(Reading time: 11 - 21 minutes)

ய்.... வாயை மூடிட்டு இருக்கியா. எங்களுக்கே புத்தி சொல்ற அளவுக்கு வந்துட்ட. மொதல்லையே நம்மக் கேட்ட பணத்தை கொடுத்திருந்தா நான் ஏன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப் போறேன். காலைல எங்க போய் இருந்தேன்னு கேட்டியே. சொல்றேன் கேளு. டாக்டர்க்கிட்டதான் போயிட்டு வந்தோம். எனக்கு மன உளைச்சலால நெஞ்சு வலின்னு சர்டிபிகேட், மருந்து, மாத்திரை எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன். மொதல் வாட்டியே சமரசத்துக்கு வந்து இருந்தாங்கன்னா மூணு லட்சத்தோட போய் இருக்கும். இப்போ அது இதுன்னு சொல்லி பத்து லட்சம் வரை கறக்கலை என் பேரை மாத்திக்கறேன். நீ வாம்மா நாம அடுத்து என்ன பண்றதுன்னு யோசிக்கலாம். வீணா இதுங்கக்கிட்ட பேசி பிரயோஜனம் இல்லை. நேர்மை, நீதி, நியாம்ன்னு உருப்படாத யோசனை எல்லாம் சொல்லுவா உங்கம்மா. உங்க அம்மாவோட தாத்தா சுதந்திரப் போராட்ட வீரரா இருந்தது எனக்குத்தான் ரோதனையா இருக்கு. தன் வரைக்கும் இல்லாம, பேத்திக்கும் நீதி, நேர்மைன்னு சொல்லிக்கொடுத்து வளர்த்து விட்டுட்டாரு. இப்போ அது என் தலைல வந்து விடிஞ்சிருக்கு”, கத்தியபடியே விமலாவைக் கூட்டிக் கொண்டு அவரின் அறைக்கு சென்று கதவை மூடிக் கொண்டார்.

“ச்சே இந்த மனுஷன எல்லாம்..... மனுஷன்னு கூட சொல்ல முடியாது. தன் பொண்ணுதானே விஷயம் வெளிய வரும்போது கேவலப்பட்டு நிப்பான்னு கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேங்கறாரு. அப்படி என்னதான் பணப்பேய் இவரைப் பிடிச்சு ஆட்டுதோ.......”

“அம்மா நாம இதுல பண்றதுக்கு ஒண்ணும் இல்லமா, வேடிக்கைதான் பார்க்க முடியும். எப்படி இருந்தாலும் அப்பாவும், அக்காவும் என்ன நினைக்கறாங்களோஅதைத்தான் பண்ணப் போறாங்க. ஒண்ணு வேணாப் பண்ணலாம், இவங்களுக்கு நல்ல புத்தியைக் கொடுத்து அந்த குடும்பத்தை இவங்கக்கிட்ட இருந்து எப்படியாவது காப்பாத்துக் கடவுளேன்னு வேண்டிக்க வேணா செய்யலாம்”

“இல்லைடி தன் முயற்சி இல்லாதவங்களை அந்தக் கடவுள் கூட காப்பாத்த மாட்டார். என்னோட தாத்தா நாட்டு சுதந்திரத்திற்காக பாடு பட்டவர். அதுக்காக கொடுத்த தியாகிகள் பென்ஷன் கூட வேண்டாம்ன்னு சொன்னவர். அவர் வளர்த்த வளர்ப்பு நான். இவங்க இதுக்கு மேலயும் ஏதானும் அவங்களுக்கு கெடுதல் பண்ணனும்ன்னு நினைச்சாங்க நான் சும்மா இருக்கப் போறதில்லை. நம்ம குடும்ப மானமே போனாக் கூட பரவாயில்லை. எல்லா உண்மையும் சொல்லிடுவேன்”

“அம்மா என்னம்மா சொல்றீங்க. அக்கா விஷயம் வெளிய தெரிஞ்சா எவ்வளவு அசிங்கம். அதுக்கப்பறம் யாரும் நம்மளைத் திரும்பி கூட பார்க்க மாட்டாங்கம்மா”

