(Reading time: 23 - 45 minutes)

பிரணதிக்கு தெரியவில்லை பிருத்விக்கு வரூன் மீதும் யுக்தா மீதும் இருப்பது கோபம் மட்டும் தானே தவிர வெறுப்பு இல்லை என்று... இன்னொன்றும் தெரியவில்லை யுக்தா வரூனின் இப்போதைய நட்பு பிருத்வியை குழப்பிக் கொண்டிருக்கிறதென்று... இது தெரியாமல் மீண்டும் அதே தவறு நிகழும் ஒரு வாய்ப்பை அவளுக்கு தெரியாமலேயே அவள் செய்தாள்...

தங்களது குலதெய்வக் கோவிலுக்கு வரூனையும் அவள் அழைத்தாள்... இங்கு சந்திப்பது பரவாயில்லை... உங்கள் குலதெய்வக் கோவிலுக்கு என்னால் எப்படி வரமுடியும் என்று வரூன் கேட்டதற்கு... நம்ம ஜோடியாக போய் அந்த அம்மனை வழிபடனும்... அப்போ தான் நம்ம கல்யாணம் எந்த தடையும் இல்லாமல் நடக்கும்... நீங்க வந்தே ஆகனும் வரூன் என்று அவள் அழைத்த போது வரூனாலும் மறுக்க முடியவில்லை... அவர்கள் கோவில் இருக்கும் முகவரியை கேட்டு வாங்கி கொண்டான்.

இந்த விஷயத்தை யுக்தாவிடமும் பிரணதி தெரிவிக்கவில்லை... யுக்தா ஏதாவது தடை போடுவாள்... அதன் மூலமாக ஜோடியாக அம்மனை வழிபடுவது தடைபடும்... அங்கே வரூன் வந்ததும் தன் அண்ணியிடம் உதவிக் கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தாள்.

எல்லோரும் சேர்ந்து கோவிலில் வழிபாட்டை முடித்ததும்... சிறிது நேரம் உறவினர் வீட்டில் தங்க போகும் போது கோவிலுக்கு அண்ணியை கூட்டிக் கொண்டு வரூனுடன் வழிபட்டு வரலாம் என்று நினைத்தாள்... எல்லோரும் திட்டமிட்டப்படியே கிளம்பினர்...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

VJ Gயின் "என் மனதை தொட்டு போனவளே..." - குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

ஆனால் அங்கு போனதும் தான் இது சாத்தியமா என்பது பிரணதிக்கு தோன்றியது... கோவில் ஊருக்குள்ளேயோ இல்லை ஊரை விட்டு கொஞ்சம் தள்ளியோ இருக்கும் என்று நினைத்தாள்... ஆனால் அந்த கோவிலை பார்த்ததும் தான்... தான் நினைத்தது நடக்கப் போவதில்லை என்பது பிரணதிக்கு புரிந்தது...

அந்த கோவிலில் ஆள் நடமாட்டமேயில்லை... தினம் பூஜை நடப்பதற்கான அறிகுறியே இல்லை... அது கோவில் போலவேயில்லை... சாமிக்கு மேற்கூரையில்லாமல் இருந்தது.... சுற்றி உள்ள இடங்கள் பச்சை பசேலென்று இல்லாமல்... கருவேல செடிகளும் அங்கங்கே ஓரிறு மரங்களும் என்று அந்த இடமே வித்தியாசமாக இருந்தது... இங்கே எப்படி வரூனோடு தனியாக வந்து அம்மனை வழிபடுவது... இங்கிருந்து ஊருக்குள் செல்ல எவ்வளவு தூரம் என்றுக் கூட தெரியவில்லை... வரூனை வர வேண்டாம் என்று சொல்லிவிடலாமா என்று யோசித்தாள்...

