(Reading time: 25 - 50 minutes)

09. மனம் கொய்தாய் மனோஹரி - அன்னா ஸ்வீட்டி

Manam koithaai Manohari

மித்ரனை மனோஹரி உட்பட அவள் வீட்டில் அனைவரும் ஒழுங்கும் கிரமுமாய்தான் வழி அனுப்பி வைத்தனர். ஆனால் அவன் கிளம்பிச் சென்றதும் இவள் வீட்டை மனதிற்கு பிடிக்காத ஒருவிதமான அமைதி சூழ்ந்தது.

அப்பாதான் அமைதியை கலைத்தார். “மனோ எதையும் என்ன விஷயம்னு தெரிஞ்சுக்க முன்னால மனசுல போட்டு குழப்பாத…. நாளைக்கு ப்ரச்சனைய நாளைக்கு பார்க்கலாம்…. இப்போ இன்னைக்கு என்ன செய்யனுமோ அதை பாரு…. வருத்தப்படுறதால ஒரு ப்ரயோஜனமும் இல்லை…” என இவளுக்கும் அனைவருக்குமாய் அவர் சொல்ல அடுத்து மனோவுக்கும் மூஞ்சை தூக்கி வைத்துக் கொண்டிருக்க விருப்பம் இல்லை. காரணம் அகதனுக்கு இன்று தான் திருமணம் பேசி முடிவாகி இருக்கிறது…. அதற்காக மகிழ்ச்சியாக இருப்பதை விட்டு புரியாத ஒரு ப்ரச்சனைக்காக அழுது வடிவதில் என்ன லாபம்?

அதோடு மித்ரன் விஷயத்தில் அவள் ஒருவித முடிவுக்கும் வந்திருந்தாள். அவன் தன் பக்க காரணத்தையும் விளக்கத்தையும் சொல்லட்டும்…..அடுத்தும் இவள் நினைப்பது சரியாக இருந்தால் அதைத்தான் இவள் செய்யப் போகிறாள்.

மித்ரன் வேலை பத்தி அவனது அம்மா சொன்னது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்றுதான் இவளுக்குபடுகிறது….  மித்ரன் அவன் அம்மாவிடம் சொல்லாமல் கூட இருந்திருக்கலாம்…. அவரும் தெரிந்து கொள்ள முயலாமல் இருந்திருப்பாராய் இருக்கலாம்..அல்லது தெரிந்தும் இவர்களிடம் அவன் சொல்லி இருக்க மாட்டான் என்ற நம்பிக்கையில் பொய் கூட சொல்லலாம் அவர்.

ஆனால் அவருக்கு இவள் மித்ரனை திருமணம் செய்வதில் விருப்பம் இல்லை என்பது சந்தேகமின்றி நூறு சதவீதம் உண்மை. சின்ன உரசல் என்றவகையில் அது இருந்தால் பெரிதாக எண்ணாமல் இவள் மித்ரன் எதிர்பார்ப்பது போல் உடனேயே திருமணத்திற்கு ஒத்துக் கொள்வாள்தான்.

ஆனால் கடுமையான அளவு அவன் அம்மா இந்த திருமணத்திற்கு எதிராக இருக்கும் பட்சத்தில்….. இப்பொழுது திருமணம் செய்வதில் என்ன நன்மை இருந்துவிடப் போகிறது…..?

முதலில் அவன் அம்மாவுக்கும் அவனுக்கும் இடையில் உள்ள ப்ரச்சனையை சரி செய்ய வழி தேடச் சொல்ல வேண்டும் மித்ரனை….. நிச்சயமாய் மித்ரனைப் பத்தி ஏதோ தவறான புரிதல் இருக்கிறது அவனது அம்மாவிடம்….. இவனது அணுகுமுறையும் அதை சரி செய்ய உடன்படுவது போல் துளி கூட இல்லை…..உனக்கு பிடிக்காட்டி நீ போ….எனக்கென்ன? என்னை நான் பார்த்துப்பேன் என்ற வகையில் இருக்கிறது……. மித்ரனிடம் நியாயம் இருந்தும் அவன் காயப் படுத்தப் பட்டிருப்பானாய் இருக்கும்…அதனால் இவன்  இப்படி நடந்து கொள்வானாய் இருக்கலாம்……. அதுவும் அவனது அம்மா ஒரு அலாதி கேரக்டர்……..