“வேணாண்டி யாரும் வேணாம். இந்த ஊரே நமக்கு வேண்டாம். உனக்கும் இன்னும் ரெண்டு மாசத்துல படிப்பு முடிஞ்சுடும். நாம வேற ஏதானும் ஊருல வேலை தேடிட்டு போய்டலாம். எனக்கு இவங்க ரெண்டு பேர் பண்றதைப் பார்த்துப் பார்த்து வாழணும் அப்படிங்கற ஆசையே போய்டுச்சு. இது எல்லாத்தையும் தாங்கிட்டு இருக்கேன்னா அது உன் ஒருத்திக்காக மட்டும்தான். ஆனா இவங்கக்கூட இருந்தா உனக்கு கண்டிப்பா நல்லது நடக்காது. நாளைக்கு உன்னையும் அதே படு குழில தள்ளமாட்டாங்கன்னு என்ன நிச்சயம். பணத்துக்காக ரெண்டு பேரும் என்ன வேண்ணா பண்ணுவாங்க. நான் முடிவு பண்ணிட்டேன். நாளைக்கு நான் ஸ்ரீதர் வீட்டுக்குப் போய் பேசப்போறேன்”

“அம்மா நீ நல்லா முடிவு பண்ணிட்டியா, நீ அவங்க சைடு போய்ட்டா அப்பறம் திரும்ப அப்பா, அக்கான்னு நாம வர முடியாது”

“உனக்கு அவங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு வர்றது கஷ்டமா இருக்கா ரூபாம்மா. விஷயம் நமக்குப் பாதகமா நடந்தா, உனக்கு வெளில அசிங்கமாப் போய்டும்ன்னு நினைக்கறியா.......”

“நான் அப்படி எல்லாம் யோசிக்கலைம்மா. எனக்கு சின்ன வயசுலேர்ந்து நீங்கதான் எல்லாம். ஆனா என்ன இருந்தாலும் நம்ம அப்பா, அக்காதானே தப்பு பண்ணிட்டாங்க. கூட இருந்து சொல்லித் திருத்தலாமேன்னுதான். என்ன பெரிய அசிங்கம், ஒரு ஆறு மாசம் பேசுவாங்க. அதுக்கப்பறம் அடுத்த விஷயம் வந்தா இது மறந்து போய்டும். என் காலேஜ் முடியற வரைதான் பிரச்சனை. அப்பறம் நீங்க சொல்றா மாதிரி நாம வேற ஊருக்குப் போய்டலாம்.

“இல்லடா உனக்குத் தெரிஞ்சது இந்த ஒரு விஷயம் அதுக்கூட எதுனால கல்யாணம் நின்னுதுன்னு உனக்கு முழு விஷயம் தெரியாது. உனக்குத் தெரியவும் வேண்டாம். உங்க அக்காக்கும், அப்பாக்கும் நான் புத்தி சொல்லாமையா....... அவ பன்னெண்டாவது படிக்க ஆரம்பிச்சதுலேர்ந்து எனக்கு அதுதான் வேலை. நான் பேசி பேசித்தான் அவளை அடக்கி உக்கார வச்சேன். உங்கப்பாவும் அப்போ இந்த அளவுக்கு ஆடல. எப்போ ஆபீஸ் பணத்துல கையை வச்சு மாட்டி வேலை போச்சோ அப்போ பிடிச்சுது நமக்கு சனி. அதுக்குள்ள உங்கக்காவும் காலேஜ் மூணாவது வருஷம் வந்துட்டா. அவளுக்கு நல்ல வேலை கிடைக்கறவரை உங்கப்பாவோட ஆடம்பர செலவு எல்லாம் நின்னு போச்சு. அந்த ஆத்திரம் எல்லாம் சேர்ந்து எப்படியானும் பணத்தை சம்பாதிக்கனும்ன்னு வெறி வந்துடுச்சு. அதுதான் ரெண்டு பேரையும் சாக்கடைக்குள்ள தள்ளிடுச்சு”

“அப்படி என்னதான்ம்மா நடந்தது. அவங்க வீட்டுல கல்யாணத்தை நிறுத்தற அளவுக்கு?”

“அதெல்லாம் உனக்கு இப்போ தெரிய வேணாம்டா நாளைக்கு எப்படியும் அவங்க வீட்டுக்குப் போகப்போறோம் அப்போவே தெரிஞ்சுக்கோ. இப்போ உனக்கு விஷயம் தெரிஞ்சா நாளைக்கு உங்கப்பாவையும், அக்காவையும் பாக்கும்போது உன் மூஞ்சியே காட்டிக்கொடுத்துடும்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.