(Reading time: 13 - 26 minutes)

திக்கென்றது ரேயாவுக்கு…..இவனுடன் இரவில் தனியாகவா….? எது எப்படியானாலும் இது அப்பாவால் நிச்சயம் ஒத்துக் கொள்ள முடியாத விஷயம்.

“ஐயோ நீங்க மெதுவா….பார்த்து…முதல்ல உட்காருங்க…”

சிமியின் கைபிடித்து உட்கார வைக்க முயன்றாள் ரேயா.

“வீட்டுக்கு வந்தவளுக்கு சாப்பாடு போட மாட்டேன்னு சொல்ல இப்டி ஒரு டெக்னிக்கா..?” சிரிப்புடன் என்றாலும் ஆதிக்கும் மறுத்தான்.

“ப்ச்…உன்ட்ட போய் சொன்னேன் பாரு…. எனக்கு தெரியும் ரேயா பெர்த் டேவை எப்டி செலிப்ரேட் செய்யனும்னு……” அவனிடம் முறைத்தவள்  

“நீங்க வாங்க ரேயா…..சாப்ட கூப்ட தான் வந்தேன்…ரொம்பவே லேட் ஆகிட்டு….” சொல்லியபடி இவளை கூட்டிக் கொண்டு டைனிங் ஹாலை நோக்கிப் போனாள். .

“ஏய் உமி அவ வந்தவுடனே என்னை விட்டுட்ட பாரு…எனக்கும் தான் பசிக்குது….” அவனும் எழுந்து வந்தாள்.

“போடா என்னை அப்டி சொல்லாதன்னு எவ்ளவு தடவை சொல்லிருக்கேன்…” சிணுங்கினாள் சிமி.

“ஹான்…மறந்துட்டேன் ரேயு….நீ தெரிஞ்சிக்க வேண்டிய முக்கியமான விஷயத்துல ஒன்னு…இவளோட பேரு உமி…அதை எத்தனை தடவை சொல்ல முடியுமோ அத்தனை தடவை சொல்லனும்…” இப்பொழுது தன் அண்ணனை முறைத்தாள் தங்கை…

“நான் அப்டில்லாம் சொல்ல மாட்டேன்….”

“அப்டி சொல்லுங்க ரேயா…நாம ஒரே டீம்” ஹைஃபை கொடுத்தாள் சிமி.

“இருந்துட்டுப் போங்க…..எனக்கு பசிக்குது….” போய் சாப்பாட்டு மேஜை நாற்காலியில் அமர்ந்தவன் அங்கிருந்த பாத்திரங்களை திறந்து பார்த்து தனக்கு தானே பரிமாறவும் தொடங்கினான்.

கோபம் வந்துவிட்டதா என்ன அவனுக்கு? ரேயாவுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. விளையாட்டுக்கு கூட அவனை விட்டு கொடுக்க கூடாதோ….இப்ப என்ன செய்ய? மெல்ல அவனுக்கு அடுத்த நாற்காலியில் அமர்ந்தாள். அவன் இவளை கண்டு கொள்ளவே இல்லை.

சிமி இவளுக்கு பரிமாறியவள் “ கொஞ்சம் நீங்களே பார்த்துகோங்க…..இதோ வர்றேன்…” என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

“சாரி…”

அவன் பதிலே சொல்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். இவளுக்கு சாப்பாடு உள்ளே இறங்க மறுத்தது. கிளறிக் கொண்டே இருந்தாள்.

“ஏன்….என் பக்கத்தில இருந்தா சாப்டவும் பிடிக்காதோ…”

அவசர அவசரமாக அள்ளி சாப்பிட்டாள். இடையில் அவன் மொபைல் சிணுங்க அதைப் பார்த்துவிட்டு இணைப்பை ஏற்றான்.

“ம்”

“ம்”

அவன் கோபம் இன்னும் குறையவில்லை. இணைப்பை துண்டித்திருந்தான்.

சாப்பாடு முடியவும் “ம்…எனக்கு ஹெல்ப் கேட்டேன்…அதெல்லாம் யார் செய்யப் போறா…?” முனங்கிக் கொண்டே வெளி நோக்கி நடந்தான். அவசர அவசரமாக அவனுக்கு ஈடு கொடுத்து ஓடினாள்.

“என்ன செய்யனும் ஆதிக்? நான் மாட்டேன்னு சொல்லவே இல்லையே….”

