(Reading time: 11 - 21 minutes)

18. விடியலுக்கில்லை தூரம் – ஜெய்

ன்னம்மா ஏன் இத்தனை கவலையா உக்கார்ந்து இருக்கீங்க?”, மிகக்கவலையுடன் சோபாவில் அமர்ந்திருந்த அன்னையிடம் கேட்டபடியே வந்தாள் ரூபா, விமலாவின் தங்கை.

“உங்க அப்பாவும், அக்காவும் பண்ற வேலை எல்லாம் பார்த்தா சந்தோஷமாடி வரும்”

“இப்போ புதுசா என்ன பூகம்பம் கிளப்பி இருக்காங்க?”

Vidiyalukkillai thooram

“பாவம்டி அந்தப் பையன் குடும்பம். நமக்கு நல்லது பண்ணிட்டு திண்டாடிட்டு நிக்கறாங்க. அன்னைக்கு அந்த ஸ்ரீதரோட அப்பா பேசினாரு இல்லை, அதனால மன உளைச்சல் ஏற்பட்டு உங்கப்பாக்கு உடம்பு சரி இல்லாமப் போச்சுன்னு அவங்க வீட்டுக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வச்சு இருக்காங்க”

“அம்மா இந்த அப்பாவும், அக்காவும் ஏன்மா இப்படி தப்பு மேல தப்பு பண்ணிட்டு போறாங்க. ஏற்கனவே டிவி மூலமா இவங்க பண்ணினதே தப்புன்னு தெரிஞ்ச பின்னாடி நம்ம குடும்பத்தை கேவலமா பேசப் போறாங்க. இப்போ இது வேற சேர்ந்து போச்சு. நீங்க இனிமேலும் வாயை மூடிட்டு இருக்காம ரெண்டு போரையும் கொஞ்சம் கண்டிச்சு கேளுங்கம்மா”

“யாரு உங்கப்பாவையும், அக்காவையுமா....... நான் கேட்ட உடனே பதில் சொல்லிட்டுத்தான் வேற வேலை பார்ப்பாங்க. ரெண்டு பெரும் சேர்ந்து என் வாய எப்படி அடைக்கறதுன்னு பார்ப்பாங்க. இல்லைன்னா உங்கக்கா ஊருக்கே கேக்கறா மாதிரி கத்தி ஒப்பாரி வைப்பா. நம்ம மானம்தான் போகும்”

“அக்கா இங்க இருந்த வரை ஒழுங்காதான்ம்மா இருந்தா. வேலைக்குன்னு போனப்பறம்தான் இப்படி மாறிப் போய்ட்டா”

“ஆமா எங்க ஒழுங்கா இருந்தா. சின்ன வயசுல இருந்தே எதுக்கு எடுத்தாலும் பிடிவாதம்தான். நான் ஏதானும் எடுத்து சொன்னாலும் உடனே உங்கப்பா அவளுக்கு பரிஞ்சு பேசி, என்னைய திட்டி வாய மூட வச்சிடுவாரு. அவருக்கிட்ட இருக்கற மொத்த கெட்ட குணமும் சேர்ந்து எனக்குப் பொண்ணா பொறந்து இருக்கு”

“வருத்தப்படாதீங்கம்மா, எல்லாம் சரியாப் போகும்”

“எங்க இருந்துடி சரியாப் போக. ஏற்கனவே டிவில இவ அடிச்ச கூத்துக்கே அவங்க என்ன எல்லாம் கேள்வி கேக்கப் போறாங்களோன்னு பயத்துல இருந்தேன். இப்போ இந்த வக்கீல் நோட்டீஸ் வேற சேர்ந்துடுச்சு”

“அம்மா அவங்க அப்படி எல்லாம் பண்றவங்க மாதிரி தெரியலைம்மா. அந்த கல்யாணம் நின்ன சமயத்துல இருந்த டென்ஷன்லக்கூட நம்மக்கிட்ட அவங்க கிட்ட இருந்த எவிடென்ஸ் எல்லாம் கொடுத்துட்டாங்க இல்லை. ரொம்ப நல்லவங்கம்மா”

