(Reading time: 23 - 46 minutes)

ச்சி! தயவு செய்து ஃபீலிங்க்ஸ் காட்டதே! நல்ல காலத்திலே உன்னை பார்க்க முடியாது... இப்போ ரொம்ப குஷ்டம்!”, என்று நகைக்க...

“பேச்சை மாத்தாதே! என்கிட்ட எதையும் சொல்லாமே... உனக்குள்ளே வைச்சு புதைச்சுகிட்டு இருக்கியா?”, வாசுவோ விடாது கேட்க..

“ப்ச்.. அப்படி எல்லாம் எதுவும் இல்லை!! பப்பி லெட்டர் பார்த்த பின்னாலே ஏதோ ஒரு மாதிரி.... அது  பயமா... இல்லை எக்சைட்மென்ட்டா சொல்லத் தெரியலைடா!! நான் டிஸ்டர்ப்ட்டா இருந்தாலே... இப்படி நடக்கும் தானே மச்சி!!!”,

தன்மையாக பேசியவனின் பதில் வாசுவை மேலும் வருத்தியதே தவிர சமாதானப்படுத்தவில்லை! காரணம், இவன் வாழ்க்கையில் பப்பி வந்த பிறகு ஆர்யமனுக்கு இந்த கனவு தொல்லை வராமலிருந்தது... அதிலிருந்து மீண்டு விட்டானென்று நினைத்துக் கொண்டிருந்தால் இப்படி ஆகி விட்டதே என்று வருத்தம்!

“ப்ச்.. பயப்படாதே மச்சி! பெயிண்டிங் செய்தா ரிலாக்ஸ் ஆகிடுவேன்!  என் கனவு வந்து.. உன் ஐ. பி. எஸ். கனவை டிஸ்டர்ப் செய்துடுச்சு! யு க்ன்ட்டின்யூ! மாடிக்கு போறேன்!!!“,

ஆறுதல் சொல்ல ஆரம்பித்து..... கிண்டலில் முடித்தவன்..

மறவாது அங்கிருந்த பம்பரத்தை சுழல விட்டு செல்ல... அங்கிருந்து அகன்ற ஆர்யமனை பார்த்த படி...

‘நல்லா சமாளி’, என்று வேதனையுடன் சொன்ன படி படுத்த வாசுவிற்கு... இதே போல் ஓர் இரவு.... தன் மனதில் அடக்கி வைத்த துக்கத்தை... கவலையை.. ஆதங்கத்தை... மொத்தமாக கொட்டித் தீர்த்த ஆர்யமன் நினைவுக்கு வந்தான்....

ஆர்யமன் சென்னை ஐ.ஐ.டியிலும்  வாசு லயோலாவில் சேர்ந்திருந்த நேரம் அது... பள்ளிப் பருவத்தில் பிரிந்திருந்த இருவரும்.. ஒரே அறையில் தங்கி படிப்பை தொடரும் வாய்ப்பு அமைந்த சமயம் தான்...

தூக்கத்தில் நித்தி நித்தி என்று அலறித் துடித்த ஆர்யமனைக் கண்டு அதிர்ந்தே போனான் வாசு.

ஏன் என்றால் அவள் மறைந்த போன விஷயம் அறிந்த பொழுது... தன்னிடம் தொலைபேசியிலும்... கடிதத்திலும் அத்தனை தேற்றுதல் கொடுத்த தன் நண்பன் அல்லவா அவன்!!!

உண்மையில் தன்னை விட அவனைத் தான்  பெரிதாக பாதித்து இருக்கிறது....

உலகத்தை விட்டே சென்று விட்டவள்...  இன்னும் அழியாத சோகமாக இவன் அடி மனதில் பதிந்து போய் இருக்கிறாளே!!!

“இத்தனை கஷ்டத்தை மனசுல வைச்சிட்டு ஏன்டா ஒரு வார்த்தை கூட என்கிட்ட சொல்லலை!!!”, அழுகையுடனே வாசு அவனுடன் சண்டை போட...

