(Reading time: 28 - 56 minutes)

02. அனல் மேலே பனித்துளி - ரேணுகா தேவி

Anal mele pani thuli

"ன்ன மங்களம் நான் வந்தது கூட தெரியாம காலங்காத்தாலே அப்படி என்ன பலமான யோசனை?" என்றபடியே வாக்கிங் முடித்து முகத்தை துடைத்து கொண்டே, கையில் உள்ள காப்பி ஆறிப் போவது கூட தெரியாமல் யோசனையில் மூழ்கி இருந்த மனைவியை ஆச்சர்யத்துடன் நோக்கியவாறு வந்து அமர்ந்தார் சிவசண்முகம்.

"ஆ... இல்லைங்க ஒண்ணுமில்லை ...எல்லாம் நம்ம மதுகுட்டியை பத்தி தான்.."

"அவளுக்கென்ன, அவ ஜாலியா அவளுக்கு புடிச்ச வேலையை பாக்க போயிட்டா...ஹ்ம்ம் நம்ம தான் அவ இல்லாம அல்லாடிட்டு இருக்கோம்" என்றார் மதுவின் அப்பா.

"ஏங்க, நம்ம மதுக்கு இப்போ 22 வயசு ஆயிடுச்சே... அவ ஆசைப்பட்டானு பெங்களூர்க்கும்  அனுப்பியாச்சு.. இதோ சட்டுன்னு ஒரு மாசம் ஓடிருச்சு ....நாம ஏன் அவளுக்கு மாப்பிளை பாக்க ஆரம்பிக்க கூடாது... "என்ற மங்களத்தை யோசனையுடன் பார்த்தார் சிவசண்முகம்.

மங்களம் எதையும் பலமுறை யோசித்து பேசுபவர். அவர் சொல்லும் ஒவ்வொரு யோசனைக்கு பின்னும் பல காரணங்கள் இருக்கும். அதனாலேயே அவருடைய வார்த்தையை என்றுமே தட்டாமல் ஆமோதிப்பார் சிவசண்முகம்.

இப்போதும் மங்களம் சொல்வதில் ஏதேனும் அர்த்தம் இருக்கும் என்று அவர் புத்திக்கு உரைத்தாலும் மது இன்னும் அவருடைய கண்ணுக்கு சிறு பெண்ணாகவே தெரிந்தாள்.

"ஏம்மா, அவ சின்ன பொண்ணுடா... அவளுக்கு இப்போவே மாப்பிளை பாக்கனுமா?. அதுவும் இல்லாம மது ஒரு வருஷம் வேலைக்கு போகணும்னு சொல்லிருக்கா... உனக்கு இந்த எண்ணம் ஏன் திடிர்னு வந்தது.? அவ எப்படி ஒத்துக்குவா? "

நீங்களும் அவளுக்கு சப்போர்ட் பண்ணாதிங்க.. என் மனசுக்கு இப்போ அவளுக்கு மாப்பிளை பாக்கறது நல்லதுன்னு படுது. அதுவும் இல்லாம , நம்ம என்ன மாப்பிளையை பாக்கேட்லயா வெச்சுருக்கோம்... உடனே வெளிய எடுத்து கல்யாணம் பண்ணி வெக்க.. எப்படியும் இப்போ பாக்க ஆரம்பிச்சா, நம்ம எல்லோருக்கும் புடிச்ச மாதிரி மாப்பிள்ளை அமைய ஒரு 6 மாசமாவது ஆகும். அப்பறம் ஒரு நிச்சயத்தை முடிச்சிடோம்ன,, அவ இஷ்டப்படி 3 அல்லது 4 மாசத்துக்கு அப்பறம் கல்யாணத்தை வெச்சுக்கலாம். அவ ஆசைப்படி ஒரு வருஷம் வேலைக்கும் போனமாதிரி ஆச்சு.. நம்ம மாப்பிளை பார்த்த மாதிரியும் ஆச்சு. அது மட்டும் இல்லைங்க இந்த பசங்க அவளுக்கு கல்யாணம் பண்ணிட்டு அப்பறம் தான் நாங்க பண்ணிப்போம்னு சொல்றாங்க. இப்போவே பெரியவனுக்கு 27 வயசு ஆயிடுச்சு. இனியும்  லேட் பண்ணனுமா?" என்று நீளமாக பேசி முடித்தார் மங்களம்.

