(Reading time: 11 - 22 minutes)

21. விடியலுக்கில்லை தூரம் – ஜெய்

சாவித்ரி தன் கணவன் போதை மருந்து விற்கிறான் என்று கூறியவுடன் தேவி அதிர்ந்தாள்.  எதை எதிர்பார்த்திருந்தாலும் இப்படி ஒரு விஷயத்தை அவள் எதிர்பார்க்கவில்லை.  சாவித்ரியின் கணவன் மோசமானவன் என்று தெரிந்தாலும் இந்த அளவு மோசமாக நினைக்கவில்லை.  அதேப் போல் இப்படி ஒரு விஷயத்தில் நன்கு படித்த நல்ல வேலையில் இருக்கும் விமலா ஈடுப்பட்டிருப்பாள் என்பதையும் நம்ப முடியவில்லை.   தேவியைப் போலவே ரூபாவும் தன்  தந்தையா இப்படி என்று அதிர்ந்து தாயைப் பார்த்தாள். 

“என்னம்மா சொல்றீங்க.  போதைப் பொருள் விற்றாரா? இந்த விஷயம் வெளில வந்தா எத்தனை பெரிய பிரச்சனை வரும் தெரியுமா.  அதுவும் போலீஸ்ல மாட்டினாங்க.... குற்றத்தைப் பொறுத்து அவங்க வாழ்க்கை முழுக்க வெளிலக்கூட வரமுடியாது.  இதை ஏதோ சர்வ சாதாரணமா பொட்டிக்கடைல பன்னு திருடினார் அப்படிங்கறா மாதிரி சொல்றீங்க.  அதே மாதிரி ஸ்ரீதர் வீட்டுல இதை எப்படி இவ்வளவு ஈஸியா விட்டாங்க.  எத்தனை பெரிய அஃபென்ஸ்”, விஷயத்தைக் கேட்டுப்  பட படவென பொரிய ஆரம்பித்தாள்  தேவி.

“தேவிம்மா அமைதியா இரு.  அவங்களை முழுசா  சொல்ல விடு.  நம்ம கேள்விகளை அப்பறம் வச்சுக்கலாம்”,வரதன் கூற,

Vidiyalukkillai thooram

“இல்லை சார், இது சின்ன விஷயம் கிடையாது.  நானும் இவங்க சொல்ல ஆரம்பிச்ச உடனே ஏதோ பண விவகாரத்துல அந்த ஸ்ரீதர் வீட்டுல இவங்க ஏமாத்தி இருப்பாங்க அப்படின்னுதான் நினைச்சேன்.  இப்படி போதைப் பொருள்ன்னு பெரிய லெவல்ல இருக்கும்ன்னு நினைக்கவே இல்லை.  அந்த ஸ்ரீதர் குடும்பம் இதை ஏதோ சின்ன விஷயம் மாதிரி எப்படி விட்டாங்க”

“உங்க கோவம் புரியுதும்மா.  ஸ்ரீதர் வீட்டுல அப்போ  இந்த விஷயத்தை வெளிய சொல்லாம இருந்ததுக்குக் காரணம் நான் ஸ்ரீதர் தம்பியோட அம்மா கால்ல விழுந்து கெஞ்சிக் கேட்டுக்கிட்டதாலத்தான்.  என் கணவரும், பொண்ணும் தலை மேல அடிச்சு சத்தியம் செஞ்சாங்க....  அதை எல்லாம் எப்பவோ விட்டாச்சுன்னு”

“ஏம்மா உங்களுக்கே நீங்க சொல்றது அபத்தமா இல்லை, உங்க கணவர் பண்றது சின்ன வேலை இல்லை, போதை பொருள் வித்து இருக்காங்க.   இதுல அவர் சத்தியம் செஞ்சாராம் அவங்களும் நம்பி அவரை விட்டுட்டாங்களாம்.  இது வரை எத்தனை பேர் இவரால போதை மருந்துக்கு ஆளானாங்களோ.  ஸ்ரீதர் குடும்பம் போலீஸ்க்கு போகாதது ரொம்பத் தப்பு”

“அப்போ அந்தத் தம்பி குடும்பம் இங்க இல்லைம்மா.  அந்தத் தம்பி மட்டும்தான் சென்னைல இருந்தார்.  அவரோட அப்பாவும், அம்மாவும் காரைக்குடில இருந்தாங்க.  நிச்சயம் நின்னு எல்லாரும் கேக்க ஆரம்பிச்ச உடனே, இந்தத் தம்பிக்கு ஆறுதலா கொஞ்ச நாள் இருக்கலாம்ன்னு சென்னை வந்தாங்க.  ஸ்ரீதர் வீடும் எங்கள மாதிரி கீழ் நடுத்தர வர்க்கம்தான்.  பெரிய பண பலமோ, இல்லை ஆள் பலமோ கிடையாது.  மிடில் கிளாஸ்க்குன்னு ஒரு பயம் எப்பவுமே உண்டு.  சினிமாலதான் வில்லன் எத்தனை பெரிய ஆளா இருந்தாலும், ஹீரோ கீழ நிலைல இருந்தாலும் எதிர்த்து நிப்பாரு.  எதார்த்தத்துல அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பு இல்லை.  ஸ்ரீதர் ஒரு இடம், அவரோட குடும்பம் ஒரு இடம், தேவை இல்லாம பிரச்சனையை இழுத்து விட்டுக்க வேண்டாம்ன்னு நினைச்சு அவங்க விட்டுட்டாங்க.   ஸ்ரீதர் அப்பா  எங்கக்கிட்ட சொன்னதும் அதைத்தான்.... நாங்க சாதாரண குடும்பம், நீங்க இப்போ திருந்திட்டேன்னு சொன்னாலும் இதை எல்லாம் ஜீரணம் பண்ண முடியலை, அதனால இந்தக் கல்யாண ப்ரோபோஸலை இதோட நிறுத்திக்கலாம்ன்னு சொல்லி,  அவங்கக்கிட்ட இருக்கற எவிடென்ஸை எங்கக்கிட்ட கொடுத்துட்டுப் போய்ட்டாங்க”

