(Reading time: 21 - 41 minutes)

ஜெயா பத்தி எதுவும் தெரிஞ்சதாம்மா?...”

“அவ தன் மனசுக்கு பிடிச்சவரை கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னா… உன் தோப்பனார் தான் அவளை நடை ஏத்தலையே… என்னை வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டே போனா அழுதுகிட்டு… அதுக்குப்பிறகு உங்க இரண்டு பேரை பத்தியும் எந்த தகவலும் இல்லை…” என இதுநாள் வரை தன் மனதிற்குள் இருந்த வருத்தத்தை கோகிலவாணி சொன்னதும், கிருஷ்ணா என்ன நடக்கிறது இங்கே என்ற பாவனையில் இருந்தாள்…

“என்னை மன்னிச்சிடும்மா… அப்பா இறந்தது எனக்கு தெரியாது… நான் உங்க பக்கத்துல இருந்தா அப்பாவுக்கு என்னை பார்க்கும்போதெல்லாம் வலிக்குமேன்னு தான் நான் ஒதுங்கியே இருந்தேன்… ஆனா அன்னைக்கு நான் உங்க இரண்டு பேரையும் கஷ்டப்படுத்தினதுக்கு இன்னைக்கு நல்லாவே அனுபவிக்கிறேன்ம்மா… இவளை பெத்ததால…” என வைஷ்ணவியை கைகாட்டி சொன்னார் வேதாத்திரி…

“வேதா… நீ பண்ணுறது கொஞ்சமும் சரி இல்லை… உன் மனசுக்கு பிடிச்சவ தான் வேணும்னு நீ அன்னைக்கு உன் வாழ்க்கையை முடிவு பண்ணின மாதிரி அவளும் அவ வாழ்க்கையை முடிவு பண்ணியிருக்குறா… அதுல என்ன தப்பு?...”

“நான் முறையா கல்யாணம் பண்ணினேன்ம்மா மாலதியை… நான் இவ… இவ…” என அதற்கு மேலும் பேசமுடியாது தவித்தார் வேதாத்திரி…

“நீ கல்யாணம் பண்ணி உன் வாழ்க்கையை ஆரம்பிச்ச… ஆனா அவ அவனுக்கு மனசுக்குள்ள இடம் கொடுத்ததால அவனையே ஆம்பிளையான்னு நினைச்சு வாழ்க்கையை ஆரம்பிச்சிருக்கா…” என ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த வைஷ்ணவியின் அருகே சென்றவர் அவளைப் பார்க்க,

அழுகையுடன் “பாட்டி…” என அவரை அணைத்துகொண்டாள் அவள்…

“அழாதம்மா… இந்த மாதிரி நேரத்துல அழக்கூடாது… அது வயித்தில இருக்குற குழந்தைக்கு நல்லது இல்லம்மா…” என அவளின் தலையினை அவர் கண்கலங்க வருடிக்கொடுத்தார்…

“நதி… வைஷ்ணவியை உன் ரூமுக்கு கூட்டிட்டு போ…” என்றதும் கிருஷ்ணாவும் அவளை அழைத்துச் சென்றாள்…

முதலில் தயங்கி பேசினாலும், பிறகு கிருஷ்ணாவிடம் அதிகமாய் ஒன்றி போனாள் வைஷ்ணவி…. இருவரும் கிட்டத்தட்ட ஓரே ஜாடையில் இருந்ததாலும் அதிகம் நெருக்கம் உண்டானது…

கிருஷ்ணாவும் அவளிடம் அக்காவிற்கே உரிய பாசமாய் இருக்க, இரண்டு மாதங்கள் கழிந்தது… அந்த இரண்டு மாதங்களும் வைஷ்ணவியை, கிருஷ்ணாவும் கோகிலவாணியும் பார்த்து பார்த்து கவனித்து கொள்வதைக் கண்ட வேதாத்திரியும், மாலதியும் தங்களது சுமைகளை அவர்கள் இருவரின் தோளில் இறக்கிவைக்க முடிவு செய்து, இரவில் படுக்கும்போது தூக்க மாத்திரைகளை உண்டு விடியும்போது உயிரற்ற உடல் கூடாய் கிடந்தனர்…