பிரணதிக்கு மட்டுமல்ல பிருத்வி யுக்தாவிற்கும் கூட இந்த கோவில் ஏன் இப்படி இருக்கிறது என்று தோன்றியது... பிருத்விக்கும் சிறுவயதில் வந்ததால் இந்த கோவிலைப் பற்றி தெரியவில்லை... யுக்தாவோ அவளின் சந்தேகத்தை கேட்டேவிட்டாள்...

"அத்தை இந்த கோவில் ஏன் இப்படியிருக்கு... தினம் வழிபாடெல்லாம் நடக்காது போல இருக்கு... சாமி கர்ப்பகிரத்துக்குள்ள இல்லாம இப்படி கூரை கூட இல்லாம இருக்கு... இந்த கோவிலுக்கு சாமி கும்பிட யாரும் வருவதேயில்லை போல..." என்று மதியிடம் தன் சந்தேகத்தை கேட்டாள்.

"அது  இந்த கோவில் இங்க சுத்தியிருக்கும் நாலு ஊரை சேர்ந்தவங்களுக்கு குலதெய்வமா இருக்குற அம்மன் மா... ரொம்ப வருஷங்களுக்கு முன்னாடி ஓலை கூரையால தான் இந்த கோவில் கட்டியிருந்தாங்களாம்... அப்போ நாலு ஊரை சேர்ந்தவங்களும் தினம் வருவாங்களாம் பூஜை நடக்குமாம்... வருஷா வருஷம் திருவிழான்னு எல்லாமே இந்த கோவிலில் நடக்குமாம்...

திடிரென்று என்ன ஆச்சுன்னு தெரியல... ஓலை கூரை ஒருநாள் தானா எரிஞ்சு போச்சாம்... ஏதோ தெய்வக்குத்தம்னு எல்லாரும் நினைச்சுக்கிட்டாங்களாம்... அப்புறம் கூரை போடும் போதெல்லாம் அது தானாகவே பத்தி எரியுமாம்... இப்போதைக்கு தெய்வக்குத்தம் அதனால கோவில் கட்ட வேண்டாம்னு முடிவு பண்ணிட்டாங்களாம்...

அப்புறம் அவங்கவங்க ஊர்ல தனியா இந்த அம்மனுக்கு கோவில் கட்டிக்கிட்டாங்களாம்... அப்புறம் இந்த கோவிலுக்கு வர்ற்வங்க எண்ணிக்கை குறைஞ்சு போச்சு... திருவிழா கூட அவங்க கட்டின கோவிலுக்கே செய்ய ஆரம்பிச்சாட்டாங்க...

எப்போதாவது இந்த பக்கம் போறவங்க வர்றவங்க கற்பூரம் ஏத்திட்டு போறது... அப்புறம் நம்மல மாதிரி இந்த கோவில் யாருக்கெல்லாம் குலதெய்வமோ அவங்க எப்போதாவது பூஜை பண்றதோட சரி... பூசாரியும் எப்போதாவது வந்து தான் பூஜை செய்வாரு....

இதெல்லாம் உங்க மாமா தான் எனக்கு சொன்னாரு... இப்பக் கூட உங்க மாமா ஊருக்குள்ள போய் பூசாரியை கூட்டிக்கிட்டு வரத்தான் போயிருக்காரும்மா... பூஜை சாமான் கூட இங்க கிடைக்காதுன்னு நாம வரும்போதே வாங்கிட்டு வந்துட்டோம்.." என்று மதி விளக்கம் கொடுத்தாள்.

"அப்போ கோவில் கட்டனும்னு அந்த பெரியவர் பணம் வாங்கிட்டு போனாரே எதுக்கும்மா..." என்று பிருத்வி அவன் சந்தேகத்தை கேட்டான்.

"அது இப்போ தான் குறி சொல்றவங்களை வச்சு குறியெல்லாம் கேட்டு இந்த கோவிலை திரும்பவும் கட்ட ஊர்காரங்க எல்லாம் முடிவு பண்ணியிருக்காங்களாம்... அதுக்கு தான் நன்கொடை கேட்டு வந்தாங்க பிருத்வி.." என்றாள் மதி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.