(Reading time: 13 - 25 minutes)

06. வசந்த பைரவி - ஸ்ரீலக்ஷ்மி

மாலை எட்டு மணியளவில் வீட்டை அடைந்தான் வசந்த் . வாசலில் கேட்டை திறக்கும் பொழுதே வீட்டுக்குள் இருந்து ஒரே கத்தலும், கூச்சலும்..

என்ன சத்தம்.. யார் வந்திருக்கிறார்கள்?.. ஒரு வேளை மாடி வீட்டு மனோகர் மறுபடியும் ஏதாவது தகறாறு பண்ணுகிறானா?..

அது அவர்கள் வீட்டில் வழக்கமே.. மாடி போர்ஷனில் ஐந்து வருடமாக குடியிருக்கும் மனோகர், அடிக்கடி ராமமூர்த்தியிடம் ஏதாவது ஒரு அல்ப காரணத்துக்காக தகராறு செய்து கொண்டே இருப்பவன்.. குழாயில் சரியாக தண்ணீர் வரவில்லை.. மழை பெய்தால், வீடு ஆங்காங்கே ஒழுகுகிறது..கிச்சன் சிங்க் அடைத்து கொண்டிருக்கிறது, இப்படி சண்டையிட ஏதாவது ஒரு காரணம் அவனுக்கிருக்கும். சில சமயம் கோபத்தில் ராமமூர்த்தி வீட்டை, காலி செய்து கொண்டு போ என்றால் மாத்திரம், வாயை டக்கென்று மூடிக் கொள்வான்.

vasantha bairavi

"என்ன சார் பண்றது.. வீடுன்னா இதெல்லாம் சகஜம் தான்..கார்பரேஷங்காரன் தண்ணீர் ஒழுங்கா திறந்து விட்டாதானே , குழாயில் தண்ணீர் வரும்.. நீங்க என்ன பண்ண முடியும்?.. இந்த வெயில் காலத்திலே மோட்டார் போட்டா மட்டும் தண்ணீ ஏறுதா என்ன?.. மழை பொய்த்து போச்சு.. எப்பவோ ஒரு வாட்டி ஜோன்னு கொட்டறது.. இரண்டு தூறல் வீட்டுக்குள்ள விழுந்தாதான் என்ன..இங்க பாரும் ஓய்.. நான் என் பெண்டாட்டிகிட்ட எவ்வளவு வாட்டி சொன்னாலும், குப்பை தொட்டியில் சமைக்கற மிச்சத்தை மீதியை போடாமல் அப்படியே கழுவ போட்டா பாத்திரம் தேய்க்கும் பொழுது சிங்க் அடைச்சிக்காம என்ன பண்ணுமாம்?" அப்படியே பல்டி அடிப்பார்.

'இல்லையா பின்னே, ஐந்தாயிரம் ரூபாய் வாடகையில் மாம்பலம் மாதிரி மெயின் ஏரியாவிலே இரண்டு பெட் ரூம் வீடு அவ்வளவு சுலபமா கிடைக்குமா என்ன?'

'இந்த மனுஷன் சீக்கிரமா காலி செய்து போனா வேறு யாரையாவது குடுத்தனம் வைக்கலாம்.. அம்மா ஏதோ அந்தாத்து மாமியோட நல்ல மனசுக்காகதான் பார்த்துண்டு இருக்கா' என்று நினைத்தபடி உள்ளே நுழைந்த வசந்த்தை கத்தியபடி வரவேற்றனர் சிந்துவும், சியாமும்..... வசந்தின் பெரிய தமக்கை ரஞ்சனியின் அருமந்தன்ன புத்திர செல்வங்கள்.

'ஓ .. மாடி வீட்டுக்காரன் சத்தம் இல்லையா?.. இதுங்க எப்ப வந்தது?'

"வசந்த் மாமா, இந்த சிந்துவை பாரு.. மஹி சித்தி எனக்காக வாங்கி தந்த பஸில் கேம்மை தரமாட்டாளாம்.. அது அவளுக்கு வேணுமாம்" என்ற சியாம் என்கிற பத்து வயது சியாம் சுந்தர்.

