(Reading time: 34 - 68 minutes)

தற்குள் ராஜ்குமார் சுயநினவுக்குத் திரும்பி இருந்தார், மற்றும் தம்பி ஆல்வினுடன் வந்திருக்கும் அந்த இளைஞன் தான் ஷாலுவுக்காக பேசிய மாப்பிள்ளை என்பதும் அவருக்கு புரிந்து போனது. “பாம்பேல இருக்ற என் மச்சான் ஜெயராஜோட மகன் சரன்…” என அறிமுக படுத்தி வைத்தாரே தம்பி ஆல்வின்.

சரன் இத்தனை தூரம் தனக்காக வந்திருப்பதிலேயே ஷாலுவுடன் அவனுக்குப் பெரிய ப்ரச்சனை எதுவும் இல்லை என்பது அவருக்கு விளங்கிற்று. மகள் சொன்ன அவனை நம்பி பழகினேன் வார்த்தையில் மும்பை சென்று வந்தது தன் மகளாகத்தான் இருக்கும் என்பதும் கூட இப்பொழுது அவருக்குப் புரிகிறது. மனதிற்குள் ஏதோ ஒரு நம்பிக்கை பெரிய மகள் வாழ்வு தான் நினைத்த அளவு சீரழிந்துவிடவில்லை என. அவர் உடல் நிலையில் முன்னேற்றம். ஆனாலும் அவர் உடனடியாக ஒரு முடிவுக்கு வர விரும்பவில்லை. பையனுக்கும் பொண்ணுக்கு இடையில் நடந்த ப்ரச்சனை அசட்டை செய்யக் கூடிய அளவு சின்னதா இல்லை பெரிதா என தெரியாமல் எப்படி முடிவு செய்வதாம்? மற்றபடி இந்த திருமணத்தில் இப்பொழுது இவர் புறம் வேறு எந்த எதிர்ப்பும் இல்லை. மகள் விரும்பினால் பூரண சம்மதமே… 

முதலில் நடந்த களேபரத்தில் டேவிட் ஆதிக்கிடம் எதுவும் சொல்லவில்லை. ஆதிக்கும் இவரை அந்நேரம் வரை அழைக்கவுமில்லை. பின்பு ராஜ்குமார் ஐ சியூவிற்கு கொண்டு செல்லப்பட்ட பிறகு இவர்கள் செய்ய இனி எதுவும் இல்லை என்றான பின்பு தன் மகனின் அழைப்பை ஏற்றார் டேவிட். அவனும் விழா வீட்டில் இவர்கள் இருப்பதாக நினைத்துக் கொண்டுதான் பேசினான்.

“பங்க்ஷன் நல்லபடியா முடிஞ்சுதா….? இவ்ளவு நேரம் ஆகிட்டு…?அங்கயும் யாரும் போன் அட்டென் செய்ய மாட்டேன்றாங்க….நீங்களும் அட்டென் செய்யலை….அம்மாட்ட கொஞ்சம் ஃபோன குடுங்களேன்…” எனக் கேட்டான் அவன்.

மகனை நினைத்து மிக வருத்தமாக இருந்தது டேவிட்டிற்கு. தனக்கு வரப் போகிறவள் என ஆசையை வளர்த்து வைத்திருக்கிறான்….ஆனால் இவன் அழைப்பது கூட அவர்களுக்கு இந்நேரம் தொந்தரவாக தெரியுமே… தன் பையன் தைரியசாலிதான்…இந்த ஏமாற்றத்தை தாங்கி தாண்டி வருவான்தான்….ஆனால் இந்நேரம் விஷயம் தெரிந்ததும் எப்படியும் கடுமையா வலிக்கும் அவனுக்கு….தான் விரும்புகிறவள் இன்னொருவனை விரும்புகிறாள் என தெரியும் போது எத்தனை கஷ்டமாக இருக்கும். அதோடு தெளிவாய் தெரியாமல் நாம் செய்த குழப்பத்தில் ராஜ்குமார் இப்பொழுது இப்படி ஒரு நிலையில் இருக்கிறான் என தெரியவந்தால் ஆதிக் உடனடியாக இங்கு கிளம்பி ஓடி வந்து விடுவான்.

