(Reading time: 28 - 55 minutes)

டுத்த மாதத்தில் ஒருநாள், அவன் ஒரு சாக்லேட்டை எடுத்து அவளிடம் கொடுத்தான்…

“ஹை… சாக்லேட்…” என குதூகலித்தபடி வாங்கியவள், அவன் அமைதியாய் இருப்பதை பார்த்துவிட்டு,

“என்ன சகி?... என்னாச்சு?... ஏன் ஒரு மாதிரி இருக்குறீங்க?...” எனக் கேட்டாள்…

“ஒன்னுமில்லடா… கொஞ்சம் யோசிச்சிட்டிருக்கேண்டா….”

“என்ன சகி?... என்ன விஷயம்?... என்ன யோசனை?... சொல்லுங்க….”

“இல்லடா… நீ இன்னும் கொஞ்சம் வளர்ந்ததுக்கு அப்புறம் சொல்லுறேன்… சரியா?...” என கெஞ்சுதலோடு முடிக்கவும், சாக்லேட்டை சாப்பிட்டபடியே அவளும் சரி என தலை அசைத்தாள்…

இரண்டு வருடங்கள் இப்படியே செல்ல, மகத் பத்தாம் வகுப்பும், அவள் ஐந்தாம் வகுப்பும் வந்திருந்தனர்….

அந்த வருட பொதுத்தேர்வை எதிர்நோக்கியிருந்த மகத்திற்கு படிக்க வேண்டியது நிறைய இருந்த போதிலும், அவளிடம் அவன் எந்த ஒதுக்கத்தையும் காட்டவில்லை… வழக்கம்போலவே நடந்துகொண்டான்…

அப்போது ஒருநாள்,

“கிருஷ்ணா… நான் சொல்லுறேன்னு தப்பா நினைக்கமாட்டல்லடா….?...”

“என்ன சகி… இது… இப்படி எல்லாம் சொல்லிகிட்டு… இப்போ என்ன ஆச்சுன்னு சொல்லப்போறீங்களா இல்லையா?...” என மிரட்டும் தொனியில் கேட்டவளை கொஞ்சம் வித்தியாசமாகத்தான் பார்த்தான் அவன்…

“சகி… என்ன?...” என அவள் இடுப்பில் கைவைத்து ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க அவனுக்கு இரண்டு வருடங்கள் முன்பு அவள் பேசியவிதமும், இப்போது அவள் பேசும் விதமும் கண் முன்னே தோன்றி மறைந்தது…

“நீ கொஞ்சம் மாறிட்டடா….”

“யாரு… நானா?... ஹாஹா… இருந்துட்டு போகட்டும்….” என விளையாடிக்கொண்டே சொன்னாள்…

அவன் பதில் பேசாமல் இருக்கவே,

“கொஞ்சம் மிரட்டுற மாதிரி பேசுறேனா?... ஹ்ம்ம்…” என அவளே அவனிடம் கேட்க

அவன், “அப்படி இல்லடா… நீ கொஞ்சம் வளர்ந்திருக்குற, பேச்சிலயும் சரி, உயரத்திலேயும் சரி…” என்றான் நடந்தவாறு…

“அப்படி பார்த்தா நான் தான் சொல்லணும் அதை… நீங்க தான் என்னை விட ரொம்ப உயரமா வளர்ந்துட்டீங்கன்னு…. பட் பேச்சுல மட்டும் அப்படியே தான்… அப்ப எப்படி பார்த்தேனோ அதே மாதிரி தான் இப்பவும் பேசுறீங்க…” என்றாள் அவளும் முதலில் வேகமாக ஆரம்பித்து பின் மெதுவாக….

