(Reading time: 16 - 31 minutes)

33. கிருஷ்ண சகி - மீரா ராம்

ருணதியின் பிரச்சினையை கண்டுபிடித்து அதை சரி செய்ய காவேரி மகத்திடம் உதவி கேட்ட வேளையில், அவன் கோகிலவாணியிடமிருந்தும், வைஜெயந்தியிடமிருந்தும் உண்மைகளை தெரிந்து கொள்ள முடியாது திணறினான்…

அப்போது துருவனும் நதிகாவும் கடத்தப்பட, அப்போது ருணதிக்கு உதவி செய்வதாக சொல்லி, மகத்தினை தரக்குறைவாக கன்யா பேசி, காவேரியின் கோபத்தை கிளற, அவர், என் ராஜா வாழ்க்கையை சரி செய்யவும் என்னால முடியும் என சொல்ல, அவள் அதை தவறாக எடுத்துக்கொண்டு, ருணதியை மகத்திற்கு கல்யாணம் செய்து வைக்கப் போறீயா என கேட்டுவிட்டு, ஆத்திரத்தில் அவள் ருணதியின் தாலிச்செயினை கைகளில் எடுத்து “இந்த தாலி தான் உங்க கண்ணுக்கு தெரியலையா?..” என கேட்டதும், கன்யாவின் கைகளில் இருந்த அந்த செயினில் மகத்தின் பார்வை பதிந்தது…

ஆம் அது சொல்லியது அவனுக்கு அவளுக்கும் அவனுக்குமான உறவை… அவள் கழுத்தில் அவனிடமிருந்து பரிசாக வேண்டுமென்று அடம்பிடித்து அவள் கேட்டு வாங்கிக்கொண்டு சென்று பருவம் வந்ததும், அவனை நினைத்து அதை கழுத்தில் போட்டிருப்பதாக அவள் சில வருடங்களுக்கு முன்பு மகத்திடம் காதல் வயப்பட்டு சொன்னதும், நினைவுக்கு வர, அவன் சந்தோஷம் வானத்தையும் தாண்டியது…

krishna saki

அவன் அதை கவனிக்கும் முன் மறைத்துவிட்ட எண்ணத்தில் ருணதி இருக்க, அவன் அவள் மனதில் தான் மட்டுமே இன்றும் இருக்கும் நிறைவில், மதுரைக்கு விரைந்தான், அவளது வாழ்வின் கசப்பான நாட்களை தெரிந்து கொள்ள… அப்போது, வைஷ்ணவி விவரமும் கேசவனின் பிடிவாத கண்டிஷனையும் அவன் தெரிந்து கொண்டான்… அதனால் தான் அன்று விஜய் இருக்கும்போது பிரபுவிடமும், சதாசிவம் தாத்தாவிடமும், அந்த கண்டிஷனை இன்னொரு நாள் சொல்லுறேன் என்று சமாளித்தான்…

எந்த நிலையிலும் தனக்கு எல்லாம் தெரிந்து விட்டதாக அவன் அவளிடம் காட்டிக்கொள்ளவே இல்லை… இதோ இந்த நிமிடம் வரை… ஏனென்றால் அவனுக்கு தெரிய வந்தது அவளுக்கு தெரிந்தால் அவள் மனமுடைந்து போவாள் என அவனுக்குத் தெரியும்… அதனாலேயே பொறுமை காத்தான்… அவளாகவே சொல்லட்டும் என… அவள் சொல்லுவாள் என்ற நம்பிக்கையும் உடன் இருக்கவே அவன் அமைதி காத்தான்…

இதோ இன்று அந்த நம்பிக்கை ஜெயித்துவிட, அவன் அவளின் பாரம் இறங்கிய திருப்தியில் இருந்த போது, அவள் அவனிடம் சொல்லிவிட்ட நிம்மதியில் அழ, அவன் அவளை அழைத்தான்….

“கிருஷ்ணா…” இந்த ஒரு அழைப்பு போதுமா?... அவளின் இதயத்தை வருட?... அவள் இத்தனை நாள் மனதிற்குள் கொண்டிருக்கும் வலியை போக்க???..

