(Reading time: 16 - 31 minutes)

'டேய்... என்னடா நீ. எல்லாம் நமக்கு சாதகமா வர நேரத்திலே போய்... ஒரு விஷயம் நீ யோசிச்சு பார். நீ பணக்காரன்னு நினைச்சிட்டு தானேடா அவ உன் கூட வர சம்மதிக்கறா? இதே வசதி இல்லாதவன் தெரிஞ்சா உன்னை தூக்கி போட்டுட மாட்டாளா? அப்போ அவளுக்கும் பணம் தானே குறி.? அவளை நீ ஏமாத்துறதிலே தப்பே இல்ல சரவணா...' அவன் மனதில் இன்னும் கொஞ்சமாக விஷ விதையை தூவிக்கொண்டிருந்தான் விக்கி.

கோதையின் வீடிருக்கும் தெருவில் இறங்கிக்கொண்டான் கோகுல். அந்த கோவில் கண்ணில் பட, ஒரு வேளை கோதை கோவிலுக்கு வந்திருப்பாளோ என்ற எண்ணத்துடன் கோவிலுக்குள் நுழைந்தான் கோகுல். அங்கே சிரித்துக்கொண்டு நின்றிருந்தான் மாயக்கண்ணன்.

அந்த கண்ணனை தரிசித்துவிட்டு பிரகாரத்துக்கு வந்தான் அவன்.. அங்கே ஏதேதோ சிந்தனையுடன் சிலையாக அமர்ந்திருந்தாள் வேதா. அந்த கண்ணனிடம் மன்றாடிக்கொண்டிருந்து அவள் உள்ளம்.

'நான் செய்துக்கொண்டிருப்பது சரியா? தவறா? எனக்கொரு சரியான வழிக்காட்டு. நீ காட்டும் பாதையில் நடக்கிறேன் நான்.'

You might also like - Unakkaga mannil vanthen - A romantic comedy blended with fantasy... 

கோதையை தேடி சுற்றிக்கொண்டிருந்த கோகுலின் பார்வை அங்கே இருந்த வேதாவின் மீது விழுந்தது. ஒரு முறை அவன் புருவங்கள் உயர்ந்து இறங்கின.

'யார் இந்த பெண்? எங்கேயோ பார்த்திருக்கிறேனே????' கண்களை மூடி நெற்றியை தேய்த்துகொண்டவனின் தலைக்குள்ளே ஒரு மின்னல் வெட்ட பாக்கெட்டில் இருந்த அவள் போட்டோவை எடுத்து பார்த்தான். மலர்ந்தது அவன் முகம்.

அடுத்த நொடி அவள் எதிரில் வந்து  உட்கார்ந்தான் கோகுல் 'ஹாய் மன்னி..'

'மன்னியா???' திடுக்கென நிமிர்ந்து அவன் யாரென புரியாதவளாக அவனை ஏற இறங்க பார்த்தாள் வேதா

'என்ன? கண்ணன் கிட்டே அப்ளிகேஷனா? கவலையே படாதீங்கோ. எங்க முரளிய நீங்க கண்ணை மூடிண்டு கல்யாணம் பண்ணிக்கலாம். அவன் உங்களை நன்னா பார்த்துப்பான்'

சொல்லிவிட்டிருந்தான் அந்த மாயக்கண்ணன். கோகுலின் வாயிலாக அவளுக்கு வழி காட்டி இருந்தான் அவன் . அதை புரிந்துக்கொள்ளும் சக்தி தான் அவளுக்கு இல்லை.

'நீங்க யாருன்னு....'

'என்னை விடுங்கோ. நீங்க வேதா தானே?'

'ஆமாம்...'

'அப்போ நீங்க எனக்கு மன்னிதான்.' கண்களில் குறும்பும், இதழ்களில் புன்னகையுமாக சொன்னான் கோகுல்.

'நேக்கு... ஒண்ணுமே புரியலை.'

'உங்களுக்கு முரளி தெரியுமா?'

'ம்ஹூம் ....' என்றாள் அவள். அவளுக்கு எந்த விவரமும் சொல்லப்படவில்லையா என்ன? அவன் முகத்தில் கொஞ்சம் குழப்ப ரேகைகள்.

'சரி அட்லீஸ்ட் கோதையாவது... தெரியுமா?

'ம்....'

'அப்பாடா...' என்றான் கோகுல் 'உங்க தங்கை கோதையை கல்யாணம் பண்ணிக்க போற ஸ்மார்ட் கய் நான்தான். இப்போ ஏதாவது புரியறதா? தலை சாய்த்து கேட்டான் அவன்..

'கோதைக்கும் கல்யாணம் பிக்ஸ் ஆயிடுத்தா?' நிஜமாவா? விழிகள் விரிய கேட்டாள் வேதா. அவள் பார்வை அவனை அளக்க, அவள் முகத்தில் அளவிட முடியாத சந்தோஷம், மகிழ்ச்சி ஆனந்தம் இன்னும் என்னெனவோ.....

.'நான் எதிரே பார்க்கலை. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. 'நீங்க தான் மாப்பிள்ளையா?'

'ம்...' மென்சிரிப்புடன் கூடிய தலை அசைப்பு அவனிடம்.

'அது கல்யாணதுக்கு ஓகே சொல்லிடுத்தா? நம்பவே முடியலை. அவ சின்ன குழந்தை மாதிரி. உலகமே தெரியாது. நீங்க... நீங்கதான் அவளை பத்திரமா பார்த்துக்கணும். ப்ளீஸ்...' கண்கள் மின்ன மின்ன சொன்னாள் வேதா.

'கண்டிப்பா...' தமக்கையின் பாசத்தை ரசித்தபடியே சொன்னான் அவன்.