“ஹ்ம்ம் அவங்க மேல தப்பில்லைன்னு சொல்ல மாட்டேன்.  ஆனா நீங்க சொல்றா மாதிரி இது மிடில் கிளாஸ் பயமாவும் இருக்கலாம்.  இதுக்கு விளக்கம் ஸ்ரீதர் வந்துதான் கொடுக்கணும்.    ஆனால் ஒரு விதத்துல, ஸ்ரீதர் குடும்பம் அப்படி இருந்ததாலதான் நீங்க தப்பிச்சீங்க.  இதே ஏதாவது அடாவடிக் குடும்பமா இருந்து இருக்கணும், உங்களை நேரா போலீஸ் ஸ்டேஷன் வாசல்லதான் நிறுத்தி இருப்பாங்க.  சரி நீங்க இப்போ சொன்ன கதை வரை உங்க கணவர் மேல தான் தப்பு இருக்கு.  இதுல விமலா எங்க இருந்து வந்தா?”

“ஆமாம் சார்.... அவங்க கலாட்டா பண்ணாததாலதான் தப்பிச்சோம்.  ஆனா இப்போ விமலா செய்யற வேலையைப் பார்த்தா அன்னைக்கே அவங்களை மாட்டி விட்டிருக்கலாம்ன்னு தோணுது.  அவ பண்ற வேலையை வாயால சொல்லக்கூட கூசுது”, என்று சொல்ல போதை மருந்தை விட பெரிய குற்றம் என்ன செய்திருப்பாள் என்று சாவித்ரியைப் பார்த்தாள் தேவி.

“அவ காலேஜ் சேர்ந்து ஒரு ரெண்டு மாசத்துல கடைக்கு  இடம் கிடைச்சு ஒரு மாதிரி எல்லாம் செட் பண்ண நாலு மாசம் ஆச்சு.  அப்பறமும் ஒரு ரெண்டு, மூணு மாசம்  ஓழுங்கா வியாபாரம் பண்ணி இருக்காரு.  இதுக்கு நடுலதான் விமலா கலாட்டா பண்ணி அவங்கப்பா அவளோட பேசினது.  இப்போ நான் சொல்லப்போறது எல்லாமே ஸ்ரீதர் அப்பா வழியா விஷயம் தெரிய வந்தப்பறம், இவங்க அப்பாக்கிட்ட நான் வற்புறுத்திக் கேட்டப்பிறகு அவர் சொன்னது.  முதல்ல இவர் மட்டும்தான் போதை மருந்து விற்பனைல  ஈடுபட்டு இருக்கார்.  ஆனா விமலா படிக்கற காலேஜ் பத்தி தெரிஞ்ச இவரோட நண்பர், அவ வழியா வித்தா இன்னும் சீக்கிரம் பணம் சேர்க்கலாம்ன்னு ஆசை காட்டி இருக்கார்.  இவருக்கு மொதல்ல அதுல விருப்பம் இல்லை.  ஆனா இவர் நினைச்ச அளவுக்கு  பணம் சேரலை.  இவர் வித்து கொடுக்கறதுக்கு கமிஷன் கிடைக்கும் அவ்வளவுதான்.   அது பெரிய அளவுல வரலை.  ஒரு 2 வருஷம் அவர் பார்த்து இருக்கார்.  விமலா காலேஜ் மூணாவது வருஷம் போய் ஒரு மூணு மாசம் இருக்கும்.  அவங்க காலேஜ்லேர்ந்து வட இந்திய  சுற்றுலா போக இருந்தாங்க.  கிட்டத்தட்ட பத்து நாள் டூர்.  அதுக்கு பீஸ்  பத்தாயிரம் ரூபாய்.  கடைல வர்ற பணம் வீட்டு செலவு, பொண்ணுங்க படிப்பு, கடை வைக்க வாங்கின கடன அடைக்கறதுன்னு சரியா இருந்தது.  அப்படியும் போதாம வரும்போது அவர் போதை மருந்து வித்து சேமிச்ச பணத்துல இருந்து எடுத்துக் கொடுத்து இருக்கார்.  ஆனா என்கிட்ட சொன்னது கடன் வாங்கி கொடுக்கறேன்,  பார்த்து செலவு பண்ணுன்னு.  நானும் பைத்தியக்காரி, ஒரு முறை பட்டும் அதை நம்பினேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.