எனினும் இந்த ஓர் வார்த்தை அவளுக்கு போதுமானதாய் இருந்தது…

அழுது அழுது ஓய்ந்திருந்த கண்களுடன் அவனைப் பார்த்தவளின் விழிகளில் காதல் பிரதிபலிக்க, அதை மென்மையாக தனக்குள் உள்வாங்கி அவன் ஒரு கணம் ஒரே ஒரு கணம் கண் இமைக்க,

அவள் சட்டென்று அடுத்த நொடியில், கன்யாவை மறந்து, இருக்கும் சூழ்நிலையை மறந்து, ஏன் தன்னையே மறந்து, “சகி………………..” என்ற கேவலுடன் அவன் தோள் சாய்ந்திருந்தாள்…

“என்னை மன்னிச்சிடுங்க சகி… மன்னிச்சிடுங்க…” என திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே அழுதாள் அவள்…

“அழுது தீர்த்திடடி… மனதில் தேக்கி வைத்த கண்ணீர் அனைத்தையும் கொட்டிவிடடி என் நெஞ்சில்… இறக்கி விடடி நீ சுமந்து கொண்டிருக்கும் பாரத்தை என் தோள்களில்…” என அவன் மனது ஊமையாக சொல்ல,

“பாட்டி கேட்டப்போ…. என்னால… என்னால…. சாரி சகி…. என்னால எப்படி சகி உங்களை மறக்க முடியும்?... வேற ஒரு வாழ்க்கையை அமைச்சுக்க முடியும்?... இந்த கண்ணுல, இந்த குழி விழுற கன்னத்துல, இந்த நெஞ்சில நான் என்னை தொலைச்சிட்டு எப்படி சகி என்னால இன்னொரு?....” என விழி உயர்த்தி, அவன் முகம் பார்த்த போது, அவள் முகத்தில் அவன் கண்ணீர் பட,

அவள் இமை அகற்றாது அவனைப் பார்த்தாள்….

“உங்களை அழ வச்சிட்டேன்ல சகி…. நான்…” என தன் தோள்களில் முட்டி அழதவளை, ஸ்பரிசத்தால் தடுக்காமல்

“இத்தனை நாள் தனியா அழுதியேடா… அப்போ உன் கூட நான் இல்லையே….” என வார்த்தைகளை கொண்டு அவன் அவளை தடுக்க, 

“இப்போ கூட என்னோட இல்லையேன்னு தான வருத்தப்படுற… உன்னோட இந்த அன்பு கிடைக்க நான் செஞ்சது தான் என்ன உனக்கு?... எதுக்குடா என்னை இப்படி உருக வைக்குற?... என் மேல எதுக்கு உனக்கு இத்தனை காதல்?...” என்றவளின் விழியே அவள் என்ன நினைக்கிறாள் என சொல்ல, அவன் அந்த காதலில் கரைந்தான்…

காதலில் கரைந்தவனை மேலும் தனது அருகாமையில் தனக்கும் தெரியாமல் கரைத்தாள் அவள் மீண்டும் அவன் தோள் சாய்ந்து…

டந்த நிகழ்வுகளை அனைவரிடமும் சொல்லிவிட்டு “வைஷ்ணவி போனதும், நானும் ஜெயந்தியும் எவ்வளவோ முயற்சி செய்யுறோம்தான், ருணதிக்கும், ஜித்திற்கும் கல்யாணம் செய்து வைக்க… ஆனா ஏனோ அது முடியாமலே போயிட்டிருக்கு இப்போ வரை…” என கோகிலவாணி ஆதங்கத்துடன் சொல்ல,

காவேரிக்கு அவரின் நிலையும் புரிந்தது… ருணதியின் நிலையையும் புரிந்து கொள்ள முடிந்தது… சின்ன வயதில் கல்யாணமே செய்துக்காமல் குழந்தைக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்த ருணதி காவேரியின் மனதில் பதிந்தாள்…

அவர் மனதில் மட்டும் அல்ல, அங்கிருந்த அனைவரின் மனதிலும் அவள் மேல் ஒரு மதிப்பு உண்டாயிற்று…

விஜய்க்கு, ஜித்-வைஷ்ணவி விஷயம் ஜெயந்தியின் மூலமாக தெரிந்திருந்த போதிலும், ருணதியின் உறுதி அவனை வியக்க வைத்தது… மகத்தும் ருணதியும் சேர வேண்டுமென மனம் வேண்ட, அதே நேரம் ஜித்தின் மேல் பல மடங்கு கோபமும் உண்டானது….

