(Reading time: 23 - 46 minutes)

நின்றுகொண்டே வேடிக்கை பார்க்கும் மக்களோடு ஒருவனாய்த் தானும் நின்றுகொண்டான் அவ்வாலிபன்.

அவன் பார்வை இங்கும் அங்குமாய்ச் சுழன்றது.ஏதோ போட்டிகள் நடப்பது புரிந்ததேயன்றி அவை எதற்காக நடக்கிறது என்பது அவனுக்குப் புரியவில்லை.மேடையில் வீற்றிருந்தவர்களைப்பார்த்த அவனால் அவர்கள் தரித்திருந்த கிரீடத்தை வைத்து அவர்கள் அரச குடும்பத்தினராய் இருக்கவேண்டும் என்பது புரிந்தது.

சிறிது நேரம் போட்டிகளைப் பார்த்த அவனுக்கு நடத்தப்படும் இவ்வளவு எளிமையான போட்டிகளில் கூட தோற்றுப்போய் தலை குனிந்து செல்லும் வாலிபர்களைப் பார்த்து அவனுக்கு வேடிக்கையாய் இருந்தது.அப்படியொன்றும் அப்போட்டிகள் எளிமையானவை அல்ல.ஒரு வேளை இவ்வாலிபனுக்கு அவை எளிதானதாக இருக்கலாம்.தானும் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பமும் அவன் மனதில் தோன்றியது.

அப்பொது அழகாய் அலங்கரிக்கப்பட்டு வரிசையாய் நிறுத்திவைக்கப்பட்டிருந்த யானைகளில் ஒன்று திடீரெனத்  துதிக்கையைத் தூக்கி கர்ணகடூரமாய்ப் பிளிறியது.அப்படிப் பிளிறிக்கொண்டே மக்கள் கூட்டத்தை நோக்கி ஓடிவந்தது.வரும் வழியில் போட்டிகளை வேடிக்கைப் பார்த்தவாறு நிறுகொண்டிருந்தவர்களில் ஒருவனைத் துதிக்கையால் தூக்கித் தரையில் ஓங்கி அடித்தது.இன்னொருவனைத் தூக்கி வீசியது.இன்னொருவனைத் தூக்கி காலடியில் போட்டு மிதித்தது.தாறுமாறாய் ஓட ஆரம்பித்தது அந்த மதம் பிடித்த யானை.அவ்வளவுதான் நொடியில் களேபரம் ஆயிற்று அவ்விடம்.மக்கள் உயிருக்கு பயந்து ஒலமிட்டபடி சிதறி ஓட ஆரம்பித்தார்கள்.அப்படி ஓடும்போது ஒருவர் மீது ஒருவர் இடித்து விழுந்து விழுந்தவர்களை ஓடுபவர்கள் மிதித்துக்கொண்டு ஓட எங்கும் ஒரே கூக்குரல்.மன்னர் அதிவீரன் வீரர்களே... ஓடுங்கள்..ஓடுங்கள்..அந்த யானையை அடக்குங்கள் என ஆனையிட வீரர்கள் யானையை நோக்கி ஓடினர்.ம்ஹூம்..யாராலும் அதனை அடக்க முடியவில்லை.வீரர்களைத் தூக்கி வீசியது.. மிதித்தது..பாகனின் அங்குசத்திற்கும் அது கட்டுப்படவில்லை.செய்வதறியாது திகைத்துப்போய் நின்றிருந்தார் மன்னர் அதிவீரன்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்...

போட்டிகள் நிறுத்தப் பட்டன.அப்போது வேடிக்கைப் பார்க்க வந்த அந்த வாலிபன் நின்றிருந்த இடத்தின் முன் போடப்பட்டிருந்த தடுப்பைத் தாண்டி மைதானத்தில் குதித்தான்.இப்போது யானை கிட்டத்தட்ட அவனை நோக்கி ஓடிவந்தது.அங்கு மிச்சமிருந்தவர்களின் பார்வை இவன் மீது சென்றது.அந்த களேபரமான நேரத்தில் கூட இவன் யார் நம் தேசத்தைச் சேர்ந்தவன் போல் இல்லையே என்ற எண்ணம் தோன்றி மறைந்தது.

