(Reading time: 12 - 24 minutes)

நான் அதே ஃபீல்ட்ல கோர்ஸ்க்கு யோசிச்சுட்டு இருக்கேன்பா, ஒரு வருஷம் இந்த வேலையெல்லாம் எப்படி நடக்குதுன்னு கொஞ்சம் பேசிக் தெரிஞ்சு வச்சுக்கிட்டேன்னா, அந்த எக்ஸ்பீரியன்ஸோடு அடுத்த வருஷம் கோர்ஸ் ஜாயின் செய்யறது நல்லாயிருக்கும்னு மனசில ப்ளான் இருக்கு, ஆனா இதை ரொம்ப டீடெயில்டா கத்துக்கணும்னா அப்ராட்ல தான் இந்த கோர்ஸ் போணும்……..

 "அதுக்கென்ன எங்க போயி படிக்கணுமோ படி, என்னன்னாலும் எங்கிட்ட கேளு என்ன? மனசிலயே வச்சுக்கிட்டு இருக்காத?" என அவன் தலையை வருடினார் அவர்.

“சரிப்பா” என்றவனின் புன்னகையில் அவர் மனம் மலர்ந்திருந்தது.

 அவர்கள் வேலைக்கு சேர்ந்திருந்த பாக்டரியில் ரூபனோடு கூட சந்தோஷ் மற்றும் இரண்டு நண்பர்களும் சேர்ந்திருந்தனர். அது சந்தோஷுடைய உறவினருடைய பாக்டரி. மோட்டர் வாகனத்திற்கான சிறு சிறு பாகங்களைத் தயாரிக்கும் வேலை அங்கு நடைப் பெற்றுக் கொண்டிருந்தது. கல்லூரியில் படிக்கும் போதே ஏற்கெனவே ஓரிரு முறை சந்தோஷ் ரூபனை இங்கு அழைத்து வந்திருந்தான். அப்போதே ரூபனுக்கு அந்த வேலை மிகவும் சுவாரசியமாக தோன்றியிருந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

 கல்லூரி நாட்களிலும் இருவரும் பெரும்பாலும் அந்த பேக்டரி குறித்தே பேசி வந்தனர். தனக்கு அந்த வேலையைக் கற்றுக் கொள்வதில் இருக்கும் ஆர்வத்தை தெரிவித்ததும் சந்தோஷ்தான் இந்த வேலையை அவனுக்காக ஏற்பாடு செய்தது. ரூபனுடைய நோக்கம் வேலையைக் கற்றுக் கொள்வதாக இருந்ததால் குறைவான சம்பளத்தை அவன் பெரிது படுத்தவில்லை.

 தனக்கு விருப்பமான விஷயம் என்பதால், அதைக் குறித்த பல்வேறு விபரங்களை சேகரித்தவனுக்கு ஒரு சில கோர்ஸ்கள் குறித்த விபரங்களும் தெரிய வந்தன. ஆனால்,அதிலேயே பல்வேறு விதமான பிரிவுகளும் அவற்றிற்கான வித விதமான கோர்ஸ்களும் இருந்ததால் குறிப்பிட்டு எதைக் கற்றுக் கொள்வது என்று முடிவுச் செய்ய இந்த ஒரு வருடக் காலம் உதவும் என அவனுக்கு தோன்றியது. 

 அவன் வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதமாகியிருந்தது, வேலை அனுபவமில்லாதவர்களை சேர்த்திருந்தாலும் மிக விபரமாக சந்தோஷின் மாமா ஒரு வருடத்திற்கான காண்டிராக்டில் அவனை கையெழுத்திடச் செய்திருந்தார். இவனோடு சேர்ந்திருந்த மற்ற இரண்டு நண்பர்களுக்கும் ஓரிரு வாரங்களில் வேலை சலித்துப் போயிருக்க காண்டிராக்ட் என்னும் பெயர் கேட்டதும் சத்தமே இல்லாமல் வெளியேறி விட்டனர். சந்தோஷும் தான் மேற்படிப்பு படிக்கப் போவதாக சொல்லி சென்று விட்டான். ஆனால் தனக்கு மிகவும் பிடித்த வேலையென்பதாலோ என்னவோ ரூபனுக்கு அங்கே சலிப்பு தட்டவேயில்லை. அதைப் போல அவனுக்கு அங்கே அதிக வேலைப் பளு கிடையாது, பொறுப்பாக இருந்து அங்கு இருக்கும் ஸ்டாக்குகளை பார்வையிடுவது தான் அவனுக்கு கொடுக்கப் பட்டிருந்த வேலை. அவன் அதோடு நிற்காமல் வேலை நுணுக்கங்களை நின்றுக் கவனிப்பான். அவனுக்கு மெது மெதுவாக பல விஷயங்கள் புரிபடத் தொடங்கியது.