அவள் அப்படி சொன்னதும், அவன் மீண்டும் அமைதியின் பின் ஒளிந்து கொள்ள,

“ஹ்ம்ம்… என்ன சகி…. நீங்க…. நான் தான் பேசிட்டே இருப்பேன்னு தெரியும் தான… சரி சொல்லுங்க… என்ன சொல்ல வந்தீங்க… நான் அமைதியா கேட்குறேன்….” என வாய்மேல் கைவைத்து அவள் சொன்னதும், அவன் சட்டென சிரித்துவிட்டான்…

“அப்பாடா… உங்களை சிரிக்க வைக்குறதுக்குள்ள, நான் படுற பாடு…. இருக்கே…. ஹ்ம்ம்…” என விழிகளை உருட்டியவள், அவன் அடுத்து சொன்னவற்றைக் கேட்டு கோபமானாள்…

“எனக்கு ஸ்பெஷல் கிளாஸ் வச்சிருக்காங்கடா ஈவ்னிங்க் டைம்… அதனால இன்னும் கொஞ்ச நாள் என்னால சாயங்காலம் வரமுடியாதுடா இந்த நேரத்துக்கு…”

அவன் சொன்னதை கேட்டு கோபம் கொண்டவள், “அப்போ எங்கூட வரமாட்டீங்க அப்படித்தான…?...” என்றவளுக்கு கண்ணீர் கண்களில் முட்டி நின்றது…

“ஹே… கிருஷ்ணா… இல்லடா… நானும் மிஸ்கிட்ட எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன்டா… அவங்க கண்டிப்பா வந்தே தீரணும்னு சொல்லிட்டாங்க… இன்னும் ஒரே மாசம் தான்… கண் மூடி கண் திறக்கறதுக்குள்ள ஓடிப்போயிடும்… அப்புறம் உங்கூட தாண்டா வருவேன்…” என அவன் கெஞ்ச

அவள் கொஞ்சம் இளகினாள்… “அப்போ நான் உங்களை இன்னும் ஒரு மாசத்துக்கு பார்க்கவே முடியாதா?....” என ஏக்கத்தோடு அவள் கேட்டபோது, ஏனோ அவனுக்கு அவளின் கையைப் பிடித்துக்கொள்ள வேண்டும் என தோன்றது அந்த வினாடி… ஆனால் அவன் அதை செய்யவில்லை…

கஷ்டப்பட்டு தன்னை தேற்றியவன், “கிருஷ்ணா, காலையில உங்கூட தாண்டா வருவேன்… சாயங்காலம் மட்டும் தான்….” என இழுத்தபோது

“சரி… பட் காலையில சீக்கிரம் வந்துடணும்… ஓகேயா…’ என அவளே சமாதானத்துக்கு இறங்கி வர, அவனுக்கே அது ஆச்சரியம் தான்…

அதை அவன் அவளிடம் கேட்டபோது, “நீங்க நல்லா படிக்குற பையன்…. இப்போ டென்த் வேற… சோ படிப்பு தான முக்கியம்… ஆனா காலையிலயும் கோச்சிங்க் கிளாஸ் இருக்குன்னு சொல்லியிருந்தீங்கன்னா கண்டிப்பா உங்க கூட நான் சண்டை தான் போட்டிருப்பேன்… ஈவ்னிங்க் மட்டும் அப்படிங்கிறதுனால தப்பிச்சிட்டீங்க…” என்றாள் தனது கண்களை உருட்டியபடி…

அவளின் குழந்தைத் தனத்தை ரசித்தவனுக்கோ அவளின் செய்கை, மனதுக்கு ஆறுதலாகவும், நிம்மதியாகவும் இருக்க, அவளைப் பார்த்து சிரித்தான்….

மறுநாள் அவன் சொன்னது போலவே அந்த சாயங்கால வேளையில், அவன் வராது போக, அவள் மட்டும் தனியாக நடந்தாள்… ஏனோ மனதின் ஒரு ஓரத்தில், ஒருவித கவலை சூழ்வதை உணர்ந்தாள் அவள்… முதன் முதலாக அவன் இல்லாத தனிமையை வெறுத்தாள்… அவனை தேடினாள் மிகவும்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.