(Reading time: 21 - 41 minutes)

திர்புரமாக திரும்பி கம்பியில் சாய்ந்துக்கொண்டவள், “அப்படியெல்லாம் உருகிற அளவுக்கு அவன் இல்லை, ஏதோ உடற்பயிற்சி செய்து கச்சிதமா உடம்பு இருக்குறதால நல்லா இருக்கான் அவ்வளவு தான்” என்று அலட்டலாக கூறினாள்.

சிறியவள் வலக்கையை இடுப்பில் வைத்துக்கொண்டு “இதுக்கு தான் நீ என்னை மாதிரி இல்லைன்னு சொன்னேன். அவனுக்கு இங்க எவ்வளவு fans தெரியுமா... மாடலிங் பண்றான், என்ன ஒரு ஹன்ட்சம்... பொண்ணுங்க எல்லாம் அப்படி சுத்துவாங்க...” என்று சொல்லும் போதே குரல் குழைந்தது.

“ம்ம்ம்ஹம்ம் நீங்க தேறவே மாட்டீங்க...” என்று சொல்லிக்கொண்டு நகர்ந்து சென்றுவிட்டாள். சில அடிகள் எடுத்து வைத்தவள், திரும்பி அவனை பார்த்துவிட்டு “ஒருவேளை நல்லாத்தான் இருக்கானோ...” என்று தாடையை தடவியவள் “நிஜமாவே நம்ம தான் வித்தியாசமாக இருக்கோமோ...” என்று யோசித்தாள்.

சில நொடிகள் யோசித்தவள், “ச்சே ச்சே கீர்த்தி IPS, இதெல்லாம் நமக்கு நேர விரயம் இடத்தை விட்டு நகரு” என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

இருவரும் ஒருவழியாக போட்டி போட்டு கல்லூரிக்கு கிளம்பிகொண்டிருக்க, கீர்த்தியின் மனம் முழுதும் யோசனையில் இருந்தது. “இத்தனை நாள் படிக்காமல் விட்டுட்டோமே, அடுத்த வர எக்ஸாம் எழுதி எப்படியாவது பாஸ் ஆகணும். நல்லா படுசாலே இதுல பார்டர் தாண்ட முடியாது... இதுல ஒண்ணுமே படிக்க ஆரம்பிக்கலை... இதில இன்னும் 2 மாசத்துல வேற செமஸ்டர் எக்ஸாம் இருக்கு அதுக்கு வேற படிக்கணும். அய்யோ... ஏன் கடவுளே என்னை இவ்வளவு அறிவாளியாக படைச்ச...” என்று கொஞ்சம் தற்பெருமையில் உணவருந்திக்கொண்டு இருந்தாள். கடவுளே இதை கேட்டுவிட்டு இதெல்லாம் கேட்கனும்னு என் தலை எழுத்து என்று எண்ணிக்கொண்டு அவளது அம்மாவை தூண்டிவிட்டார்

அவள் தோளில் சுள்ளென ஒரு அடியை போட்டு “சாப்பாட்டை கூட ஒழுங்காக சாப்புடுறது இல்லை, எதாவது யோசிக்குறது இவளை பாரு எது பண்ணாலும் கண்ணும் கருத்துமாக பண்ணுறாள்” என்றார் அவளது தாய் அருணா... சிரியவளோ ஒரு நமட்டு சிரிப்போடு உணவை உள்ளே தள்ளிக்கொண்டு இருந்தாள்.

பெரியவளுக்கு கடுப்பாக இருந்தது, “ஆமா ஆமா ரொம்ப... கண்ணும் கருத்துமாக தான் பண்ணுவாள்... எப்போதும் உங்களுக்கு அவள் தானே ஒழுங்கு இந்நேரம் அப்பா இருந்திருக்கணும்” என்று அன்னையை பார்த்துக்கூறினாள்.

“உங்க அப்பா இருந்தால் மட்டும் என்ன, போடி அவரும் நான் சொல்றது தான் கரெக்டுன்னு சொல்வாரு...”

