(Reading time: 23 - 46 minutes)

15. கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - தங்கமணி சுவாமினாதன் 

Koncham periya kuzhanthaigalukkana kathai ithu

நிலவுக்கு ஒப்பான அழகோடு பிறந்த சிங்கபுரி இளவரசி அவளின் அழகுக்கேற்ப மதிவதனி என பெயர் சூட்டப்பட்டு வளர ஆரம்பித்தாள்.அவளின் தளிர் நடையும்,மழலை மொழியும்,அவள் அரண்மனைச் சுவற்றில் வண்ணக் கலவை கொண்டு கிறுக்கும் கோடுகளும் பெற்றவர்களாகிய மன்னர் அதிவீரனையும் ராணி ருக்மாவையும் மெய் மறக்கச் செய்து சந்தோஷப் படுத்தின.அவள் வளர வளர அவளோடு கூடவே அவளின் அழகும்,அறிவும்,பண்பும்,அடக்கமும் சேர்ந்தே வளர்ந்தன.பெற்றவர்கள் மீதும் மற்றவர்கள் மீதும் அவள் காட்டும்  அன்பும் பாசமும் மரியாதையும் அவளின் தனித்தன்மையை பறைசாற்றின.கல்வி கேள்விகளில் மட்டுமின்றி ஆண்களுக்கிணையான அளவு வாள் பயிற்சியும் போர்ப் பயிற்சியும் மதிவதனிக்குக் கைவந்த கலையாயிற்று.எல்லாவற்றுக்கும் மேலாக ஓவியக் கலையில் அவள் கொண்டிருந்த ஆர்வமும் திறமையும் பெரும் போற்றுதலுக்குரியதாய் இருந்தது.

பார்த்தவற்ரைப் பார்த்தபடி தத்ரூபமாய் வரையும் ஆற்றல் இறைவன் அவளுக்களித்த வரமாகவே பேசப்பட்டது.இத்தகு நற் பண்புகளோடு வளர்ந்து வந்த மதிவதனியின் கால்கள் அவ்வரண்மையில் படாத இடமே இல்லை என்று சொல்லலாம்.அப்படியொரு ஓட்டம் ஆட்டம் விளையாட்டு என வளர்ந்த மதிவதனிக்கு... பெற்றோர்களின் உயிரின் உயிராய் வளர்ந்து வந்த மதிவதனிக்கு... அவளின் ஏழாம் வயதில் சுந்தர பாண்டியன் தம்பியாய்ப் பிறந்தான்.தம்பியிடம் அளவற்ற பாசம் கொண்டிருந்தாள் மதிவதனி.என் நேரமும் தம்பியுடன் விளையாடுவதும்,அவனுக்கு ஆடை மாற்றுவதும் அழகு செய்வதும் உணவளிப்பதுமென சின்னத் தாயாகவே மாறிவிட்டாள்.காலம் உருண்டோடியது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

புவனேஸ்வரியின் "நினைத்தாலே இனிக்கும்..." - கல்லூரி காதல் கதை...

படிக்க தவறாதீர்கள்...

இப்போது மதிவதனிக்கு வயதுபதினெட்டு. பருவ மங்கையாகிவிட்ட மதிவதனி எழிலோவியமாக பார்ப்பவர் மனதை கொள்ளையடிக்கும் விதமாக பூரண நிலவென இருந்தாள்.தம்பி சுந்தர பாண்டியனுக்கு வயது பதினொன்று.அக்கா மதிவதனி மீது அளவு கடந்த பாசம்.இவர்கள் இருவர் மீதும் அதிவீர பாண்டியனும் ருக்மாதேவியும் பெரும் அன்பும் பாசமும்  கொண்டிருந்தனர்.பெற்ற பிள்ளைகள் மீது தந்தையும் தாயும் காட்டும் பாசம்  அதிசயமில்லைதானே? 

