(Reading time: 27 - 53 minutes)

"பிருத்வி எல்லாரும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் தான் தப்பு பண்ணுவாங்க... நீ அதை புரிஞ்சுக்காம இப்படி கோபப்படறதும்... வார்த்தையை விடறதும் நல்லா இல்ல... இப்படியே நீ இருந்தேன்னா ஒரு நாள் உன்னோட கோபத்தால உனக்கு பிடிச்ச விஷயத்தையோ... இல்ல பிடிச்சவங்களையோ இழக்க வேண்டிவரும்...

அப்ப வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்ல... அதனால் அதை திருத்திக்கப் பாரு...

யுக்தா.. நீ வந்து ஹெல்ப் பண்ணதுல சந்தோஷம்மா... சரி நான் வீட்டுக்கு போறேன்... நீயும் வரியா..."

"அப்பா... யுக்தாவோட ஹெல்ப்க்காக ஒரு சின்ன ட்ரீட் வைக்கலாம்ன்னு இருக்கேன்... அதுக்கப்புறம் நானே வீட்ல கொண்டு போய் விட்டுட்றேன்..."

"சரி நான் வீட்டுக்கு கிளம்பறேன்... வரேன் யுக்தா.."

"ம்ம் சரி மாமா.." அவர் கிளம்பியதும்...

"பிருத்வி... மாமா சொன்னதெல்லாம் பத்தி நான் பேசல... ஆனா இந்த கோபம் டென்ஷன்ல்லாம் உடம்புக்கு நல்லதில்ல... அதனால குறைச்சுக்கங்க பிருத்வி.." என்றால் யுக்தா... அவனும் தலையாட்டினான்.. ஆனால் அவனின் அந்த கோபக் குணத்தை இவளிடமும் காட்டப் போகிறான் என்று அப்போது அவளுக்கு தெரியுமா என்ன..?? அவனோடு ஆனந்தமாக ரெஸ்டாரண்டிற்கு கிளம்பினாள் யுக்தா...

இந்த ஐந்து நாட்களில் அவனோடு இருந்த ஒவ்வொரு தருணத்தையும் பொக்கிஷமாக மனதில் சேர்த்து வைத்தாள் யுக்தா.

யுக்தா வந்து ஏழு நாட்கள் முடிந்து... இன்று தர்ஷினி திருமணத்திற்கு ஊருக்கு கிளம்ப வேண்டும்... வளர்மதியோ கவியையும் சாவித்திரியையும் வீட்டிற்கு அழைத்ததால்... ஊருக்கு செல்வதற்கு முன் காலையிலேயே... அனைவரும் பிருத்வியின் வீட்டுக்கு செல்லலாம் என்று முடிவெடுத்தனர்...

சங்கவியை பொறுத்தவரை சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் ஆவது சம்யுவோடு இருக்கலாம் என்று நினைத்தாள்... ஆனால் ஒரு வாரம் லீவ் எடுத்திருப்பதால்... சனிக்கிழமை வேலை இருந்தது... இன்று ஞாயிற்று கிழமையாவது அவளோடு வெளியேப் போகலாம் என்று பார்த்தால்....  மதியமே ஊருக்கு எடுத்து போக் வேண்டிய பொருட்களை எடுத்து வைத்தால் தான் மாலையில் கிளம்ப சரியாக இருக்கும்... அதன் பிறகு ஒருவாரம் அவளோடு தானே இருக்கப் போகிறோம் என்று மனதை தேற்றிக் கொண்டாள் கவி...

காலையில் வளர்மதி அழைத்ததால் அங்கு செல்ல வேண்டும் என்று அம்மாவும் சம்யுவும் சொன்னதால் கவி தயாராகினாள்... ஆனாலும் அவளுக்கும் அங்கு செல்வதில் ஒரு சின்ன ஆர்வம்...