“ஆமா ஆமா நினைப்பு தான்... சிங்கப்பூர்ல இருந்து அடுத்த தடவை அப்பா வரும்போது இருக்கு உங்களுக்கு” என்று பொய்யான கோவத்தோடு கல்லூரிக்கு கிளம்பினார்கள் இருவரும். கல்லூரி போய் வர ஒரு வண்டி வைத்திருந்தாள் பெரியவள் அதுவும் தங்கையை பத்திரமாக கூட்டிப்போக என்று காரணம் சொன்னதால் தாயின் சிபாரிசு கிடைத்தது அப்பாவிடம். கல்லூரி போகும் வரை தான் இந்த பேச்சு தோரணை எல்லாம் அங்கே சென்றதும் எல்லாம் தலைகீழாக இருக்கும், பெரியவள் பாடங்களை ஒழுங்காக கவனிக்க சிறியவள் பெரும்பாலும் வகுப்பை கட் அடித்துவிட்டு கல்லூரிக்குள்ளேயே சுத்திக்கொண்டு இருப்பாள். எப்போதும் அரட்டை மட்டும் தான், அதே நேரத்தில் attendance குறையாமலும் பார்த்துக்கொள்வாள்.

பெரியவளுக்கோ வகுப்பை விட்டாள் பெரும்பாலும் தன் பகல் கனவில் மிதப்பதே முக்கியமான கடமையாக இருக்கும், அப்படி கனவு கண்டு கொண்டிருக்க பின்னால் இருந்து தோழிகள் எல்லாம் சேர்ந்து காதில் கத்தி நிகழ்காலம் கொண்டு வந்தனர். அவள் பயந்து கையில் இருந்த பேனாவை கீழே போட, தோழிகள் கிண்டல் செய்தனர். “பெருசா போலீஸ் ஆக போறேன்னு சொல்லுற ஆனால் சரியான பயந்தாங்குளிடி நீ...”

“யாரு நானா?? சும்மா பயந்த மாதிரி நடுச்சேன் அவ்வளவு தான்... நீ வேணா பாரு அடுத்த வருஷமே நான் போலீஸ் uniform போட்டு இங்க கீர்த்திகா IPS batch போட்டுட்டு வரலை...”

“போடுவ போடுவ வாடகைக்கு uniform வாங்கி போடுவ... உன் தங்கச்சிய பாரு பார்க்க அப்படியே போலீஸ் கலை முகத்தில் தெரியுது... தைரியமா எல்லாத்தையும் face பண்ணுறாள். அவள் மட்டும் கொஞ்சம் முயற்சி பண்ணினால் போலீஸ் ஆவாள்...” என்று ஒரு தோழி அடுக்கிக்கொண்டே போகவும், கீர்த்தியின் முகம் சோர்ந்துப் போனது.

அவளுக்குமே இந்த சந்தேகம் உண்டு.. எப்போதும் போலீஸ் ஆக வேண்டும் என்று மட்டும் கூறிக்கொண்டு இருந்தால் போதுமா, அதற்கு ஏற்ற தோற்றம், தைரியம் வர வேண்டாமா என்று மனதில் உறுத்திக்கொண்டே இருக்கும் அவளுக்கு... சிறுவயதில் வீட்டு பக்கத்தில் குடியிருந்த போலீஸ் அங்கிள் பார்த்து வந்த ஆசை இது, அவரும் எப்போதும் தன்னை கீர்த்தி IPS என்றே அழைத்தே பழக்கிவிட்டார் ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவளுக்கே இந்த உறுத்தல் அவ்வப்போது வந்து செல்லும். இதெல்லாம் மற்றவருக்கு தெரியாமல் இருக்க, வலது கையில் ஒரு காப்பும் வெட்டிவிடபட்ட முடியும், கொஞ்சம் மாடர்ன் ட்ரெஸ்ஸும் போட்டு தன்னை தைரியசாலி போல காட்டிகொள்வாள். ஒரு வினாடியில் இந்த யோசனையெல்லாம் வந்துபோக அவள் முகவாட்டத்தை கண்ட மற்றொரு தோழி... “ஹே அதெல்லாம் சும்மா அவள் வெளித்தோற்றத்துக்கு அப்படி தெரியுறாள் நீ தான் கீர்த்தி போலீஸ் ஆவ, நீ யாரு சொல்றதையும் நினைச்சு குழம்பாத... முயற்சி பண்ணு...” என்று தேற்றினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.