அவனது அம்மா கூட அவன் அப்படி ஒன்றி ஒற்றுமையாகிவிட முடியவில்லை எனினும்….. ஓரளவு சுமுக நிலையை கொண்டு வந்துவிட்டு அதன் பின்தான் இவர்கள் திருமணம் செய்வது சரியாக வரும் என்று படுகிறது இவளுக்கு….

இதில் முக்கியமான விஷயம்…..இவள் மீது நடந்த ஷூட் அவுட் இன்னும் இவள் வீட்டிற்கு தெரியாது…..அதை வேறு இப்போது சொல்லி அவர்களை பதற வைக்க இவளுக்கு விருப்பம்  இல்லை……பாதுகாப்பு இல்லாமல் மித்ரன் இவளைவிட்டு சென்றிருக்க மாட்டான்…..அதோடு பயந்து பயந்து எவ்வளவு ஒழிய…??? வெளிய ப்ரச்சனைனா வீட்டுக்குள்ள ஒழிஞ்சுக்கலாம்….. உள்ள கூட பாதுகாப்பு இல்லைனா??

அதோட இப்போதைக்கு மித்ரன் கூட இவளுக்கு மேரேஜ் இல்லைனு ஒரு முடிவு வெளிய போறப்ப இந்த கொலை முயற்சி கூட நின்னு போயிடுமே….. இவங்க பழகுறதுதானே யாருக்கோ பிடிக்கலை….. அந்த நபரை கண்டுபிடித்துவிட்டு வந்து மித்ரன் இவளை கல்யாணம் செய்து கொள்ளட்டும்…..அதுதான் ப்ரச்சனைக்கு நிரந்தர தீர்வு….. இல்லையெனில் ஒவ்வொரு நொடியும் இவள் பாதுகாப்புக்கென மித்ரன் உட்பட எல்லோரும் பயந்து கொண்டிருக்க வேண்டி இருக்கும்….

ஆக கல்யாணத்தை தள்ளிப் போடுறதுதான் இப்போதைக்கு சரி…. இப்படி அவள் வகையில் ப்ரச்சனைக்கு முடிவு இருப்பது போல் தோன்றவும் ஒருவாறு மனதை சமாதானத்துக்கு கொண்டு வந்தாள் மனோஹரி.

இப்பொழுது இவள் திரவியாவிடம் பேச வேண்டுமே…..அவள் இவளது அழைப்பை எதிர்பார்த்துக் கொண்டிருப்பாளே…. இவள் போகவில்லை என்பதற்கே கண்டிப்பாய் அப்செட் ஆகி இருப்பாள்….இப்பொழுதும் அழைக்காவிட்டால் நன்றாயிராது….. அதோடு அகதனையும் கண்டிப்பாக பேச சொல்ல வேண்டும்….

இவள் சொல்லித்தான் பேசுவானாமா அவன்??? நினைக்கவே புன்னகை கோடிடுகிறது இவள் இதழில்… அவன் கண்டிப்பாக திரவியாவிடம் பேசுவான்தான்…. ஆனால். அப்படி அவன் பேசும் போது மனோ ஏன் பேசவில்லை என்ற திரவியாவின் கேள்வியை அகதன் எதிர் கொள்ளும் சூழலை இவள் உண்டு செய்து வைக்க கூடாது….

ஆக திரவியாவிடம் பேச முடிவு செய்த மனோஹரி அதற்கு சரியான இடம் மொட்டை மாடி என முடிவு செய்து அதற்காக படியேறினாள் தன் மொபைலுடன்.

“நான் கொஞ்சம் தியாட்ட பேசிட்டு வந்துடுறேன்மா….அவ என் காலை எதிர்பார்த்துட்டு இருப்பா…” சொல்லியபடி இவள் ஏற அனைவருமே ஒருவாறு சூழலை ஏற்க முயன்றபடி வரவேற்பறையிலிருந்து கலைந்து சென்றனர்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.