராகி இருந்தாள்.

பகல் முழுவதும் குழந்தைகளுடனும் மாலை முதல் இவளை குழந்தை போல் தாங்கும் ஒருவனுடனுமாய் கழிய காயம்பட்டிருந்த இதயம் கூட மெல்ல ஆறி வருவதாக உணர்வு.

ஒரு நாள் வசிகரன் வீட்டிற்குள் வரும் போது இவள் தனியாக எதையோ எண்ணி சிரிப்பதும் பின் தனிமையை உணர்ந்து அதை அடக்க முயன்றும் கொண்டிருந்தாள்.

அவள் சிரிப்பை பார்ப்பது அபூர்வத்திலும் அபூர்வம் வசிகரனை பொறுத்தவரை. ஆக அவன் வரவை அறிவிக்காமல் மௌனமாக அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். ஆனால் இதையெல்லாம் அறியாத வேலைக்காரிதான்

“ஐயா வந்துடீங்களா…காஃபி கொண்டுவரவா?” என கேட்டு அந்த ஏகாந்த சூழலை முடிவுக்கு கொண்டு வந்தாள்.

அப்பொழுதுதான் அவன் வந்துவிட்டதை உணர்ந்த மலர்விழியும் “என்ன பொண்னு தனியா நின்னு சிரிச்சுகிட்டு இருக்கேன்னு பயந்து போய் நின்னுடீங்களா?” அவள் இருந்த சந்தோஷ மன நிலையில் அவனிடமும் கிண்டல் வந்தது அவளுக்கு.

“இல்ல நீ சிரிச்சு பார்க்கிறது அபூர்வமில்லையா..அதான் டிஃஸ்டர்ப் செய்யாம பார்த்துட்டு இருந்தேன்…” உண்மையை அப்படியே கூறினான் வசீகரன்.

பள்ளியில் இவள் அத்தனை குழந்தைகளிடமும் ஏன் அனைவரிடமும் ஒரு புன்னகையுடன் தான் பேசுவாள். முன் பின் தெரியதவர்களிடமே அப்படி நடந்து கொள்ளும் போது ஒரே வீட்டில் இருக்கும் இவனிடம் ஏன் இப்படி இறுகிப் போய் இவள் இருக்க வேண்டும் என்று தோன்றியது மலர்விழிக்கு.

அவனிடம் மட்டுமே தன் காயம் சோகம் சொல்ல முடிவதாலா? காயத்தை காட்டியவனிடம் சந்தோஷத்தை பகிரக் கூடாதா?

அப்பொழுது அவள் சிரித்துக் கொண்டிருக்க காரணமான பள்ளியில் இவள் வகுப்பு குழந்தை செய்த குறும்பை சொல்லி சிரித்தாள். அன்று தொடங்கிய பழக்கம் மெல்ல மெல்ல வசீகரனுடன் இயல்பாக பேசத் தொடங்கி இருந்தாள் மலர்விழி.

பள்ளியில் பிள்ளைகள் அடிக்கும் லூட்டியை கண்டிப்பாக மாலையில் அவனிடம் வந்து ஒப்பித்துவிடுவாள். அவனும் அன்று காலை முதல் மாலை வரை நடந்த அனைத்தையும் அவளிடம் வந்து கதை சொல்வான்.

அழகிய நட்பு ஒன்று அவர்களுக்குள் பின்னப்பட்டுக் கொண்டிருந்தது அவர்கள் அறியாமலே. எது எப்படியாயினும் மாலை சிற்றுண்டிக்கு பறந்து வீடு வந்துவிடுவான் வசீகரன். அது அவர்கள் பொழுது.

ன்றும் காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தாள் மலர்விழி. அவள் வகுப்பு குழந்தை ஒன்று அவளது நான்காம் வகுப்பு படிக்கும் அக்காவுடன் சாலையின் எதிர்புறத்தில் இருந்து வந்து கொண்டிருந்தது. இவளைக் கண்டதும் உணர்ச்சி வசப்பட்டு இவளை நோக்கி ஒடி வர தொடங்க, எதிரில் வந்த லாரியிலிருந்து அக் குழந்தையை காக்க இவள் முயன்றதில் குழந்தை தப்பிக்க இவளுக்குத்தான் கீழே விழுந்த வேகத்தில் காயம்.

அருகிலிருந்தவர்களில் யாரோ இவளை ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து எனும் போது அதுதான் சரியான வழிமுறை என.

மரண காயம் என்று எதுவும் இல்லை. கையில் எலும்பு முறிவு இருக்கலாம் என பரிசோதித்துக் கொண்டிருந்தார் மருத்துவர் ஒருவர். சூழ நின்றது ஒரு கூட்ட மாணவர் படை. மெடிகல் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்.

மலர்விழி நொந்து போய் இருந்தாள். கை வலியோடு இப்படி ஆராய்ச்சிப் பொருளாகவும் இருப்பதென்றால்? அப்பொழுது இவள் படுக்கைக்கு பின்புறம் கதவு திறக்கப்படும் சத்தம். யாராவது வந்து தன்னை காப்பாத்திவிட மாட்டார்களா என்ற ஏக்கத்தில் சத்தம் வந்த திசையை திரும்பிப் பார்த்தாள் இவள்.

அங்கு உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு பின்பு உள்ளே நுழைந்தான் அவன். இவளை புகைபடமாய் வந்து வசியம் செய்த வசியக்காரன். மருத்துவர் கோர்ட் அணிந்து ஸ்டெத்துடன் உள்ளே வந்து கொண்டிருந்தான் அவன்.

 தன் சர்வமும் அடங்க அவனை அதிர்ந்து போய் பார்த்திருந்தாள் மலர்விழி. இது கனவா?

அவன் வரவும் கூட்டத்தில் குறிப்பாக மாணவிகளிடம் ஒரு சலசலப்பு.

“என்ன ஆன்ட்ரூ இந்த பக்கம் ? “என்றார் இவளைப் பாடப் பொருளாக்கி இருந்த மருத்துவர் அவனை நோக்கி.

ஆன்ட்ரூவா இவனது பெயர்? டாக்டரா இவன்? மலைத்துப் போயிருந்தாள் மலர்விழி.

தொடரும்

Episode # 07

Episode # 09

{kunena_discuss:876}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.