(Reading time: 16 - 32 minutes)

வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 05 - வத்ஸலா

Varthai thavarivitten Kannamma

'டியட்...' அது அருண் எப்போதும் எல்லாரிடமும் சாதரணமாக உச்சரிக்கும் ஒரு வார்த்தைதான். இந்த வார்த்தை அவளை பாதித்ததோ இல்லையோ, அது பரத்தை சுருக்கென தைத்தது நிஜம். அதற்கு மேல் அவளது கண்களில் தேங்கி நின்ற கண்ணீர்!!!

நின்றே விட்டான் பரத். கண்களை நோக்கி பறந்து வரும் தூசியை கண்கள் உணர்வதற்கு முன்னால் சட்டென மூடிக்கொள்ளும் இமைகளின் அவசரம் அவனிடத்தில்!!! சுறுசுறுவென பொங்கத்தான் செய்தது அவன் கோபம்

அடுத்த நொடி 'யாருடா இடியட்???' பொது இடமென்று கூட யோசிக்காமல்...... மிக கவனமாக தனது கைப்பேசியை ஆராய்ந்துக்கொண்டிருந்த அருண் மீது பாய்ந்து அவன் சட்டையை பிடித்து, அவன் கன்னத்தில் இரண்டு அறை அறைந்து விட்டிருந்தான் பரத்!!! தனது கற்பனையில்!!!

ஆனால் எந்த நிலையிலும் நிஜமாக அப்படி செய்து விட முடியாது அவனால். அப்படி செய்தால் அவனுக்கும் அருணுக்கும் என்ன வித்தியாசமாம்??? கோபமே வராத மனிதன் இல்லை அவன். தனது கோபத்தை எங்கே யாரிடம் எப்படி வெளிப்படுத்த வேண்டுமென அறிந்து, அதை கட்டுப்படுத்திக்கொள்ள தெரிந்தவன் அவன்.

பரத் நின்று விட.......... அபர்ணாவின் பார்வை இயல்பாக அவன் பக்கம் திரும்ப,............. அவள் புருவங்கள் ஒரு முறை ஏறி இறங்க..... கைப்பேசியை திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டிருந்தான் அருண்.

கோபத்தின் ரேகைகள் கொஞ்சம் பரவிகிடந்த பார்வையை அருண் பக்கம் ஒரு முறை செலுத்தி திருப்பி விட்டு அபர்ணாவை பார்த்த பரத்தின் உதடுகள் தன்னையும் அறியாமல் உச்சரித்தன....

'கண்ணை துடைச்சுக்கோ அபர்ணா... ப்ளீஸ்...'

சட்டென கண்ணீரை துடைத்துக்கொண்டாள் அபர்ணா. அவனுடைய குரல் நிமிர்த்தியது அருணை. சில நொடிகளில் அவனது முகத்தில் கொஞ்சம் யோசனை ரேகைகள்.

'இரண்டு நாட்களாக எனது மனதின் ஓரத்தில் உறுத்திக்கொண்டிருக்கும் பரத் இவன்தானே???'  அதற்குள் சுதாரித்துக்கொண்டாள் அபர்ணா.

'அருண்... இவர்தான் சிங்கர் பரத்... நேத்து  டி.வியிலே... அவார்ட் ஃபங்ஷன்...' அவனை எப்படி அறிமுகப்படுத்துவது என புரியாதவளாக அவள் கொஞ்சம் அவசரமாக சொல்ல...

'ஓ....' என்றபடி அவனை நோக்கி கை நீட்டினான் அருண். 'கிளாட் டு மீட் யூ...'

இருவர் மனதிலும் வெறுப்பு, பொறாமை போன்ற உணர்வுகள் எதுவும் எழாத போதிலும், நேற்று  டிவி யில் அவன் கண்ட காட்சிகள் அருண் மனதில் ஓடிக்கொண்டிருக்க....  அவனது கையை பற்றி குலுக்கிய பரத்தின் மனதில் இன்னமும் அபர்ணாவின் கண்ணீர் உறுத்திக்கொண்டிருந்தது........

'உங்க ஃபோனுக்கு ஒண்ணும் ஆகலையே...' என்றான் அருணின் முகத்தை ஊடிருவியபடியே..

'இல்ல... இல்ல... அதெல்லாம் ஒண்ணுமில்லை...'

இதழ்களில் ஓடிய புன்னகையில் துளியிலும் துளி கூட மாற்றம் இல்லாமல் 'வெரி குட்... வெரி குட்.... ஆனா... அபர்ணா கண்ணிலேதான் தண்ணி வந்திடுச்சு...' சொன்ன பரத்தின் தொனியில் அப்படி ஒரு அழுத்தம் .

'போன் ரொம்ப முக்கியம். அதை பத்திரமா பார்த்துக்கோங்க.....மிஸ்டர் அருண் .' அடுத்ததாக பரத் சொல்லியே விட அருணினுள்ளே பல நூறு ஊசிகள் தைத்த உணர்வு.

அருகில் நின்ற அஷோக் கூட கொஞ்சம் வியப்பாக பரத்தின் முகத்தை பார்த்திருந்தான். அவனுக்கும் பரத்தின் மனம் புரிந்தது போலே இருந்தது.

அருண் பரத்துக்கு பதில் சொல்லி இருக்கலாம்!!! 'அபர்ணாவை பார்த்துக்கொள்ள எனக்கு தெரியும்...' என நிதானமாக அதே நேரத்தில் அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கலாம். செய்யவில்லை அவன்.

கோபம்!!!! சட்டென எகிறும் இடம் பொருள் ஏவல் தெரியாத, கட்டுக்கடங்காத கோபம்!!! அதுதான் அவன் தோற்றுப்போகும் இடம்!!!

'பொறுக்கி ராஸ்கல்... நீ யாருடா எனக்கு அட்வைஸ் பண்ண??? அவளை பார்த்து ஒரு பாட்டு பாடிட்டா நீ பெரிய காதல் மன்னனா... ' அவன் சட்டையை பிடித்து அருகில் இருந்த காரின் மீது அவனை சாய்த்து கையை ஓங்கி விட்டிருந்தான் அருண். சரியாக அந்த நொடியில் இடை புகுந்தனர் அஷோக்கும், அபர்ணாவும்.

அருண் நடந்துக்கொள்ளும் விதம் கொஞ்சம் அநாகரீகம் என்று அபர்ணாவின் உள்மனம் உறுத்திய போதிலும், அவனை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை பெண் மனம். பரத்தை அங்கிருந்து விலக்கி விடவே தோன்றியது அவளுக்கு.

'பரத் ... ப்ளீஸ்... பரத்... நீங்க கிளம்புங்க... இங்கிருந்து கிளம்புங்க... ப்ளீஸ் ' கெஞ்சலும் தவிப்புமாக சொன்னாள் அபர்ணா.

அருண் மீது பொங்கி எழும் கோபத்தை கடிவாளமிட்டு கட்டிக்கொண்டு, ஒரு ஆழமான சுவாசத்துடன் அபர்ணாவை ஒரு முறை பார்த்து விட்டு, அங்கிருந்து விறுவிறுவென நகர்ந்தான் பரத்.

அவன் விமான நிலையத்தின் உள்ளே நுழைந்த நொடியில் விமானம் ஒரு மணி நேரம் தாமதம் என அறிவிப்பு!!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.