நெடுநாள் கழித்து சொந்தம் கிடைத்த சந்தோஷம் கூட நிலைக்காமல் நேர்ந்த வேதாத்திரி-மாலதியின் மரணம் கோகிலவாணியை மனமுடைய செய்ய, வைஷ்ணவியோ தன்னால் தானே தன்னைப் பெற்றவர்கள் இந்த முடிவை எடுத்தனர் என்ற குற்ற உணர்ச்சியில் பிரம்மை பிடித்தவள் போலே இருந்தாள்…

கிருஷ்ணா தான் கோகிலவாணியையும், வைஷ்ணவியையும் உடனிருந்து தேற்றினாள்… அப்போது ஒருநாள்,

“இங்க என்ன வைஷூ, பண்ணிட்டிருக்குற?...” என்றபடி வந்த கிருஷ்ணா, வைஷ்ணவியின் முகத்தில் கண்ட வேதனையைக் கண்டு வருந்தினாள்…

“என்னால தானக்கா அப்பாவும், அம்மாவும்…” என பேச முடியாது அழுதவளை கிருஷ்ணா சமாதானம் செய்த போது,

“என்னை அவர் ரொம்ப நேசிச்சார் அக்கா… அது மட்டும் இல்ல இங்க பாரு… கோவிலில் வச்சு, என் கையில் இந்த மோதிரத்தை போட்டுவிட்டு இனி நீ தான் என் மனைவின்னு எனக்கு சத்தியம் செய்து கொடுத்தார் அக்கா… ஒவ்வொரு செயலிலும் அவர் என்னோட கணவர் மாதிரியே நடந்துகிட்டார் அக்கா… அப்படிபட்டவருக்கு நான் மனைவியா மாறினது தப்பா அக்கா?...” என சிறுபிள்ளையாக கேட்டவளை அணைத்துக்கொண்டாள் கிருஷ்ணா…

“அவர் பேரு என்ன?... எங்க இருக்குறார்?...” என கேட்டதும், கிருஷ்ணாவின் அணைப்பிலிருந்து விலகியவள்,

“அவர் வெளியூரில் இருக்குறார் அக்கா… அவருக்கு நான் அவரோட வாரிசை சுமக்குறேன்னு தெரியாது….” என சொன்னதும் தூக்கிவாரிப்போட்டவளாக,

“அவரோட நம்பர் உங்கிட்ட இருக்குமே போன் போட்டு வர சொல்லுமா…” என சொல்ல,

“அவர் பிசினெஸ் விஷயமா வெளியூர் போறேன்னு சொன்னார் அக்கா… நீ எனக்கு போன் பண்ணினாலும் என் போன் ஸ்விட்ச் ஆஃப்ன்னு தான் வரும்… என் நம்பர் வச்சு என்னை ட்ரேஸ் பண்ண ட்ரை பண்ணுவாங்க என்னோட பிசினெஸ் எதிரிங்க… நான் அவங்களுக்கு தெரியாம தான் இந்த டீலிங்க் முடிக்கப் போறேன்… அதனால தான் சொல்லுறேன்… வெளியூரிலிருந்து வந்ததும் அம்மாகிட்ட விஷயத்தை சொல்லி அன்னைக்கு கோவிலில் யாருக்கும் தெரியாம மோதிரம் மாத்திகிட்ட மாதிரி இல்லாம, ஊரறிய உன்னை கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிட்டு போனார் அக்கா… அதான் அவருக்காக காத்திட்டிருக்கேன் அக்கா…” என சொல்லிய தங்கையின் வெகுளித்தனத்தை எண்ணி மனதினுள் அழுதவள், வெளியே எதையும் காட்டிக்கொள்ளாது இருந்துவிட்டாள்…

மூன்று மாதங்கள் வேகமாக கழிய, ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது வைஷ்ணவிக்கு… குழந்தையைப் பார்க்க சென்ற கிருஷ்ணாவிடம், “அக்கா… என் உடம்பு என்னமோ பண்ணுது அக்கா… என்னால பிழைக்க முடியும்னு தோணலை… என் பையனை அவர்கிட்ட ஒப்படைச்சிடு அக்கா… இன்னும் கொஞ்ச நாளில் அவர் வந்துடுவார்… அதுவரை என் பையனை பத்திரமா பார்த்துக்கோ அக்கா… என் பையன் அம்மா இல்லாத ஒரு குறையோட வளரக்கூடாது அக்கா… எனக்கு சத்தியம் பண்ணி கொடு அக்கா… அவனை அம்மாவா இருந்து வளர்ப்பேன்னு அவர் வர்ற வரை….” என மரணத்தின் பிடியில் இருந்து கேட்ட தங்கையிடத்தில் மறுக்க முடியாமல், சரி என்றாள் கிருஷ்ணா…