ஆனால் ஆதிக்கைப் பார்க்கும் போது ராஜ்குமாருக்கும் அவன் பிள்ளைகளுக்கும் வேதனை தானே வரும்? ஆனால் இப்பொழுதோ இந்த சரன் இங்கு நின்று பொறுப்பாய் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டால் மனது உடைந்து கிடக்கும் ராஜ்குமார் குடும்பத்திற்கு ஆறுதலாகவும் நம்பிக்கையுமாகவும் இருக்கும். ஆக சரன் இங்கிருக்கட்டும். அவனோடு வந்து ஆதிக்கும் நின்றால் சரன் ஆதிக் இருவருக்கும் மிக கஷ்டமாக இருக்கும்…. அதோடு ராஜ்குமார் பார்வையில் மட்டுமல்ல மனதிலும் சரன் நல்லவிதமாய் பதிய வேண்டும்.  ஆக ஆதிக்கிற்கு உண்மையும் தெரிய வேண்டும் ஆனால் அவன் இங்கு வரவும் கூடாது என எண்ணினார் டேவிட்.

“தம்பி கொஞ்சம் மனச தேத்திக்கோ….” அவர் ஆரம்பித்த விதத்திலேயே விஷயம் விளங்கிவிட்டது மகனிற்கு. இனி காரணம் தான் தெரிய வேண்டும். ஆனால் ஏன்???

“ராஜ்குமார் பொண்ணு வேற ஒரு பையன விரும்புறாபோல…அது தெரியாம ராஜாவும் நம்ம வரச் சொல்லிட்டான், நாமளும் வந்துட்டோம்…..நாம வரதே பொண்ணுக்கு இப்ப தான் தெரியும் போல ரொம்ப பயந்து அழுது…..”

அவரைப் பேசவிடவில்லை அவன். “இல்லப்பா இருக்காதுப்பா இதுல கண்டிப்பா எதோ மிஸ் அன்டர்ஸ்டாண்டிங் இல்லனா கம்யூனிகேஷன் கேப் இருக்கனும்பா…..” மகன் மனம் எளிதாக ஏமாற்றத்தை ஏற்க தயாராக இல்லை எனப் புரிகிறது தந்தைக்கு.

“இல்ல ஆதி….ஃபங்க்ஷன்ல எல்லோர் முன்னாலயும் வந்து நின்னு பொண்ணு அழுது கொஞ்சம் ப்ரச்சனை ஆகிட்டுப்பா…புரிஞ்சுக்கோ நீ ….”

“நான் இப்பவே அங்க வர்றேன் பா…எதுனாலும் நேர்ல பேசிக்கலாம்…”

“இல்ல ஆதி….அவ விரும்புற பையனும் விஷயம் தெரிஞ்சு இங்க வந்தாச்சு….அந்த பையன் கூட கல்யாணம் நிச்சயம் ஆன மாதிரிதான்….சீக்ரம் கல்யாணம் இருக்கும்…..இதுல நீ இங்க வந்து நிக்றது நல்லா இருக்காது….அதோட கிராமம் பாரு….நீயும் வந்து பொண்ணு என்ன விரும்புனான்னு எதாவது சொல்லிட்டன்னா ரெண்டு பையன விரும்புன பொண்ணுனு கன்னா பின்னானு பேசிடுவாங்க ஊர்ல….ரொம்ப ப்ரச்சனையாகிடும்பா…..நம்மளால அந்த பொண்ணு இப்டில்லாம் கஷ்டப் படனுமா நீயே சொல்லேன்…”

“அப்பா…”  அவன் உலகின் அஸ்திவாரம் ஆடிப் போய் இருந்தது அந்த குரலில் தெளிவாக தெரிந்தது.

“கண்டிப்பா பேசியே ஆகனும்னு தோணிச்சுன்னா பொண்ணுட்ட ஃபோன்ல வேணா பேசப் பாரு,,,” அத்தனை ஆர்ப்பாட்டம் செய்தவள் மகனை இங்கு வர அனுமதிக்கும்படியாய் எதையும் பேச மாட்டாள் மேலும் சம்பந்தப்பட்டவரிடம் நீ பேசவே கூடாது என சொல்லவும் அவருக்கு மனம் ஒப்பவில்லை.