போய் தனது கார் கதவை திறந்து ஏறினான். அடுத்த பக்க கதவை திறந்து கொண்டு எதையும் யோசிக்காமல் ஏறினாள் ரேயா. கார் சீறிக் கொண்டு வீட்டு கேட்டைத் தாண்டி பறந்தது. வாய்விட்டு சிரித்தான் ஆதிக். அவன் கூப்பிட்டு இருந்தால் கூட மறுத்திருப்பாள் ரேயா, இப்பொழுதோ அவன் வாய் திறந்து கேட்காமலே அவனுடன் இத்தனை மணிக்கு….இதுக்குத்தானா?  கள்ளா முறைக்க முயன்றவளால் அதை சிரிப்பாக்கத்தான் முடிந்தது.

“இவ்ளவு சென்சிடிவா ரேயு நீ….? நான் கோபமா இருந்தா நீ ஏன் இவ்ளவு டிஸ்டர்ப் ஆகுற…?” மென்மையாய் பார்த்தாலும் ஆழ இறங்கியது அப்பார்வை அப்பாவையுள்.

வந்த வெட்க சிணுக்கம் மறைக்க வெளிப்பக்கம் திரும்பிக் கொண்டாள் ரேயா.

“என்ன பதிலைக் காணோம்…?”

“தெரியலை….ஆனா அப்டித்தான்….”

சின்னதாய் சிரித்தான். “எங்க போறோம்னு கேட்க மாட்டியா?”

“எங்க போறோம்?”

“ஒரு சின்ன ஷாப்பிங்…பைதவே…உனக்கு எதுவும் நான் வாங்கித் தரபோறதா கற்பனை செய்யாதே….அப்டில்லாம் செய்யமாட்டேன்..”

சிரித்து வைத்தாள். அவன் கொடுத்தால் மட்டும் வாங்க முடியுமா என்ன? முதலில் காரை அவன் நிறுத்திய இடம் ஒரு மொபைல் ஷாப். ஓ இவள் மொபைல் உடைந்துவிட்டதல்லவா. அவளுடன் உள்ளே வந்து தேர்ந்தெடுப்பதில் உதவினான்தான். பில் இவள் செலுத்துவதை  அவன் தடுக்க முனையவில்லை. அடுத்து அவளை அவன் கூட்டி போன இடம் ஒரு ஜுவல்ரி ஷாப்.

“இங்க எதுக்கு ஆதிக்…?”

மொபைல் ஓகே…..நகை வாங்கச் சொன்னால் இவள் அவ்வளவு பணத்திற்கு எங்கே போவாள்??

1990 ஆம் வருடம்

மலர்விழி பியூலா வீட்டை அடைந்த போது அங்கு தரைத் தளம்  பூட்டிக் கிடந்தது. மாடிக்கு செல்லும் படிகள் முற்றத்திலிருந்தே தொடங்க அதன் முடிவில் தெரிந்த திறந்த கதவின் வழியாக சத்தம்.

மாடியில் இருக்கிறார்களோ? கூப்பிட்டுப் பார்த்தாள். “பியூலா….பியூலா…”

எந்த பதிலும் இல்லை. சில படிகள் மேலேறிப் போனாள். சத்தம் வருவது டீவியில் இருந்து என புரிந்தது. ஆக வீட்டின் உள்ளே சென்று கூப்பிடாமல் காது கேட்க போவதில்லை. மேலேறி வாசலில் நுழைந்தாள். ஹாலில் யாருமில்லை. ஆனால் உள்ளே பேச்சு குரல். தெளிவாக புரிந்தது அது யார் குரல் என. அதி. அதி இங்கு என்ன செய்கிறான்? திரும்பிப் போகலாம் என எண்ணும் போதே அவன் சொல்லிய அடுத்த விஷயம் காதில் விழுகிறது….தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறான் போலும்.

“நம்ம கொஞ்சம் முன்னால பிறந்திருக்கலாம் பியூ….ஒன்னும் கன்டிஷன் போடாம கல்யாணம் செய்து வச்சிருப்பாங்க….இப்ப பாரு படிச்சு முடிச்சாதான்னு சொல்லி இப்டி பிரிச்சு வச்சுருக்காங்க…..”

“………………………..”

“ஏன் சொல்ல மாட்ட…? இப்ப பாரு இப்படி உன்னை தனியா அனுப்பிட்டு நான் இங்க உட்காந்து டென்ஷனாகிட்டு இருக்க வேண்டி இருக்குது…அதுனா இப்டி விடுவனா நான் உன்னை…. எத்தனை தடவை சொல்றேன்….இது ரிஸ்க்குனு…..நீ பாட்டுக்கு போய்ருக்க…”

“………………………”

“எத்தனை பெரிய விஷயம்னாலும் பிரவாயில்லை….எதுவும் எனக்கு உன் உயிரைவிட முக்கியம் இல்லை….ஐ லவ் யூ பியூ….ப்ளீஃஸ் இது மாதிரிலாம் ரிஃஸ்க் எடுக்காத….சரி கிளம்பிட்டியா…”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.