தன்னை நோக்கி ஓடிவந்த யானையைக் கண்டு சிறிதும் அஞ்சாமல் வெகு துணிவோடு நின்றிருந்த அவன் நிமிடமும் தாமதிக்காமல் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து அதன் துத்திக்கையில் ஏறி இறுகப் பற்றிக்கொண்டான்.அவன் பிடி உடும்புப் பிடியாய் இருந்திருக்கவேண்டும்.யானையால் அவனை உதறி தூக்கி வீச முடியவில்லை.

மன்னர் அதிவீரன் மட்டுமல்ல ராணி ருக்மாவும் இளவரசன் சுந்தரனும் அவர்களோடு கூடவே இதுவரை யாரையும் எதனையும் பார்க்காமல் தலை குனிந்தபடி அமர்ந்திருந்த மதிவதனியும் அவ்வாலிபனின் இத்துணிச்சலான செயலைக் கண்கொட்டாமல் பார்த்தனர்.அடுத்து அவன் என்ன செய்வான் யானை அவனை என்ன செய்யப்போகிறது என பயத்தோடும் திகைப்போடும் பார்த்தவாறு இருந்த அவர்களும் மற்றவர்களும் அடுத்து அவன் செய்த செயலையும் அச்செயலால் விளைந்த விளைவையும் பார்த்துத் திகைத்து விக்கித்து வாய் மூடவும் மறந்து தன்னிலை மறந்து அமர்ந்திருந்தனர்.அப்படி என்னதான் செய்தான் அவ்வாலிபன்..?

யானையின் துதிக்கையைக் கெட்டியாய் உடும்புப்பிடியாய்ப் பற்றிக்கொண்ட அவ்வாலிபன் பிடியைக்கொஞ்சமும் தளர்த்தாமல் யானையின் தலைவரை ஏறினான்.பின்னர் தனது வலது கரத்தால் அதன் நெற்றியின் மையத்தில் ஓங்கிக் குத்தினான்.பின் சுட்டுவிரல் மற்றும் பெருவிரல் இரண்டையும் சேர்த்து தலையின் நடுவில் நிறுத்திவைத்து வைத்து ஒரு திருகு திருக யானை அப்படியே ஒருபக்கமாய் உடலைச் சாய்த்துக் கீழே விழுந்தது.தொப்பென்று யானையின் மீதிருந்து கீழே குதித்தவன் அதன் வலப்பக்கக் காதின் மேல்புறத்தை மேல் நோக்கி ஒரு இழுப்பு கீழ்ப்புறத்தைக் கீழ் நோக்கி ஓர் இழுப்பு இழுத்து அதன் காதில் ஏதோ சொல்ல சடெனக் கண்விழித்த யானை தூங்கி எழுவதுபோல் எழுந்து கட்டிய பசுவைப்போல் சாதுவாக நின்றது.அருகில் கிடந்த பசுந்தழையை எடுத்து அதனிடம் நீட்டினான் அவ்வாலிபன்.பவ்யமாய் 

துதிக்கை நீட்டி வாங்கி அதனை வாயில் போட்டுக்கொண்டது அந்த யானை.பயந்து ஓடிய மக்கள் மீண்டும் வந்து நின்று வாலிபனின் செயல்களை பார்த்தவாறு நின்றிருந்ததால் அவர்கள் இவனின் துணிச்சலையும் வீரத்தையும் கண்டு இவனைப் போற்றும் வகையில் ஆரவாரம் செய்தனர்.இந்த ஆரவாரம் தனக்கானது என்று அவ்வாலிபன் அறிந்தே இருந்தாலும் அமைதியாய் தான் முன்பு நின்றிருந்த இடம் நோக்கி நடந்தான்.

அவ்வீரனின் அவ்வாலிபனின் துணிச்சலையும் சமயோசிதத்தையும் அவன் யானையை அடக்கிய விதத்தையும் தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்த மன்னர் அதிவீரன் சுய நினைவுக்கு வந்தார்.ஆனால் மதிவதனியோ இன்னும் இயல்புக்குத் திரும்பாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.