அடுத்து ராஜ்குமாரும் ஆபத்து நிலையை கடந்துவிட்டார் என செய்தி வர, அப்போது அங்கு வந்திருந்த ரேயாவிடம் மட்டும் சொல்லிவிட்டு விடை பெற்றனர் ஆதிக்கின் பெற்றோர்.

ராஜ்குமாரைப் பார்க்கச் சென்ற சரித்ரனால் அவருடன் எதையும் பேசெல்லாம் முடியவில்லை. பேசும் சூழலும் அது இல்லை. ஆனால் அவன் அந்த சூழலின் மொத்தப் பொறுப்பையும் கையில் எடுத்துக் கொண்டான். ஷாலுவின் வீடு இருந்த தென் கொட்டையிலிருந்து மருத்துவமனை இருந்த திருநெல்வேலியை அடைய கார் பயணமே ஒரு மணி நேரத்திற்கு மேல் தேவைப் பட்டது. ஆக சரித்ரன் மருத்துவமனையில் தங்க ரேயா வீட்டிற்கும் மருத்துவமனைக்குமாக அலைந்து கொண்டிருந்தாள். சித்தப்பாக்கள் வந்து பொறுப்பெடுக்கவும் மாமாக்கள் அவ்வப் பொழுது வந்து போகுமளவு விலகிக் கொண்டனர். காரணம் மருத்துவமனையில் நிறைய பேர் தங்கி இருக்க முடியாது என்பதால். அடுத்து ராஜ்குமார் உடல் நிலை ஸ்டெபிலைஸ் ஆகவும் சித்தப்பாக்களும் விடை பெற ஆல்வின் சித்தப்பாவும் சரித்ரனும் மட்டுமாக அங்கு இருந்தனர்.

ஆனால் முதலில் ரேயா அங்கு யாரெல்லாம் இவள் வீட்டார் தங்கி இருக்கின்றனர் என்பதை கூட கவனிக்கும் மனநிலையில் இல்லை. அவள் தந்தையைப் பார்க்க அனுமதி கிடைக்கும் நேரமெல்லாம் அவர் மனதில் அவர் ஒரு நல்ல அப்பா, அவளுக்கும் ஷாலுவுக்கும் அவர் அதி முக்கியமானவர் எனபதை பதியவைப்பதிலேயே குறியாக இருந்தாள். உண்மையில் அது ராஜ்குமாருக்கு மிகவும் தேவைப் பட்ட மற்றொரு விஷயம். பிள்ளைகளுக்கே தான் தேவை இல்லை என்றாகிவிட்ட பின் ஒரு வித தோல்வி மனம் அவரை துவட்டி எடுத்துக் கொண்டிருந்தது. ரேயாவின் வார்த்தைகள் அவர் காயத்தில் மயில் பீலி வருடல். தாய்மடியை சில சமயம் மகள் வார்த்தைகளில்  உணர்ந்தார் தாயற்று வளந்திருந்த ராஜ்குமார்.

அதோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறு நாளே மகளை தன் அலுவலக்த்திற்கு வேறு சென்று வரச்சொன்னார். சில கமிட்டட் கன்டெய்னர்ஃஸ் அன்றைய ஷிப்பில் லோடாக வேண்டி இருந்தது. எளிதில் அழுகிவிடும் காய்கறிகள் மற்றும் சில மீன் வகைகள் அன்றே லோட் ஆக வேண்டி இருந்தது. அன்றைய தேதியில் அவைகள் செல்லவில்லை எனில் அதை இவர்களை நம்பி அனுப்புபவர்கள்  பலத்த நஷ்டமடைய நேரிடும்…..அதில் சொதப்ப அவர் விரும்பவில்லை. தொழில் என்பதைவிடவும் அப்பாவின் விருப்பம் மதிக்கப் படுகிறது என காண்பிக்கவும், அதோடு எதிர்காலத்தைப் பற்றி அவர் பயப்பட தேவையில்லை, இவள் சமாளித்துவிடுவாள் என அவரை உணரவைக்கவும் ரேயா அன்று மட்டுமில்லை அதன் பின் அப்பா சொன்னார் என்பதற்காக ஒவ்வொரு நாளூமே அலுவலகத்திற்கும் அலைந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.