தம்பியோடு சேர்ந்து கொண்டு அரண்மனையை வளைய வரும் மகளைக் காணும்போதெல்லாம் மன்னன் அதிவீரனுக்கு தன் மகளின் அழகு அறிவு அடக்கம் அனைத்தும் பெரும் மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தின.அதே சமயம் மனதிற்குள் கவலையும் தோன்ற ஆரமபித்தது.திருமண வயதை அடைந்து விட்ட தங்கள் மகளை நல்ல வரனாய்ப் பார்த்து  ஒப்படைக்க வேண்டுமென்ற கவலையே அது.ருக்மா தேவியும் அவ்வாறே சொல்ல மதிவதனிக்கு திருமணம் செய்ய எண்ணம் கொண்டார் அதிவீரன்.

ஒரு நாள்...மன்னர் அதிவீரன் மகளையும் மகனையும் தேடி ஓவியக் கூடத்திற்குள் நுழைந்த போது ஒரு ஓவியத்தைப் பார்த்து தம்பியோடு சேர்ந்து மதிவதனி கைத்தட்டி ரசித்தபடி இருக்க...அன்பு மகளே..நானும் பார்க்கலாமா நீங்கள் இருவரும் பார்த்து ரசிக்கும் அந்த ஓவியத்தை எனக் கேட்ட படியே அவ்விடம் சென்று நின்றார்.

தந்தையே இதைப் பாருங்கள்....மகள் மதிவதனி சுட்டிக் காட்டிய ஓவியத்தைக் கண்ட அதிவீரன் அப்படியே திகைத்துப் போய்விட்டார்.அவ்வோவியத்தில் சுந்தர பாண்டியனின் கழுத்தில் ராணி ருக்மாதேவி வலது கையை சுற்றிப் போட்டிருக்க மன்னர் அதிவீரன்.. சுந்தர பாண்டியனின் இந்தப் புறமாய் நிற்பது போல் ஓவியம் ஒன்று வரையப் பட்டிருந்தது.அதைக் கண்ணுற்ற அதிவீரன் ஆஹா..ஆஹா..பிரமாதம்..எவ்வளவு பிரமாதமாய் தத்ரூபமாய் உள்ளது ?.மகளே மதிவதனி நீயா வரைந்தாய் இவ்வோவியத்தை..?

ஆமாம் தந்தையே...

ஆஹா பிரமாதம்..உன் தாய் இவ்வோவியத்தைக் கண்ணுற்றாறா?..

இல்லை தந்தையே..இப்போதுதான் வரைந்து முடித்தேன்...இதை வரைந்து முடிக்க என் அன்புத் தம்பிதான் பெரும் உதவியாய் இருந்தார் என்று சொல்லியபடியே சுந்தர பாண்டியனின் தலையைப் பாசத்துடன் தடவிக் கொடுத்தாள் மதிவதனி.

அக்கா..என்றபடியே தமக்கையின் மீது சாய்ந்து கொண்டான் சுந்தரபாண்டியன்  எனும் அந்த பதினோரு வயது பாலகன்.

அன்னேரம் என்ன இங்கே தந்தையும் மகளும் மகனுமாகப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்றபடியே உள்ளே நுழைந்தார் ருக்மாதேவி.

ராணி ருக்மாவும் மகள் வரைந்த அவ்வோவியம் கண்டு அதிசயத்துப் போனார்.மகளை நெஞ்சொடு அணைத்துக்கொண்டு..என் செல்ல மகளே..என் உயிரடி நீ..என் கண்ணே உனக்குப் பட்டுவிடுமோ என  அஞ்சுகிறேனடி என் கண்ணே...என்று மிகுந்த பாசதோடு சொன்ன போது ருக்மாவின் கண்களில் மட்டுமல்லாது மன்னர் அதிவீரனின் கண்களிலும் மகள் மீது இருந்த பாசத்தால் கண்ணீர் திரண்டது.

மகள் மீது கொண்டிருந்த அதீத பாசம் அவர்களை என் நிலைக்கு கொண்டு செல்லப் போகிறது என்று பாவம் அவர்களால் அப்போது அறிந்திருக்க முடியாது.

மகளிடம் அவளுக்குத் திருமணம் செய்ய தானும் அவளின் தாயும் முடிவெடுத்திருப்பதைப் பற்றித் தெரிவிக்க இதுதான் தக்க சமய என்று கருதிய அதிவீரன் மெள்ள பேச்சைத் தொடங்கினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.