(Reading time: 21 - 41 minutes)

 01. அடையாளம்!!! - ப்ரீத்தி

Adaiyalam
 

காணவில்லை, இந்த புகைப்படத்தில் இருக்கும் சூப்பர் ஃபிகரும் அல்லாது சப்ப ஃபிகரும் அல்லாது சுமார் ஃபிகர் ஆன இந்த இளம் பெண்ணை கடந்த ஒரு வருடமாக காணவில்லை. பெயர் கீர்த்திகா, வயது 21, நிறம் மாநிறம், உயரம் 5.7 அடி, திருதிருவென முழித்துக்கொண்டு இருக்கும் இவர், கடந்த ஒரு வருடம் முன்பு வரை IPS ஆகவேண்டும் என்ற கொலைவெறியில் தாம் தூம் என்று குதித்தவர் சட்டென அந்த எண்ணமெல்லாம் பறந்துப் போக, பட்ட படிப்பு படிக்குறேன் என்று ஊதாரி தனமாக சுற்றிக்கொண்டு pizza, burger என்று தின்றே காலத்தை கடத்திக்கொண்டிருக்கிறார் என்று வாசித்துக்கொண்டே போன பெண் மேஜையில் கோவமாக அடித்து பேசி கடைசி வாக்கியத்தில் கத்தினாள்.

“கீர்த்தி.... ஏய் கீர்த்தி எழுந்திரி நல்லா எருமை மாடு மாதிரி முகத்தில சுளிர்னு வெயில் அடிச்சாலும் தூங்குரதை பார். மணி ஆச்சு பாரு, காலேஜ்க்கு நேரமாச்சு கிளம்பு....” இனிய வார்த்தைகளோடு அன்னை எழுப்ப தலையை சிலுப்பிக்கொண்டே எழுந்தாள் கீர்த்தி எனும் கீர்த்திகா. அறையில் அவள் அருந்த காப்பி கொண்டுவந்தவர், அவள் அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு “பொம்பளபிள்ள மாதிரியா இருக்க பையனா பிறக்க வேண்டியது” என்று திட்டிக்கொண்டே கையில் கோப்பையை தந்தார். அப்படி திட்டும் அளவிற்கு தான் அவளது கோலமும் இருந்தது. அவளது தோள் வரை வெட்டப்பட்டிருந்த முடியும், அணிந்து இருந்த அரைக்கை சட்டையும், முழுகால் காற்சட்டையும். முன்பெல்லாம் செய்த உடற்பயிற்சியும் தினம் ஒரு பச்சை முட்டையும் அவளுக்கு மெல்லிய ஜிம் உடம்பை தந்திருக்க, பெண் என்ற நளினமே இல்லாமல் போயிருந்தது. கடைசி வருடம் என்பதால் கடந்த சில மாதங்களாக தான் செய்து வரும் ப்ராஜெக்ட் வேலையால் இரவு வெகு நேரம் முழித்திருக்க வேண்டியதாக இருந்தது அதனால் காலையில் எழுந்திருக்கவும் முடியவில்லை உடற்பயிற்சி செய்யவும் முடியவில்லை.

(உங்க மைன்ட் வாய்ஸ் எனக்கு கேட்குது அப்படி விழுந்து விழுந்து என்ன ப்ராஜெக்ட் செய்யுராள்னு நானும் இதே தான் அவள்ட கேட்டேன் உன் உருவத்துக்கும் இந்த heavy வொர்க்கும் சம்பந்தம் இல்லையேமா என்ன ப்ராஜெக்ட்னு... அவள் ஏதோ தசு புசுன்னு புரியாமல் கூறினாள் அதுனால தங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லைன்ற மாதிரி ஏதாவது ஒரு கடினமான ப்ராஜெக்ட் நீங்களே போட்டுக்கோங்க... ஹி ஹி :D :P)

பாவம் இப்படி ஓயாமல் படித்து உடற்பயிற்சி கூட செய்ய முடியாமல் கடுப்பில் இருந்தவளுக்கு வரண்டாவில் பார்த்ததும் இன்னும் அலுத்துப் போனது.