'ஆமாம் உங்க பேரென்ன?'

'ஐம் கோகுல்...' அவன் சொல்ல அவள் கொஞ்சம் வியப்புடன் நிமிர்ந்தாள் அவள்.

'கோகுலா...?'

'ஆமாம். ஏன் ஷாக் ஆகறேள்?  என் பேர் பிடிக்கலையா?' சிரித்தான் அவன்.

சொல்லி இருக்க வேண்டும் அவன்!!!! தான் ஜி.கே க்ரூப்ஸ்ஸின் ஒரே வாரிசு என்று அறிமுகப்படுதிக்கொண்டிருக்க வேண்டும்.!!! செய்யவில்லை அவன்.!!!!! ஏனோ எப்போதுமே அப்படி சொல்லி பெருமை அடித்துக்கொள்ள தோன்றுவதில்லை அவனுக்கு.

சட்டென ஏதோ நினைவு வந்தவனாக தனது கைப்பேசியில் இருந்த முரளியின் புகைப்படத்தை அவளிடம் காட்டினான் கோகுல். 'நீங்க முரளியை பார்த்ததில்லையே? பார்த்திட்டு சொல்லுங்கோ மன்னி அவனுக்கு எத்தனை மார்க் போடலாம்னு?

அவன் முகத்தை பார்த்துக்கொண்டே தயக்கத்துடன் அதை வாங்கிக்கொண்டாள் வேதா. கண்கள் புகைப்படத்தை பார்த்துக்கொண்டிருக்க அவளுக்குள் அலையடித்துக்கொண்டிருந்தது. அதற்குள் கோகுல் முரளியை பற்றி எல்லா விவரங்களும் சொல்லிவிட்டிருந்தான்.

எல்லாம் சொல்லி முடித்துவிட்டு கேட்டான் 'என்ன மன்னி...' ஒகேவா?'

'ஆங்???" நிமிர்ந்தாள் பேதை. என்ன சொல்வதாம் இவனிடம்? இதில் தங்கையின் வாழ்க்கையும் பின்னிக்கிடக்கிறதே??? உள்ளுக்குள் படபடத்தது.

'மன்னி.... என்ன யோசனை.???

'எனக்... எனக்கு எங்க... எங்கப்பா என்ன சொன்னாலும் ச.... சரிதான்.' அவன் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமென கஷ்டப்பட்டு வார்த்தைகளை தேடி கோர்த்து சொல்லி முடித்தவள் 'எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவீங்களா கோகுல்?' சட்டென கேட்டாள்.

'கண்டிப்பா... சொல்லுங்கோ...'

'என்னை நீங்க மன்னின்னு கூப்பிடாதீங்களேன்... ஜஸ்ட் வேதா போதும். ப்ளீஸ்.' சொன்னவள் அவனை நோக்கி கை நீட்டினாள் 'நாம எப்பவுமே ஃபிரண்ட்ஸ் ஓகேவா?'

'சரி ஒகே....' கைகுலுக்கினான் கோகுல். 'இப்போ நீங்க ஒரு ஹெல்ப் பண்ணனும். உங்க தங்கைக்கு ஒரு மொபைல் வாங்கினேன். அதை அவ கிட்டேகொடுக்கணும்.'

'ஏன்? நீங்களே வந்து அவ கிட்டே கொடுங்களேன். அப்பா இப்போ ஆத்திலே இருக்கமாட்டார். அவர் வர லேட் ஆகும். டோன்ட் வொர்ரி' உற்சாகம் பொங்க கண் சிமிட்டி சொன்னாள் வேதா.

'எனக்கு கோதையோட கொஞ்சம் வம்பு பண்ணனும். சீண்டி பார்க்கணும். அவளுக்கு உங்களை எவ்வளவு பிடிச்சிருக்குன்னு பார்க்கணும். நீங்களும் வாங்க கோகுல் ப்ளீஸ்...' சொன்னவளின் முகம் ஏனோ மாற்றம் கொள்ள ..... 'மறுபடியும் எனக்கு சான்ஸ் கிடைக்குமான்னு தெரியலை....'  முதலில் துள்ளலாக ஆரம்பித்த அவள் தொனி சற்று தேய்ந்து முடிந்தது.

'நான் வரேன் பட்... ஏன் அப்புறம் சான்ஸ் கிடைக்காம என்ன?' மனதிற்குள் ஏதோ ஒன்று உறுத்த கேட்டான் கோகுல்.

'அது .... ஒண்ணுமில்லை வேறெதோ யோசனை... நாம போலாம் ...' ஒரு பெருமூச்சை வெளியிட்டபடியே நடந்தாள் வேதா.

வீட்டை அடைந்தனர் இருவரும். சற்று முன்னால் கட்டி இருந்த புடவையை கூட மாற்றிக்கொள்ளாமல் அதே அலங்காரத்துடனே இருந்தாள் கோதை. காதில் அணிந்திருந்த ஜிமிக்கிகள் அவளது ஒவ்வொரு அசைவிலும் அவள் கன்னத்தில் முத்தமிட்டு விளையாடிக்கொண்டிருக்க, கூடத்தில் அமர்ந்து முல்லை பூக்களை தொடுத்துக்கொண்டிருந்தாள் கோதை. 

திறந்திருந்த கதவை தாண்டி கோகுலுடன் உள்ளே வந்து நின்றாள் வேதா. அவனை பார்த்த மாத்திரத்தில் விருட்டென எழுந்தவளின் முகத்தில் ஓடி வந்து ஒட்டிக்கொண்ட சந்தோஷத்தையும், பரவிக்கிடந்த வெட்க பூச்சையும் அதிகமாக ரசித்தவள் வேதாவாகதான் இருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.