(Reading time: 16 - 31 minutes)

மூங்கில் குழலானதே – 12 - புவனேஸ்வரி

Moongil kuzhalanathe

நேரம்.! இன்பத்தில் இருப்பவருக்கு விருந்தாகவும், துன்பத்தில் வாடுபவருக்கு மருந்தாகவும் அமைகிறது. ப்ரபஞ்சத்தையே கட்டிவைக்கும் நேரம் இதனை, கட்டிப்போட யாருமில்லை.! கடிகாரம் நின்றுவிட்டால் நேரம் நகராமல் நின்றிடுமா என்ன ? நிச்சயம் இல்லை  என்பதுதான் நிஜம். எனினும் நாம் நேரத்துக்காக காத்திருக்கிறோம். நல்ல நேரம், கெட்ட நேரம் என்று காலத்தை கணிக்கிறோம். சில நேரம் அன்பிற்குரியவரை சந்திப்பதற்கு கூட நேரத்தை வைத்து தீர்மானிக்கிறோம்..ஆனால் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? அன்பிற்காக வளைந்து கொடுக்குமா நேரம் ? ஒரு பொழுது மனதில் நேசம் எழுகிறது, அதே நேசம் மறு பொழுதே மாறிவிடும் தன்மைத்தானே வாழ்க்கை ? இதை அறிந்தும் புரிந்தும் நேரத்தை நம்பி வாழ்க்கையை திட்டமிடும் மனிதன் முட்டாளா ? புத்திசாலியா? சிந்திக்கிறேன் சகிதீபன்.

ஹோ வந்தது பெண்ணா? வானவில் தானா?”என்று பாடலை ஹம் செய்துகொண்டே காலை உணவு உண்பதற்காக டைனிங் ஹாலுக்கு வந்தான் அபிநந்தன்.. எப்போதும் போல கோட்சூட் அணியாமல் வெள்ளை நிற டீ ஷர்ட்டும், நீல நிற ஜீன்ஸும் அணிந்து வந்தவன், வழக்கம் போலவே நந்திதாவை மயக்கினான். அவன் உர்ரென இருந்தாலே அவள் மனதில் காதல் கரைபுரண்டு ஓடும், இதில் அவன் மயக்கும்படி புன்னகைத்துகொண்டு இருக்கவும் அவள் நிலையை சொல்லவும் வேண்டுமா?

“ சத்திய சோதனை நந்து உனக்கு” என்று தனக்குத் தானே கூறி கொண்டு முகத்தில் எந்தவொரு சலனமும் இல்லாதபடி வைத்துகொண்டாள். தங்களுடன் பேசிக்கொண்டிருந்த மருமகளின் திடீர் அமைதியைக் கண்டு வேணுவும் அருண் தாத்தாவும் நிமிர்ந்து பார்த்தனர். ஸ்டைலாய் அவர்களை பார்த்து புன்னகைத்தான் அபி.

“ டேய் வேணு” – அருண் தாத்தா

“ அப்பா..சொல்லுங்கப்பா”

“ கொஞ்ச நாளாக உன் மகன் உன்னோட தானே தூங்குறான்”

“ஆமா ஏன்பா?”

“ இல்ல, திடீர்னு முனி ஏதும் அடிச்சிருச்சோன்னு டவூட்டு” என்றார் தாத்தா கிண்டலாய்.

“ தாத்தா…” என்று நந்திதா அடிக்குரலில் சீறிட

“ ப்பா..இன்னைக்கு சட்னி காரமாய் இருக்கே” என்று கூறினார் தாத்தா. அவர்களை பேசுவது எதுவும் காதில் வாங்கிக்கொள்ளாமல் வந்தமர்ந்தான் அபி. பெரியவர்களின் முன்னிலையில் நந்து அவனிடம் சகஜமாய்த்தான் பேசுவாள். அதனாலேயே அவன் அடிக்கடி அவர்களின் முன் அவளிடம் கொஞ்சி பேசி காரியத்தை சாதித்து கொள்வான். இப்போதும் கூட,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா.வெ'யின் "கண்களின் பதில் என்ன? மௌனமா?" - அது பேசிடும் நாளும் வந்திடுமா..??