“ஆனா ஒரு குடும்பத்தை பார்த்துக்கற பக்குவம் அவளுக்கு இருக்குமா? கஷ்ட பட மாட்டாளா? ரொம்ப செல்லமா வளந்த பொண்ணாச்சே .." என்று கவலையுடன் கேட்டவரை முறைத்தார் மங்களம். சிவசண்முகம் அலெர்ட் ஆகி விட்டார் "அய்யயோ ஏதோ தப்பா சொல்லிட்டேன் போல இருக்கே. என் பொண்டாட்டி காளிகாம்பாள் ரூபத்துல இருந்து பத்ர காளிக்கு டிரான்ஸ்பர்  வாங்கிட்டாளே..ஆனா என்ன தப்பா சொன்னோம்...? சரி அதை யோசிச்சு டைம் வேஸ்ட் பண்ணாம சமாதன முயற்சில இறங்கிட வேண்டியது தான்" என்று எண்ணியவாறு, "என்னடா... நான் எதாவது தப்பா பேசிட்டனாம்மா?" என்றார்.

"ஹ்ம்ம்... எங்க வீட்டுலயும் எங்கள செல்லமா தான் வளர்த்தாங்க ...அப்போ உங்க அம்மாகிட்டே சொல்லிருக்கலாமே..ஐயோ அம்மா பாவம் ரொம்ப சின்ன பொண்ணு ... இன்னும் ஒரு 10 வருஷம் கழிச்சு கல்யாணத்தை வெச்சுக்கலாம்னு...இவரு பொண்ணு மட்டும் ரோசாப்பூ ... அடுத்தவன் பொண்ணு எல்லாம் கள்ளி பூவா ?"

"அய்யோ இது தான் விஷயமா... சரண்டர் தான் என்று மனதில் எண்ணியபடி... ச்சே ச்சே இல்லைடா...உன் சாமார்த்தியம் நம்ம பொண்ணுக்கு இருக்குமா... நீ என்ன அழகா குடும்ப பொறுப்பை எடுத்து நடத்துன..."

"ஏன் என் பொண்ணுக்கென்ன ? நாங்க எல்லாம் அவளை சாமர்த்தியமா தான் வளத்திருக்கோம்.. என்ன அப்பப்ப அவங்க அப்பா புத்தி வந்திடும் ..அது ஒன்னு தான் பிரச்சனை ...மத்தபடி அவ எல்லாம் சமாளிப்பா.." என்றவரை பார்த்து சற்று குழம்பியவர் இதுக்கு மேல நோ எதிர்வாதம் ....சேம் சைடு கோல் போட்டுட வேண்டியது தான் என்ற முடிவிற்கு வந்தவர்

"நீ சொல்றதும் சரியாதான் இருக்கு. அது சரி நீ சொல்லி அது எப்போ தப்பா இருந்துருக்கு. நான் இன்னைக்கே நம்ம தரகரை வர சொல்றேன் வீட்டுக்கு. மதுகுட்டியோட ஜாதகத்தை எடுத்து வை மா. தரகர் கிட்ட சொல்லி நல்ல அருமையான பையனா வீட்டோட மாப்பிள்ளையா பாக்க சொல்லணும் " என்றார் மதுவின் அப்பா.

மறுபடியும் அவரை முறைத்தார் மங்களம். இது என்ன இவ எப்ப பாரு முருங்கைமரத்துல ஏறிரா..

"என்னமா மறுபடியும் என்ன பிரச்னை..." என்றார்.

"ஒரு நல்ல ஆண்மகனுக்கு எப்பவும் தன்மான உணர்ச்சி கொஞ்சம் அதிகமா இருக்கும். நீங்க உங்க பொண்ணுக்கு பாக்கற மாப்பிளையை வீட்டோட இருக்க சொன்ன அது அடிபடாதா.. நமக்கு இவ ஒரு பொண்ணு தான் அப்படினா சரி ...அப்ப கூட அவருடைய பெத்தவங்களுக்கு கஷ்டமா இருக்காதா ? என் பொண்ணு மாமியாரும் புகுந்த வீடும் மெச்சர மருமகளா சொந்த பந்ததோட கலகலப்பா சந்தோசமா இருக்கணும். அதனால நல்ல குடும்பமா நல்ல பையனா பாருங்க ... அதை விட்டுட்டு வீட்டோட மாப்பிளை அப்படி இப்படின்னு சொல்லிட்டு இனி யாரும் என் முன்னாடி வரக்கூடாது சொல்லிட்டேன்... என்ன கொஞ்சம் இதே ஊருல இருக்கற மாப்பிளைய பாருங்க... பாக்கனும்னு தோனிச்சுனா சட்டுன்னு ஒரு எட்டு போயிட்டு வர மாதிரி இருக்கணும் " என்றவர் கண் சற்றே கலங்கியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.