“நல்லவங்கதாண்டி. ஆனாலும் எத்தனைதான் தாங்குவாங்க. தப்பே செய்யாம மேல மேல அவமானம்ன்னா யாரால்தான் பொறுத்துக்க முடியும்”

“நீங்க சொல்றதும் சரிதானம்மா, அக்காவும் அப்பாவும் எங்க, வீட்டுல சத்தமேக் காணும். நீங்க வேற அவங்களைப் பத்தி தைரியமா கம்ப்ளெயின் பண்ணிட்டு இருக்கீங்க”

“ரெண்டு பெரும் கார்த்தாலயே கிளம்பி எங்கயோ போனாங்க. நான் கேட்டாலும் பதில் சொல்லலை. இதுல வெளில போகும்போது எங்க போறேன்னு என்ன கேள்வி, நாங்க போற வேலை உருப்படாம போகனுமான்னு வேற எரிஞ்சு விழறாங்க. வெளிய போகும்போதுக் கேக்காம வந்தப்பறமா கேக்க முடியும். அப்படி ஒண்ணும் நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லது பண்ணப்போறதில்லை. நான் கேட்ட கேள்வியால உருப்படாம போனா நல்லதுதான்”, என்று ஆற்றாமையுடன் பொறிந்து கொண்டிருக்கும்போதே அவர்கள் வீட்டு வாயிற்கதவு திறக்கும் ஓசைக் கேட்டு இருவரும் திரும்பிப் பார்க்க, விமலாவும் அவள் அப்பாவும் உள்ளே நுழைத்தார்கள்.

“என்ன ரெண்டு பேரும் நாங்க இல்லாதப்போ எங்களைப் பத்தி பேசிட்டு இருந்தீங்களா?”, விமலா நக்கலாக கேட்டபடியே வந்து சோபாவில் அமர்ந்தாள்.

“எங்கடி போயிட்டு வர்றீங்க ரெண்டு பேரும்?”

“என்னம்மா புதுசா அதட்டலாம் செய்யற. பார்த்தீங்களாப்பா, சவுண்ட் எல்லாம் ஜாஸ்தியா வருது உங்க பொண்டாட்டிக்கு”

“சின்ன வயசுலேர்ந்தே உன்னை அடிச்சு வளர்த்துக்கனும்டி. அப்போ விட்டுட்டேன். அதுதான் இப்படி வளர்ந்து நிக்கற. எதுக்காக அவங்க வீட்டுக்கு வக்கீல் நோட்டீஸ் விட்டீங்க”

“அட இங்கப் பார்றா..... என்னை அடிச்சு வளர்க்கறதா..... காமெடி பண்ணாதீங்கம்மா. அதுக்குள்ளே வக்கீல் நோட்டீஸ் நியூஸ் வந்துடுச்சா. அப்பாவா, பையனா.... இந்த முறை யாரு போனைப் போட்டு குய்யோ, முய்யோன்னு அழுதாங்க....... பார்த்தீங்களாப்பா அவங்க பண்ணின வேலைய”

“யாருடி போன் பண்ணினது....... அந்தாள் மறுபடி போன் பண்ணி ஏதானும் கத்தினானா. ஏற்கனவே பண்ணினதுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும் திருப்பி பண்ணி இருக்கானா என்ன தைரியம் இருக்கணும்....”, விமலாவின் அப்பா அவளின் அம்மாவிடம் கத்த ஆரம்பித்தார்.

“ரெண்டு பெரும் கத்தாதீங்க. யாரும் இங்க போன் பண்ணலை. நீங்க ரெண்டு பேரும் நேத்து ராத்திரி பேசிட்டு இருந்ததை நான் கேட்டேன். அதைதான் ரூபாக்கிட்ட சொல்லிட்டு இருந்தேன். சொன்னாக் கேளுங்க. நல்லவங்க பொல்லாப்பு நமக்கு வேண்டாங்க. அவங்க நம்ம வழிக்கு வராம ஒதுங்கித்தானே போனாங்க. நீங்க ரெண்டு பேரும் ஏன் அவங்க பின்னாடிப் போய் இப்படி தொல்லைக் கொடுக்கறீங்க”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.