படிக்க தவறாதீர்கள்...

“ நந்து, சீக்கிரம் இட்லி எடுத்து வைம்மா .. நான் ஏர்போர்ட் கிளம்பனும்” என்று கூறி கண்ணடித்தான்.

“ ஹும்கும் இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.. ட்ராமாவா போடுறிங்க? சகி வரட்டும் இருக்கு” என்று கருவியவள், மௌனமாய் இட்லி எடுத்து வைத்தாள்.

“ ஆமா நீ சாப்பிட்டியா?”

“ம்ம்.. நீங்க முதலில் சாப்பிடுங்க!”

“ப்ச்ச் கன்சீவ்வா இருக்குற பொண்ணு நேரத்துக்கு சாப்பிடனும்னு உனக்கு தெரியும்ல.. உன்னை கவனிக்காம எதுக்கு என்னை கவனிக்கிற நீ?” என்றவன்

“ இங்க வா உட்கார்” என்றப்படி அவளுக்கு உணவு பரிமாற ஆரம்பித்தான். வேணுவும் சாரதாகவும் தங்கள் மகனின் மனைவி மீது காட்டும் பாசத்தை கண்டு நெகிழ்ந்து கொள்ள, தாத்தா வானத்தை எட்டி பார்ப்பது போல பாவனை செய்தபடி அவனை கேலி செய்தார்.

“ டேய் .. இப்படி திடீர்ன்னு நல்லவனாக மாறிட்டா நான் அந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல் இந்த சின்ன வயசுல பொட்டுன்னு போயிட போறேன்” என்றார் அவர்.

“ என்னப்பா இப்படி பேசுறிங்க ? உங்களுக்கு ஒன்னும் ஆகாது” என உடனே பதறினார் வேணு.

“ அட சும்மா இருடா..இவன் வேற அப்பா பாசத்துல வாரணம் ஆயிரம் சூர்யாவையே மிஞ்சிடுவான்.. அம்மா சாரதா”

“சொல்லுங்க மாமா”

“ தயவு செஞ்சு உன் புருஷனை டிவி சீரியல் மட்டும் பார்க்க விடாதே! ஏற்கனவே ஒவரா மனச நனைக்கிறான்” என்று சிரித்தார் தாத்தா.. வழக்கம் போல கணவருக்கும் மாமனாருக்கும் நடுவில் நடக்கும் செல்ல சண்டையை சாரதா ரசிக்க, சாப்பிட்டு கொண்டிருந்த நந்திதா, தனது இடதுகையை பற்றியிருந்த அபியின் கையை உதறிவிட்டு குளியலறைக்குள் ஓடினாள். அறையில் இருந்து அவள் வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டது. அவள் வாந்தி எடுக்கவும் பதட்டத்தில் தன் தாயிடம் எரிந்து விழுந்தான் அபிநந்தன்.

“ என்னம்மா இவ இன்னமும் வாந்தி எடுக்குறா?”

“டேய் கற்பமாக இருக்கும்போது இதெல்லாம் சகஜம்.. படிச்சவன் தானே நீ? இப்படி கேள்வி கேட்குற?”

“ அதுக்குன்னு இப்படியா? பாவம்மா அவ.. ஒவ்வொரு தடவையும் வாந்தி எடுத்துட்டு எப்படி சோர்ந்து போகுறா தெரியுமா?”

“ஆமாடா ராவும் பகலுமாய் ஹாஸ்ப்பிட்டலையே கட்டி அழுகுற உனக்கு தெரிஞ்ச அளவுக்கு எனக்கு மருமகளைப் பற்றி தெரியல பாரு.. நல்லா இருக்கு உன் பேச்சு”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.