ஆர்வம் என்பதை விட பொறாமை என்று தான் சொல்ல வேண்டும்... அதற்கு காரணம் பிருத்வி... அவனை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தான் அவளுக்கு... அந்த ஆர்வம் இப்போது ஏற்பட்டது இல்லை... அவள் சிறுவயதில் ஏற்பட்டது தான்... சிறுவயதில் கவியும் சம்யுவும் ஒன்றாக சுற்றிக் கொண்டிருந்த காலங்களில் இவர்களுக்கு வேறு எந்த நண்பர்களும் முக்கியமானவர்களாக இருந்ததில்லை...

ஆனால் சம்யு சென்னை வந்தப் பிறகு பிருத்வியும் அவளுக்கு முக்கியமாகி போனான்... விடுமுறைக்கு ஊருக்கு வரும் போதெல்லாம் பிருத்வியை பற்றி தான் பேசிக் கொண்டிருப்பாள் சம்யு... தன் சகோதரி தன்னையே நினைத்துக் கொண்டு வருத்தப்படாமல் இருக்கிறாளே... என்று சந்தோஷப்பட்டாலும்.... முழுக்க முழுக்க தனக்கு மட்டுமே கிடைத்த அந்த நட்பு இப்போது இன்னொருவனுக்கும் பங்கு போடப் படுகிறதே என்று ஒரு சின்ன பொறாமை அவளுக்கு... ஆனால் அதை அவள் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டாள்...

சிறுவயதில் சம்யு பிருத்வியை பற்றி பேசும்போது அவள் கண்களில் ஒரு பிரகாசத்தை சங்கவி அந்த வயதிலேயே கண்டுக் கொண்டாள்... அதனாலேயே பிருத்வியை பார்க்கும் ஆர்வம் அவளுக்கு அப்போது... இவர்களுக்கு கருத்து தெரியாத வயதில் பிருத்வி அந்த ஊருக்கு வந்திருக்கிறான்...

ஆனால் இவர்களுக்கு கருத்து தெரிந்து... வளர்மதி அத்தையோ.. இல்லை செந்தில் மாமாவோ மட்டும் தான் தனியாக ஊருக்கு வந்துள்ளார்கள்... அதன்பிறகு சம்யு சென்னைக்கு போன பிறகு கூட சித்தி அவளை அழைத்துக் கொண்டு ஊருக்கு வருவாரே தவிர இவள் சென்னைக்கு போனதில்லை... அதனால் அவளுக்கு அப்போது பிருத்வியை பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்ததில்லை... அதன்பிறகு சம்யு நியூயார்க் போன பின்பு அவள் பிருத்வி என்ற ஒருவனை மறந்தே போனாள்...

ஆனால் இப்போது இந்த ஒரு வாரமாக பிருத்வியின் பெயர் இந்த வீட்டில் கேட்டுக் கொண்டிருக்கிறது... சித்தியோ.. இல்லை சம்யுவோ... அடிக்கடி அந்த வீட்டில் உள்ளவரை பற்றி பேசும் போது அவன் பெயரும் இடம்பெறும்... சம்யு கூட பிருத்வியோடு கோவிலுக்கு சென்றது.. அவன் அலுவலகத்திற்கு சென்றது... இதையெல்லாம் சொல்லுவாள்... இப்போதும் கூட அவனைப் பற்றி பேசும்போது அவள் கண்களில் அந்த பிரகாசம் கவிக்கு தெரிகிறது... ஆனால் அந்த பிரகாசத்திற்கான காரணத்தை இவள் ஆராயவில்லை...

ஏனென்றால் பனிரெண்டு வருடங்களுக்குப் பிறகு... இப்போது தான் பிருத்வியை சம்யு பார்க்கிறாள்... இந்த ஒரு வாரம் தானே அவனுடன் பழகுகிறாள்... அதனால் அதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை... இருந்தாலும் அந்த பிருத்வியை பார்ப்பதில் கவிக்கு ஒரு ஆர்வம்... இந்த ஒரு வாரத்தில் கூட அவனை பார்க்கும் சந்தர்ப்பம் கவிக்கு அமையவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.