 வீட்டில் மீதி நேரங்களில் அனி, ஜீவனின் பிரச்சினைகளுக்கு பஞ்சாயத்து செய்வது அவனுக்கு வழக்கமாயிற்று. அவர்கள் இருவரின் சண்டைகளை கிட்டே இருந்து பார்த்து பார்த்து அவனுக்கு அவர்கள் மேல் எரிச்சல் வருவதற்கு பதிலாக அவர்கள் பிரண்ட்ஷிப் பார்த்து பொறாமை வந்தது தான் உண்மை.

 என்னதான் இருவரும் சண்டைப் போட்டாலும் இருவரும் ஒருத்தரை ஒருத்தர் பார்க்காமல் சண்டைப் போடாமல் ஒரு நாளும் இருந்தது கிடையாது. நான் தானே என் வீட்டில் சின்னப் பிள்ளை, இவள் என்ன என் அம்மாவிடம் ,அண்ணனிடம் வந்து செல்லம் கொஞ்சுவது என்பது தான் ஜீவனுக்கு கோபம் என்று அவனுக்கு புரிந்தது. அதற்கேற்றபடி தீபனிடமும், அம்மாவிடமும் அவள் கொஞ்சல் கொஞ்சம் கூடுதல் தான். இவனைக் கோபப் படுத்துவதற்காகவே அவள் அப்படி செய்கிறாளோ என்று அவனுக்கு தோன்றும்.

 ப்படியே பல மாதங்கள் கடந்திருந்தன. அனி அவனை மிகவும் பாதித்துக் கொண்டிருந்ததைப் போல அவனுக்குத் தோன்றியது. அவளை அறியாமலே எல்லோரிடமும் வெளிப்படும் அவளது அக்கறை அவனை வெகுவாக ஈர்த்துக் கொண்டிருந்தது. அவனும் நிறையப் பெண்களைப் பார்த்திருக்கிறான். அலங்கரிப்பில், பேச்சில், தன்னை எல்லோரும் கவனிக்க வேண்டும் என்ற முனைப்பில் எல்லோரிடமும் ஒரு வெளிவேடத்தனமான தன்மை இருப்பதாகவே அவனுக்குத் தோன்றும்.ஆனால், அனியோ அத்தனை பேரிலும் மிகவும் வித்தியாசமானவளாக இருந்தாள்.

 ஒருவேளை நாமும் தீபன், ஜீவனைப் போல இங்கேயே இருந்து சேர்ந்து பேசி விளையாடி வளர்ந்திருந்தால் நமக்கு அவளைப் பார்க்க வித்தியாசமாக தெரிந்திராதோ? எனப் பலமுறை தன்னைத் தானே அவன் கேட்டுக் கொண்டிருந்தான். பதில் தான் அவனுக்கு கிடைக்கவில்லை.அந்த களங்கமற்றக் கண்களில் தன்னைத் தொலைத்துக் கொண்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. இன்னும் சில மாதங்களில் தன்னுடைய 2 வருடப் பயிற்சி மற்றும் படிப்பிற்காக தான் வெளி நாடு செல்ல வேண்டி இருக்கும். இந்த இரண்டு வருடப் பிரிவு அவளைக் குறித்த தன்னுடைய எண்ணம் சரியா தவறா என தீர்மானிக்க உதவும் என்று நம்பினான்.

 ஆனால், அப்படி அவனுக்கு அவகாசம் கொடுக்க விரும்பாமலே அவன் மனதில் இருப்பது என்னவென வெளிச்சம் போட்டுக் காட்டவென்று வந்தது ஒரு நாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.