கலங்கிய குரலில் ஆர்யமன், “அப்போ... எல்லாத்தையும் மனசுலே போடுறதை தவிர வேற வழியே எனக்கு தெரியலை மச்சி!”

“அனாதை பசங்கலா அன்பு இல்லத்தில் வளர்ந்தாலும்...  அங்கே இருந்த வரை அனாதைன்னு உணர்ந்ததே இல்லை.. அது ஒரு குடும்பம்.. சிவனேசன் அப்பா, கமலா அம்மா.. இவங்க அன்பாலே உருவான குடும்பம். அப்படியே இருந்திருக்கணும்டா மச்சி...

“இன்னைக்கு நீ என் பக்கத்தில் இருக்கிறது  போல.. பாண்டிச்சேரியில் ஸ்கூல்ல என் கூடவே இருந்திருந்தால்... இந்த நிலை எனக்கு வந்திருக்காது...

நிறைய படிக்கணும்.. பெரிசா சாதிக்கணும்ங்கிற கனவு.. அந்த கனவை ஒதுக்கியிருந்தா இந்த கெட்ட கனவே  வராம போயிருக்கும்..

“நீ கண்டிப்பா போகணுமா ஆரி”, எத்தனை முறை நித்தி கேட்டா! அதை காது கொடுத்திருக்கணும்!!! பெரிய ஸ்கூல், கம்ப்யூட்டர்ல எல்லாம் சொல்லி கொடுப்பாங்கன்னு ஆசைப் பட்டு அங்கே போனது தான் தப்பு மச்சி..

அந்த ஸ்கூல்ல கம்யூட்டர்.. இன்டர்நெட்.. இன்டோர் ஸ்டேடியம்.. இங்கிலீஷ் மீடியம்.. நேர நேரத்துக்கு சாப்பாடு.. இப்படி நான் எதிர்பார்த்த எல்லாமே கிடைச்சாலும்... நம்ம அன்பு இல்லம் மட்டும் கிடைக்கலை! அதுக்கு பதிலா எனக்கு கிடைச்சது ஏக்கமும்... தனிமையும் தான்....

அங்க நான் மட்டும் தான் அனாதை இல்லத்தில் இருந்தது வந்திருந்தேன்.. மத்தவங்க எல்லாம் சொந்தம் பந்ததோட வளர்ந்தவங்க.

அங்க தான்... தன் பிள்ளைகளை ஹாஸ்டல்ல விட்டு பிரிஞ்சு போக மனசில்லாம தவிக்கிற பெத்தவங்களை பார்த்தேன்.... அதைப் பார்த்தப்போ  எனக்கு வந்த ஏக்கத்திற்கு அளவே இல்லைடா...    

இப்படி எல்லாம் என்னை பெத்தவங்களுக்கு ஏன் தோணாம போச்சுன்னு ஏக்கம் வந்து... நான் அனாதையா உணர்ந்த தருணம் அது. அந்த பதினொரு வயசுலே அது பெரிசா பட்டது!

தீபாவளி பொங்கலுக்கு மொத்த ஹாஸ்டலே காலியா இருக்கும்! எல்லாரும் அவங்க அவங்க வீட்டுக்கு போவாங்க! நான் எங்க போவேன்?

நான் அன்பு இல்லத்தை விட்டு போனதுமே..  புதுசா ஒரு பையனை சேர்த்துட்டார் அப்பா. கிடைக்கிற நன்கொடையில் இழுத்து பிடித்து  இல்லம் நடத்துற கஷ்டம் எனக்கு நல்லா தெரியும்!  ஒவ்வொரு லீவுக்கும் அங்க வந்து அப்பாவுக்கு சங்கடம் கொடுக்கணுமான்னு ஹாஸ்டல்லே இருந்துடுவேன்..

ஹாஸ்ட்டல்ல நான் மட்டும் தனியா இருக்கிற சூழ்நிலையை கூட பழகிட்டேன்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.