"மாமா, ஏன் மாமா, நான் பொண்ணாம், எனக்கு புத்தி கம்மியாம்.. பஸில் கேம்ஸ் விளையாட புத்தி கிடையாதாம்.. பொண் பசங்க சொப்பு சாமான் வைச்சுண்டு தான் விளையாடனமாம்.. ஏன் மாமா இவனை விட நான் தான் எப்பவும் கிளாஸ்லை பர்ஸ்ட் வரேன்.. இவன் போன வாட்டி கூட கணக்கு பரீட்சையிலே ஃபெயில் ஆனான்.. இந்த ஹாப் இயர்லி எக்ஸாம்லே கூட எனக்கு தெரிஞ்சு எல்லாம் தப்பு தப்பாதான் போட்டிருக்கான்.. அம்மா அவனை திட்டிண்டே இருந்தா" தன் பங்குக்கு சிந்து என்கிற ஒன்பது வயது சிந்துஜா சொல்ல,

எரிச்சலைடைந்தான் வசந்த்.. ஏற்கனவே தன் காதலி கவிதா மீது கோபத்தில் இருந்தவன்,

"ஏய் வானரங்களா!! .. வந்திட்டிங்களா.. இனி நிம்மதி போச்சு.. மனுஷன் வீட்டுக்குள்ள நுழைய கூடாதே?.. எங்கேர்ந்துதான் வந்து சேருவீங்களோ?"

என பெருங்குரலைடுத்து கத்தியவனை கண்ட குழந்தைகள் பயந்து அங்கே வந்த தன் தாய் ரஞ்சனியின் பின்னால் பதுங்கினர்.

"டேய் வசந்த்.. உன் மனசுல என்னடா நினைச்சுண்டிருக்கே?.. என் குழந்தைகள் வானரமா? .. அய்யோ பாவம்.. எதோ மாமான்னு உங்கிட்ட உரிமையா ஓடி வரதுகள்.. இப்படி தான் கண்டபடி பேசுவியா?" என்ற ரஞ்சனி, தன் பிள்ளைகளிடம் திரும்பி,

"நீங்க உள்ளே போங்க செல்லங்களா.. மஹதி சித்திகிட்ட போய் பாட்டி செஞ்சி வைச்சிருக்கிற உப்புமா கொழுகட்டையை சாப்பிடுங்க" என பிள்ளைகளை துரத்தியவள், தன் தம்பி வசந்திடம்,,

"ஏன்டா வசந்த் .. எங்கேடா ஊரை சுத்திட்டு வரே.. உனக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா?.. இந்த லட்சணத்தில் என் பசங்களை கண்டபடி திட்டறே.. உங்க அத்திம்பேர் வர நேரமாச்சு.. அவர் காதிலே நீ இப்படி குழந்தைகளை திட்டறது விழுந்தா அவ்வளவுதான்.. எனக்கு ஆத்துக்கு போன பின்னாடி மண்டகப்பிடிதான்"

"ஆமாம் பெரிசா சொல்ல வந்துட்டே.. வேலையை பார்த்துண்டு போவியா?.. அத்திம்பேரை பற்றி எனக்கு தெரியாதா என்ன.. அப்படியே பசங்க மேலே பாசம் பொங்கறதாமா?.. அது சரி, திடீரென்று என்ன இந்த பக்கம்.. போன வாரம் தானே வந்துட்டு போனே?" என கிண்டலாக கேட்க,

"ஏன்டா?? .. நம்மாத்துக்கு வரதுக்கு நான் சொல்லிண்டு தான் வரனுமா என்ன? .. பசங்க அரையாண்டு பரிட்சை முடிஞ்சு பத்து நாள் லீவ் விட்டிருக்கா.. எங்காத்து பெரியவாளும், பத்து நாளுக்கு என் நாத்தனார் ஆத்துக்கு மதுரைக்கு போயிருக்கா.. அதான் உங்க அத்திம்பேர் எங்களை அனுப்பி வைச்சார்" என்ற ரஞ்சனியை,

"ஓ.. அப்ப இந்த வாட்டி அவர் வரலையா? என்னடா இது அதிசயமா இருக்கு?"

"ஏன்டா .. எப்பவும் குதர்த்தமா பேசறே.. நான் கல்யாணம் முடிஞ்சு புக்காத்துக்கு போற போது நம்ம அம்மா என்ன சொன்னா... மறந்துட்டியா.. கல்யாணம் பண்ணின்டு போற பொம்மனாட்டிகள், புக்காத்துக்கு வரும் போது ஆம்படையான் இல்லாமல் தனியா வரக் கூடாது..எப்பவும், ஆத்துக்காரரோடு தான் சேர்ந்து வரனும்ன்னா.. நான் அப்படியே அம்மா சொல்லறதை கேட்கறவ.. உனக்கு தெரியாதா என்ன, நான் எப்ப அவரை விட்டுட்டு தனியா வந்திருக்கேன்.."

"அத்தோட, உனக்கு கொஞ்சம் கூட மூளையே இல்லை.. அவர் பெத்தவா கூட ஊர்ல இல்லைன்னா, அவர் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாராம்?.. வெளி சாப்பாடு அவருக்கு வயித்துக்கு சேராதுடா" என அப்பாவியாய் முடித்தாள் ரஞ்சனி.