“அவர் பேரு, போன் நம்பர், போட்டோ எல்லாம் இதுல இருக்கு அக்கா… அடுத்த மாசம் அவர் வந்துடுவார் அக்கா… நீ போன் பண்ணி பேசி அவரை இந்த ஊருக்கு வர சொல்லுக்கா… அவருக்கு என்னோட பரிசா என் பையனை கொடு அக்கா… என் பையனை நீ… அம்மாவா….” என்ற வார்த்தையோடு அவள் உடலிலிருந்து உயிர் பிரிய, கதறி அழுதாள் கிருஷ்ணா…

ரண்டு வாரத்திற்குப் பிறகு, அறையில், அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் அழுதுகொண்டிருந்த கோகிலவாணியிடம், “இப்போ எதுக்கு நீ அழுதுட்டே இருக்குற?... முதலில் இந்த அழுகையை நிறுத்து…” என கிருஷ்ணா சொல்வதையும் காது கொடுத்து கேட்காமல் அவர் அழுது கொண்டே இருக்க,

“பாட்டி…” என கத்தினாள் அவள்…

“என்னடி பாட்டி?... என்ன பாட்டி… பாரு அந்த பச்சப்பிள்ளை முகத்தைப் பாரு… என்ன பாவம்டீ செஞ்சது அந்த பச்ச மண்ணு… இப்படி அப்பா யாருன்னு தெரியாம, பெத்தவளையும் பறிகொடுத்துட்டு அது இருக்குற கோலத்தைப் பாரு…” என புலம்பிய கோகியிடம்,

“யாரு சொன்னா அவனுக்கு அம்மா இல்லன்னு… நான் இருக்குறேன்… நான் வளர்ப்பேன் அவனை அம்மாவா…” என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றவள், வைஷ்ணவி கொடுத்த போன் நம்பருக்கு தொடர்பு கொண்ட போது முதலில் ஸ்விட்ச் ஆஃப் என்றே வந்தது… அடுத்தடுத்து அவள் செய்த தொடர் முயற்சியில், பத்து நாட்களுக்குப் பிறகு, போன் எடுக்கப்பட,

“நான் ருணதி… வைஷ்ணவியின் அக்கா…” என அறிமுகப்படுத்திக்கொண்டு,

“உங்களிடம் முக்கியமான விஷயம் பேசணும்… உடனே நீங்க மதுரை வாங்க…” என சொல்ல, அவனும் சில நிமிட யோசனைக்குப் பின் சரி என்றான்…

இரண்டு நாளில் அவனும் தனது தாயை மட்டும் அழைத்துக்கொண்டு வர, அவனுடன் வந்த அவனது தாயைக் கண்ட கோகிலவாணி அதிர்ச்சியுடன் ஆச்சரியமும் கொண்டார்…

“ஜெயந்தி…” என அழைத்தவரைக் கண்ட அவனின் தாயும், “அம்மா….” என்ற கூக்குரலோடு கோகியை அணைத்துக்கொள்ள, இருவரின் மீதும் பதிந்த பார்வையை சற்று நேரத்திற்கு பின் திருப்பிய ஜிதேந்தர், ருணதியைப் பார்த்ததும், “வைஷூ….” என்றவாறு அவள் அருகில் செல்ல, அவள் பின்வாங்கினாள்…

“வைஷூ?????...” என்ற கேள்வியோடு அவன் திகைத்து நிற்க, அவனிடம் வந்த கோகிலவாணி, “மாப்பிள்ளை… இது வைஷ்ணவி இல்ல… அவ அக்கா ருணதி…” என சொல்ல, புரியாமல் விழித்த ஜிதேந்தரிடம் நடந்தவற்றை சொன்னார் கோகிலவாணி…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.