(Reading time: 15 - 29 minutes)

07. நேசம் நிறம் மாறுமா - தேவி

கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங் கேலி பொறுத் திடுவான்; -- எனை

ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும் ஆறுதல் செய்திடுவான்; -- என்றன்

நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று நான்சொல்லு முன்னுணர் வான்; அன்பர்

கூட்டத்தி லேயிந்தக் கண்ணனைப் போலன்பு கொண்டவர் வேறுள ரோ?

- பாரதியார் 

Nesam niram maaruma

வெண்மதி  பிரகாஷ் பெயரை சொன்னவுடன்  ஆதி சற்று திகைத்தாலும் , அவன் ஏற்கனவே தன்னை சந்திக்க விரும்பியதை வைத்து இதுதான் விஷயமா என்று எண்ணினான்.

அவன் யோசனையை சற்று நேரம் கலைக்காமல் இருந்தவள், பிறகு அவனுக்கு தேவையான மருந்தை எடுத்து கொடுத்தாள்.

மருந்தை சாப்பிட்டு விட்டு “மதி .. அதிதி பிரகாஷை பற்றி என்ன சொன்னாள்? அவளுக்கு அவரை பிடித்திருக்கிறதா?” என்றான்.

“அவளுக்கு பிடித்திருக்கு.”

“அப்படியென்றால் அவரை உடனே வந்து பெண் கேட்க சொல்லலாம்.”

“முதலில் நாளைக்கு காலையில் அத்தை, மாமா , சூர்யாவிடம் சொல்லி அவர்கள் விருப்பம் கேட்டு விட்டு அவரை வர சொல்லலாம்.”

அதுவும் சரிதான். அவரை வர சொல்லுமுன் தெளிவாக இன்னொரு முறை அதிதியிடமும் பேசி விடலாம்.

சரி. இப்போ தூங்கலாமா?

ஹ்ம்ம். தேங்க்ஸ் மதி. அதிதிக்கு ஏதோ பிரச்சினை என்று புரிந்தது. இப்படி என்று நினைக்கவில்லை. நீ பேசியதால்தான் தெரிந்தது. குட் நைட் என்றான்.

அவளும் குட் நைட் என்றுவிட்டு படுத்தாள். ஆனால் மதியின் மனதில் அதிதி விஷயம் சரியாகி விட்டாலும் வேறு சில விஷயங்கள் தெளிவு படுத்த வேண்டும் என்று நினைத்தாள். அதன் முதல் படியாக மறுநாள் அத்தையிடம் பேசலாம் என்று எண்ணினாள்.

மறுநாள் பொழுது விடிந்தது. காலையில் அவரவர் வேலையை முடித்துக் கொண்டிருந்தனர். சூர்யாவின் மனதில் அன்று வாணி வேலையில் சேரும் நாள் என்று ஒரு ரகசிய சிரிப்பு மலர்ந்தது.

அதிதியும், மதியும் காலையே வாணியை வாழ்த்தினர். என்றும் போல் மதி சமையல் அறையில் இருந்தாள். அவளுக்கு சின்ன சின்ன உதவி செய்தபடி அவள் அத்தையும் அங்கே இருந்தார்.

அப்போது அதி வந்து “அம்மா, எனக்கு கொஞ்சம் ஹெல்ப் செய்யுங்கள். “ என்று அழைத்து போனாள். மதிக்கு புரிந்தது. தான் சொன்னதை அதிதி யோசித்திருக்கிறாள் என்று. மகிழ்ச்சியாக இருந்தது.

அவள் “அத்தை நீங்கள் போங்கள். இங்கு நான் பார்த்து கொள்கிறேன்.” என்று அனுப்பி வைத்தாள்.

அதிதியோடு சென்றவள் “என்னம்மா ?” என்றார்.

“அம்மா, இன்னிக்கு ஒரு மீட்டிங் இருக்கிறது. அதற்கு ஒரு நல்ல டிரஸ் செலக்ட் செய்து தாருங்கள்.”

நானா?

ஆமாம். அது முக்கியமான மீட்டிங். மேலும் எனக்கு எதை பார்த்தாலும் பிடிக்கவில்லை. அதனால் தான் நீங்கள் சொல்லுங்கள்.

அவர் அவள் ஷெல்பை அலசி பார்த்து விட்டு “இந்த சில்க் காட்டன் புடவை கட்டிக்கோ. “

அதிதி யோசித்தாள். அவள் பொதுவாக புடவை கட்டுவதில்லை. அவள் அத்தைக்கு பிடிக்காது. புடவை கட்டினால் ரொம்ப ஒல்லியாக இருக்கிறாய். அதனால் சுடிதார் போடு என்பார்.

“அம்மா .. புடவை கட்டினால் எனக்கு நன்றாக இருக்குமா?”

“நன்றாக இருக்கும்டா. நீ ஒல்லிதான். ஆனால் காட்டன் சாரி கட்டினால் உன்னை கம்பீரம்பகவும் அதே சமயம் அழகாகவும் காட்டும்.” என்றார்.