“என் பையன் மேல எனக்கும் கோபம் இன்னும் இருக்கு… ஆனா அந்த கோபத்தால யாருக்கு என்ன லாபம்?... என் பேரனும் என்னோட இல்லை… என் பையன் இருந்தும் இல்லாத மாதிரி… அவன் அப்பா அதுக்கும் மேல… நானும் எவ்வளவு தான் போராடுறது தனி மனுஷியா அந்த வீட்டுல… அப்படி அவர் கிட்ட பிடிவாதம் பிடிச்சு அவரோ வெறுப்புக்கு ஆளானது தான் மிச்சம்… அவர் போடுற கண்டிஷனுக்கு நானே சம்மதிக்கமாட்டேன்… அப்புறம் எப்படி ருணதி சம்மதிப்பா?...” என ஜெயந்தியும் தன் கவலையை சொல்ல,

காவேரிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை…

“கவலைப்படாதீங்க ஆன்ட்டி… கடவுள் எழுதி வைச்சது கண்டிப்பா நடக்கும்… உங்க பேரன் உங்களுக்கு கிடைப்பான்…” என பவித்ராவும் அந்நேரம் பட்டென்று சொல்லிவிட,

ஜெயந்திக்கு அவளை பிடித்துபோனது…

“என் பேரன் எனக்கு கிடைப்பானாம்மா?... நிஜமாவா?...” என சிறுகுழந்தையாய் அவர் அவளருகில் வந்து கேட்க,

“கண்டிப்பா ஆன்ட்டி… வருத்தப்படாதீங்க இனி… உங்க நல்ல மனசுக்கு கண்டிப்பா உங்க பேரனை உங்ககிட்ட கொடுத்துடுவார் கடவுள்…” என அவளும் புன்னகையுடன் சொல்ல,

“கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா… நீ சொல்லுறதை கேட்கும்போது… மனசுக்கும் ஆறுதலா இருக்கு உன் வார்த்தை….” என்றார் வைஜெயந்தி…

அவரின் பேச்சின் மூலம், பவித்ராவை வைஜெயந்திக்கு பிடித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட காவேரி, பவித்ராவை பாசத்துடன் பார்த்தார்…

அதே நேரம், பவித்ராவின் மீது ஒரு ஜோடி கண்கள் பதிய, அதை அவள் உணரவில்லை முதலில்… பின்னர் எதுவோ உள்ளுணர்வு உறுத்த, சட்டென்று திரும்பியவளின் பார்வை விஜய்யின் மீது பதிய, அவன் அப்போது தான் ஏதோ மும்முரமாக பேசுவது போல் பிரபுவிடம் கதையளந்து கொண்டிருந்தான்…

“என்ன இது… பார்த்த மாதிரி இருந்துச்சே… எனக்கே தான் அப்படி தோணுதா?...” என மனதிற்குள் நினைத்தவள் திரும்பி கொள்ள, மீண்டும் பவித்ராவின் மீது பார்வையை பதித்தான் விஜய் சிரித்துக்கொண்டே…

“டேய்… மச்சான்… என்ன நடக்குது இங்க?...” என பிரபு விஜய்யின் தோள் மீது கை வைத்து கிண்டலாக கேட்க

“ஏன்டா… உனக்கெப்படி தெரியுது?... இங்க தான இருக்குற?... அப்புறம் என்ன கேள்வி உனக்கு?...”

“டேய்… அவளுக்கு நான் அண்ண்ண்டா மச்சான்… நியாபகம் இருக்கட்டும்… பார்த்துக்கோ… என் தங்க்ச்சிகிட்ட வாலாட்டினன்னு வை…” என பிரபு மிரட்டியதும், வாய்விட்டு சிரித்தான் விஜய்…

அவனின் சிரிப்பு அனைவரையும் திரும்பி பார்க்க வைக்க, அவன் சட்டென்று, “எதுமில்லை…. நீங்க பேசுங்க…” என முகத்தினை மீண்டும் அமைதியாக வைத்துக்கொள்ள, “நல்ல பிள்ளைடா நீ…” என ஜெயந்தி திட்டிவிட்டு, மீண்டும் அவர்களுக்குள் பேச தொடங்க,

இங்கே பிரபு அவனிடம் கேட்டான்… “எதுக்குடா சிரிச்ச?...” என்று…

“பின்ன உன் மிரட்டல் உனக்கே காமெடியா தெரியலையாடா… அவ உன் தங்கச்சின்னு சொல்லிட்டு அதே வாயால என்னை மச்சான்னு சொன்னா சிரிக்காம வேற என்ன பண்ண சொல்லுற?...” என விஜய், வந்த சிரிப்பை அடக்கி சொல்ல, பிரபுவும், “உன்னை….” என்றபடி சிரித்தான்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.