(Reading time: 16 - 32 minutes)

கோபம், இயலாமை, ஆற்றாமை என எல்லாமாக சேர்ந்து அழுத்த அங்கிருந்த இருக்கையில் அப்படியே அமர்ந்தான் பரத்..

'நீ என்ன பெரிய காதல் மன்னனா???' அருண் கேட்ட கேள்வி உள்ளுக்குள் உருள ...

'ஆம்... இந்த உலகத்தில் என்னவளை தவிர எனக்கு வேறெதுவுமே முக்கியமில்லை என நினைக்கும் நான்... அவள் கண்ணில் கண்ணீர் வரக்கூடாது என நினைக்கும் நான் காதல் மன்னன் தான்' தனக்குள்ளே உறுமிக்கொண்டான் பரத்.

'மனமும்....நினைவுகளும் தாறுமாறாக சுழல ... கண்களை மூடி சாய்ந்திருந்தவனின் எண்ண ஓட்டங்கள் அவளை முதன் முதலில் பார்த்த நாளை தொட்டன.

கிட்டத்தட்ட ஏழு எட்டு வருடங்களுக்கு முன்னால்..... பரத் கோயம்புத்தூரில் இருந்தான் அப்போது. அவளது வீட்டுக்கு பக்கத்து வீட்டு மாடி போர்ஷனில் குடி இருந்தான் அவன். அந்த வீட்டுக்கு அவள் வந்து சில மாதங்கள் ஆகி இருந்திருக்க வேண்டும்.

அவனது மாடி ஜன்னலிலிருந்து அவர்கள் வீட்டு தோட்டமும், அதிலிருக்கும் செம்பருத்தி செடிகளும் அடிக்கடி அவன் கண்ணில் படும். இதையெல்லாம் ரசிக்கும் மனப்பான்மை அவனுக்கு அப்போதெல்லாம் இருந்ததில்லை.

தனது கல்லூரி படிப்பில் அவன் கடைசி ஆண்டில் இருந்த நேரமது. படிப்பிலும் பெரிதாக நாட்டம் இருந்ததில்லை அவனுக்கு. அவள் வேறொரு கல்லூரியில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்தாள்.

அவ்வப்போது அவளும் அவள் வீட்டில் உள்ளவர்களும் பேசும் குரல்கள்  ஜன்னலின் வழியே அவனது காதுகளை வந்தடையும். அதையும் பெரிதாக கண்டு கொண்டதில்லை அவன். அவ்வபோது அவள் ஏதாவது ஒரு பாடலை முணுமுணுப்பதும் உண்டு. அப்படித்தான் ஒரு நாள் அவன் காதில் வந்து விழுந்தது. அந்த பாடல்.

வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா... மார்பு துடிக்குதடி...

பார்த்த விடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி 

ஏனென்றே தெரியாமல் அவனது கவனம் அந்த பக்கம் சென்றது. அவன் படித்த பள்ளியில் சில வருடங்களுக்கு இசை ஒரு கட்டாய பாடம்!!! இது அவன் பாடி பழகிய பாடல். அந்த 'கண்ணம்மா...' வை அவள் உச்சரித்த விதம் ஏனோ அவனுக்கு பிடிக்கவில்லை!!!

'என்ன பாடுகிறாள் இவள் கொஞ்சம் அந்த 'கண்ணம்மா' வில் கொஞ்சம் கூட ஜீவனே இல்லாமல்???"

அன்று முழுவதும் அவள் அந்த பாடலை முணுமுணுத்துக்கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் தாங்கிக்கொள்ள முடியாமல் சற்றே கணீரென்ற இவன் அந்த பாடலை பாடி உருக அந்த பக்கத்தில் சட்டென நின்று போனது பாடல்.

மறுபடியும் ஒரு முறை அவன் பாடி முடிக்க... அவர்கள் வீட்டு ஜன்னல் கம்பிகளினிடையே மின்னலென வந்து மறைந்தது அவள் முகம். அவ்வளவுதான்!!! சட்டென ஜன்னலை சாத்திக்கொண்டாள் அவள். அவள் இவனை பார்த்திருக்க கூடும். ஆனால் அவள் முகத்தை சரியாக பார்க்க கூட முடியவில்லை இவனால்.

அதன் பின்னர் அந்த ஜன்னலை திறப்பதை அவள் தவிர்த்து விட அவள்  பாடுவதையோ பேசுவதையோ சில நாட்கள் அவனால் கேட்கவே முடியவில்லை தான். அதனாலே தானோ என்னவோ அவள் எப்படி இருப்பாள் என பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் அவனுக்குள் ஒட்டிக்கொண்டது. காதல், நேசம், ஈர்ப்பு இப்படி எல்லாம் எதுவுமே இல்லாமல் ஒரு ஆர்வம்.

ஒரு வேளை எப்போதாவது பூ பறிக்க வருவாளோ... செம்பருத்தி செடிகளுக்கிடையில் அடிக்கடி அவள் முகம் தேடியவனுக்கு ஏமாற்றம். அது எப்படியோ??? தெரிந்தேவோ... இல்லை தெரியாமலோ அவன் கண்ணில் படாமலே தப்பித்துக்கொண்டிருந்தாள் அவள்.

'எப்படிதான் இருப்பாள் அந்த கண்ணம்மா??? என்னதான் செய்துக்கொண்டிருப்பாள்???' யோசிப்பான் அவன். அவள் பெயர் கூட தெரியாத நிலையில் அவளுக்கு 'கண்ணம்மா' என பெயர் வைத்திருந்தான் அவன்.

அன்று மழை இருட்டிக்கொண்டு வந்தது அவளது வீட்டின் கொல்லையில் துணிகள்  காய்ந்துக்கொண்டிருக்க.. அவற்றை எடுக்க எப்படியும் வருவாள் என்ற நம்பிக்கையில்  மொட்டை மாடிக்கு சென்று காத்திருந்தான் பரத். சாரலும் காற்றும் சேர்ந்து தாலாட்ட துவங்க... மழை சாரலின் இடையே  அவள் முகம் பார்த்து விட தவித்தவனுக்கு மறுபடியும் ஏமாற்றம். வெளியே வரவே இல்லை அவள்.

அப்போதுதான் வந்தது அந்த சந்தர்ப்பம். அவனுக்கு வந்த ஒரு கடித்ததை அபர்ணாவின் வீட்டில் கொடுத்ததாக தபால்காரர் அவனிடம் சொல்ல... சின்னதாக ஒரு சந்தோஷம் அவனிடம். எப்படியும் அவளை பார்த்து விட வேண்டும்.

அன்று மாலை எப்போதும் இல்லாமல் இஸ்திரி செய்யபட்ட உடைகளை அணிந்துக்கொண்டு, ஒரு முறைக்கு இரண்டு முறை தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொண்ட பிறகு அவள் வீட்டை நோக்கி நடந்தான் அவன். ஏதேதோ கற்பனைகள்... நிறையவே பரபரப்பு... கேட்டை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தான் அவன். வீட்டின் கதவு திறந்தே தான் இருந்தது.

கூடத்தில் யாருமே தென்படவில்லை. எப்படி உள்ளே செல்வதாம்??? கைக்கு அருகில் இருந்த அழைப்பு மணியை அழுத்தினான் பரத்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.