முதலில் யோசித்தாலும் பிறகு “அம்மா நீங்களே கட்டி விடுங்கள்” என்றாள். ஜானகி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். கிட்டத்தட்ட தன மகளுக்கு பதினைந்து வருடங்கள் கழித்து தன் கையால் டிரஸ் பண்ணி விட்டார்.

புடவை கட்டி விட்டு, தலையை தளர பின்னலிட்டு விட்டாள். முகத்திற்கு அவளையே மேக்கப் செய்து கொள்ள சொன்னாள். அவளும் அதிகமாக எதுவும் செய்யாமல் அழகாக மை இட்டு , பொட்டு வைத்து கொண்டாள்.

அவளை பார்த்த ஜானகிக்கு தன் மகளின் அழகை எண்ணி பெருமிதத்தோடு கைகளால் நெட்டி முறித்தாள்.

ஏற்கனவே ஆதியின் சொல்படி எல்லாரையும் ஆதியின் அறைக்கு அழைத்து வந்த மதி, அதிதியை பார்த்து,

“வாவ். ரொம்ப அழகா இருக்க அதி. அத்தை செலெக்ஷன் சூப்பர்.” என்றாள்.

அழகாக வெட்கபட்ட அதிதி “சும்மா கிண்டல் செய்யாதீர்கள் அண்ணி”

பிறகு “அத்தை, உங்களையும் அதிதியையும் அவர் அறைக்கு அழைத்தார். வாருங்கள்” என்றாள்.

அங்கே ஏற்கனவே இருந்த சூர்யா, ஆதி, அவள் அப்பா மூவரும் அதிதியின் அழகை பார்த்து அசந்து போயினர். அவர்கள் முகங்களை பார்த்து அதிதி வெட்கத்துடன் தலை கவிழ்ந்தாள்.

ராகவன் “என் பொண்ணா இது? தேவதை போல் இருக்கிறாய்டா.”

ஆதியும் “நன்றாக இருக்கிறது அதிதிமா. “ என்றான்

சூர்யா “அப்பா, அதிதி என்ற வாலை காணவில்லை”

அதிதி அவனை அடித்து விட்டு “அம்மா செலெக்ஷன் அண்ணா. நன்றாக இருக்கிறதல்லவா?” என்றாள்.

சூர்யாவும், ஆதியும் ஒருவரைஒருவர் பார்த்து கொண்டு தன் அம்மாவை நோக்கி சூர்யா “நல்ல ரசனை அம்மா உங்களுக்கு. “ என்றான்.

“அம்மா. நான் பேசப் போகும் விஷயத்திற்கு ஏற்றார் போல் இருக்கிறதம்மா. அப்பா , அம்மா, சூர்யா .. நம் அதிதிக்கு வயது 23 ஆகி விட்டது. அவளுக்கு திருமணத்திற்கு பார்க்கலாமா?” என்றான்.

அதிதி திடுக்கிட்டு மதியை பார்த்தாள். அவள் சிரிக்கவும், தன் அண்ணனை பார்த்தாள். இந்த பார்வை பரிமாற்றத்தை ஜானகி பார்த்தார்.

ராகவன் “பார்க்கலாம்பா. “ என்றார்.

சூர்யா “என்ன அண்ணா. யாரையாவது யோசித்திருக்கீரிர்களா?”என்றான்

ஆதி தன் அம்மாவை பார்த்து “நீங்கள் ஒன்றும் சொல்லவில்லயே என்றான்.

“அதியின் விருப்பம் கேட்டு கொள்ளப்பா “ என்றார்.

“சூர்யா, உன் பிரெண்ட் பிரகாஷ் பத்து நாட்கள் முன்னால், என்னிடம் பேச வேண்டும் என்றான்.  நீ அவனிடம் பேசி வீட்டிற்கு வர சொல்.” என்றான்.

சூர்யாவிற்கு புரிவது போல் இருந்தது. அவனும் உடனே சரி அண்ணா என்றான்.

ஆனால் நீ இப்போது பேசாதே . மாலையில் பேசு. என்றான் ஆதி.

ஏன் அண்ணா?

சொல்ல வேண்டியவர்கள் முதலில் சொல்லட்டும்

அதிதி திடுக்கிட்டு “அண்ணா” என்றாள்.

ஆதி சிரித்து கொண்டே “அப்பா, பிரகாஷ் நம் அதியிடம் தன்னை  திருமணம் செய்து கொள்ள சம்மதம் கேட்டிருக்கிறார். அதிதி நம்மிடம் பேச சொல்லிருக்கிறாள்.. அதற்குள் எனக்கு விபத்து நடக்கவே அவள் இப்போ வர வேண்டாம் என்று மறுத்திருக்கிறாள். ஆனால் அவர் பாரேன்ட்ஸ் அவர் திருமணத்திற்கு கொஞ்சம் அவசரப்படுவதால், பிரகாஷ் அதியிடம் மீண்டும் கேட்டிருக்கிறார். அது எனக்கு நேற்றுதான் தெரியும். சரி அவரை காக்க வைக்க வேண்டாம் என்று வர சொல்லலாம் என்றுதான் உங்களை கேட்டேன்”  என்று முடித்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.