“இவள் வேற நம்ம கண்ணு முன்னாடியே இதெல்லாம் பண்ணுவாள், எப்பா என்னம்மா நடிக்குறாள்...” என்று திட்டிக்கொண்டே அப்பக்கம் சென்றாள். அவள் திட்டும் அளவிற்கு பெரிதாக எதுவும் நடந்துவிடவில்லை, எல்லாம் அவள் தங்கை தான் அங்கு நின்று படித்துக்கொண்டிருந்தாள் (படிப்பதுப் போல நடித்துக்கொண்டு இருந்தாள்...)

வருடங்கள் இடைவெளி என்று சொல்லும் அளவிற்கு தள்ளி பிறக்கவில்லை, நிமிட கணக்கில் பின்னால் பிறந்த அவளுடைய இரட்டைசகோதரி தான் மித்ரா. நிமிட கணக்கில் முன்னால் பிறந்ததாலேயே கீர்த்தி தான் அக்காவென்று அவளே சொல்லிக்கொள்வாள். இருவரும் ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் தான் பயின்றனர் ஆனால் வழக்கம் போல் ஒருவருக்கு ஒருவர் நேர்மாறு தான். இயற்கை அழகி இல்லையென்றாலும் செயற்கை முறையிலாவது தன்னை அழகு படுத்திக்கொள்வாள் சிறியவள்.

அருகே சென்றவள் அவள் பார்த்துக்கொண்டு நிற்கும் திசையை காபி அருந்திக்கொண்டே பார்த்தாள், கண்டவள் அவள் காதை திருகி “ஏய் உன்னை படிக்குறன்னு நினைச்சிட்டு இருக்காங்க... நீ என்னடானா இப்படி சைட் அடுச்சிகிட்டு இருக்க...” என்று கூறினாள்.

“ஆஆஅ... வலிக்குது கீர்த்தி விடு... சத்தம் போட்டு மானத்தை வாங்காத... இந்த வயசுல இப்படி இல்லாம உன்னை மாதிரி இருக்க சொல்லுறியா???”

“ஏன்? இருந்தாள் என்னடி? எனக்கு என்ன குறைச்சல்?”

“ம்ம்ம்ம் நம்ம பார்க்குறதுக்கே இரட்டை சகோதரிகள் போல இல்லை இதுல குணத்தில எப்படி இருப்போம்?? சரி அதை விடு... ம்ம்ம்ம்... அவனை திரும்பி பாரு எப்படி இருக்கான்?”

அவள் காட்டிய திசையை பார்த்தவள், அங்கு வாலிபன் ஒருவன் பூங்காவில் ஜாக்கிங் முடித்துவிட்டு உடற்பயிற்சி செய்துக்கொண்டிருப்பதை கண்டாள். அவனை பார்க்கையில் விளம்பரம் மற்றும் பத்திரிக்கைகளில் வரும் மாடல் போல இருந்தான். ஒரு புருவ சுளிப்போடு அவனை கண்டவள் அப்படியே திரும்பி தங்கையை பார்த்தாள். அவள் அவனையே கண்ணெடுக்காமல் பார்க்க மெல்லிய சிரிப்போடு... “வாவ்வ்வ்... என்ன ஒரு ஹன்ட்சம்...” என்று என்றும் இல்லாமல் கூறினாள் கீர்த்தி.

அப்படி கூறும் அக்காளை என்ன ஒரு அதிசயம் என்று வித்தியாசமாய் பார்த்தாள். தங்கை பார்ப்பதை உணர்தவள் மேலும் இதையே மீண்டும் மீண்டும் கூறி மனம் உருகுவதுப் போல நடித்தாள். “இத்தனை நாளாக நான் இவனை பார்க்கவே இல்லையே... ச்சே எவ்வளவு மிஸ் பண்ணிட்டேன்... என்னோட கனவில வர பையன் மாதிரியே இருக்கான்..” என்று சிரமப்பட்டு சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு கூறிக்கொண்டே போகவும் “ஒய் கீர்த்தி கிண்டல் தானே பண்ற..” என்று கண்டுக்கொண்டாள் சிறியவள். சட்டென சிரித்தவள் “ஆமாம் பின்ன நிஜமா யாராவது இப்படி உருகுவாங்களா?!”

“ஏன் மாட்டாங்க?”           

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.