You might also like - Kanavugal mattum enathe enathu.. A cheeky family oriented romantic story 

'வனுக்கா அவ அக்காவை பற்றி தெரியாது!! எது சாக்குன்னு பிறந்த வீட்டுக்கு டேரா போடறது அவளோட பழக்கம்.. கல்யாணமான பத்து வருஷமா, அவனும் தானே பார்க்கறான்.. மாசத்துக்கு இரண்டு வாட்டி வெள்ளிக்கிழமை சாயங்காலம் கிளம்பி வந்தால், சனி ஞாயிறு இரண்டு நாளும் குடும்பத்தோடு தங்கி , பசங்களுக்கு இது பிடிக்காது.. அது பிடிக்காது, அம்மா அவருக்கு இப்படி சமைச்சா ஒத்து கொள்ளாது, அவாத்துல தினமும் ஒரு பொறிச்ச கூட்டு, குழம்பு, ரசம் , ஏதாவது ஒரு காய்கறி ஃப்ரை இல்லாமல் சாப்பிட மாட்டா.. எப்பொழுதும் கூட தொட்டுக் கொள்ள கரு வடாம் பெரிய எவசில்வர் சம்பூடம் நிறைய பொறிச்சு வைக்கனும்.. எங்க மாமியார் நன்னா புள்ளைக்கு வாயை வளர்த்து வைச்சுருக்கா'...

இப்படி சொல்லி சொல்லி நன்றாக சாப்பிட்டு விட்டு , திங்கள் கிழமை நேராக ஆத்துக்காரருக்கு மதிய லஞ்ன்ச், பசங்களுக்கு சாப்பாடு கூடை எல்லாவற்றையும் எடுத்து கொண்டு போவது வழக்கம் ரஞ்சனிக்கு.. அத்தோடு போயிற்றா? .. அம்மா அவருக்கு, நீ செஞ்சி தர குழம்பு மாவு அடை ரொம்பவும் பிடிக்கும்.. கொஞ்சம் தட்டி தரையா.. அப்படியே ஒரு பாட்டில் நிறைய பொரி அரிசி வறுத்து தாம்மா.. இந்த வாட்டி நிறைய வேர்கடலை போடறியா?".. ஒவ்வொரு வாட்டி ஒவ்வொரு தினுசான பட்சணங்கள் மாறும்.. பிறந்த வீட்டுக்கு வந்து அவள் வெறும் கையோடு போனதா சரித்திரமே இல்லை.

இது தான் ரஞ்சனி.. இப்படி எதையாவது பிறந்த வீட்டில் சுருட்டுவதே அவளுக்கு வேலை..

"சோ.. இன்னும் பத்து நாள் இங்கே தான் குடும்பத்தோட டேராவா? .. எக்கேடு கேட்டு போங்கள்.. உன்னோட வானரங்களுக்கு சொல்லி வை.. மாடி பக்கம் என் ரூமுக்கு வர வேண்டாம்ன்னு.. எனக்கு படிக்கிறதுக்கு எக்கசக்கமாய் இருக்கு" என்று சொன்ன வசந்த்,

"அம்மா.. எனக்கு பசிக்கிறது.. என்ன இருக்கு சாப்பிட.. எதையாவது தா.. நான் போய் படிக்க போகனும்" என்றபடி தன் தாய் சாரதாவை நோக்கி குரல் கொடுத்தவாறு சமையலறையை நோக்கி நகர்ந்தான்.

"வசந்த்.. என்னடா கண்ணா .. ஏன் முகமெல்லாம் சோர்ந்து இருக்கு.. உன் பெரியக்கா ரஞ்சனி பசங்களோட லீவுக்கு வந்திருக்கா.. பார்த்தியா" என்ற சாரதவை,

"ஆமா .. அவ அம்மாவாத்துக்கு வரது புதுசா என்ன?.. ஏதோ ஒரு சாக்கு.. டிபனை கொடும்மா.. எனக்கு படிக்க வேண்டியது நிறைய இருக்கு!"

"ஏன்டா , இப்படி சலிச்சிக்கறே?.. கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணா ,மாப்பிள்ளை வந்துடுவார்.. சேர்ந்து சாப்பிடலாமே?"

தன்னை முறைத்த மகனை பார்த்தவர், என்ன தோன்றியதோ, தட்டை வைத்து அவனுக்கு, சப்பாத்தியும், பருப்பு மசியலையும் வைத்தவர், "வசந்த், குழந்தைகளுக்கு பிடிச்ச அரிசி உப்புமா கொழுக்கட்டை சாயங்காலம் டிபனுக்கு செஞ்சேன்.. உனக்கும் எடுத்து வைச்சுருக்கேன்.. இலையில் போடவா?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.