(Reading time: 12 - 24 minutes)

ன்று ஆங்கில புத்தாண்டு ஆகையால் கோயிலுக்கு குடும்பத்தினர் அனைவரும் செல்வது என முடிவு செய்து எந்த கோயில் என்று விவாதித்துக் கொண்டிருந்தனர்.

"கார்த்திக்குன்னு பேரு வச்சதால முருகன் கோயிலுக்கு போகலாம்"

"திருத்தணியா திருநீர்மலையா"

"வடபழனியே போகலாம். மலை மேல சுசி ஏற கஷ்டம்" லலிதாம்பிகை சொல்லவும் எல்லோரும் ஒத்துக் கொண்டனர்.

சாமி தரிசனம் முடிந்து கோவிலில்  இருந்து வெளியே  வருகையில் சித்துவும் காவ்யாவும் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டே வந்தனர்.

சட்டென்று ஒரு பைக் வரவும் சித்து கவனியாமல் குறுக்கே பாய சித்துவை பிடிக்க சுசீலா  எட்டிச்  செல்ல மகனை பிடித்து இழுத்தவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

"மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி... ஷி இஸ் ப்ளீடிங் ஹெவிலி. வி  நீட் டு ஆபரேட் ஆன் ஹர் இம்மிடியேட்டலி"

"டாக்டர் என் வொய்ஃப எப்படியாவது காப்பாத்திருங்க" கண்களில் நீருடன் கிருஷ்ணமூர்த்தி கையெடுத்துக் கும்பிட்டார்.

"வி வில் ஹோப் பார் தி பெஸ்ட்" மருத்துவர் அறுவை அரங்கினுள் சென்று விட வெளியே நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தனர் கிருஷ்ணமூர்த்தியும் அவரது அன்னையும்.

சுசீலா விழுந்ததும் முன் சென்று கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி ஓடி வந்து அவரைத் தூக்கி தாங்கிப் பிடித்தார்.

"அம்மா" சித்தார்த் அன்னையின் அருகில் ஓடி வரவும் ஒரு முறை மகனைத் தடவிக் கொடுத்தார் சுசீலா.

"பத்மாவையும் குழந்தைகளையும் வீட்டுக்கு அனுப்பிடுங்க" தன் மாமியாரைப் பார்த்து சொல்லியவர் மயக்கம் அடைந்தார்.

உடனே அருகில் இருந்த புகழ் பெற்ற மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு சென்றனர். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிப்பட்டார் சுசீலா.

"பாட்டி,அம்மாக்கு என்னாச்சு. நான் வீட்டுக்கு போமாட்டேன்" சித்தார்த் பிடிவாதம் பிடிக்கவே அப்போதைக்கு அவனை சமாளிக்க என்ன சொல்வது என்று தவித்தார். 

"நீ இப்போ வீட்டுக்குப் போ சித்து. அம்மா சிந்து பாப்பாவோட வருவா"  பாட்டி சொல்லவும் சந்தோஷமாக தன் அத்தையுடன் வீட்டிற்குச் சென்றான்.

குழந்தைகளோடு பத்மாவை ராமச்சந்திரன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

ரண்டு மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சையின் முடிவில் மருத்துவர்களால் சுசீலாவின் உயிரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. அதிக ரத்தப்போக்கின் காரணமாக அவரது கருப்பையை நீக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டு விட்டது.

"நீ பொழச்சு வந்ததே பெருசு சுசி. பேர் சொல்ல தான் தங்க விக்கிரகமா பிள்ளை இருக்கானே" லலிதாம்பிகை மருமகளின் தலையைத் தடவிக் கொடுத்தபடியே ஆறுதல் சொன்னார்.

"அம்மா சொல்றது சரி தான் சுசி. நீ மனச போட்டு அலட்டிக்காத" கிருஷ்ணமூர்த்தியும் மனைவியை சமாதானப் படுத்தினார்.

"சித்து எங்கேங்க"

"வீட்ல இருக்கான் சுசி" கணவர் சொல்லவும் தன் மகன் இந்த இழப்பினை எப்படி எதிர்கொள்வான் என்றே தவித்தது சுசீலாவின் மனம்.

"ம்மா ஏன் இன்னும் வரல அத்தை" சித்து பத்மாவிடம் கேட்க

"அம்மா ஹாஸ்பிடல்ல இருக்காங்க கண்ணா"

"சிந்து எப்போ வருவா...நான் பார்க்கணும்"

"சிந்து வர மாட்டா கண்ணா. சாமி சிந்துவை அவர்கிட்டேயே திரும்ப கூப்பிட்டுட்டார்"

"அப்போ திரும்ப எப்போ சிந்து வருவா"

விடாப்பிடியாக குழந்தை கேள்வி மேல் கேள்வி கேட்க பதில் சொல்ல வழியறியாது குலுங்கி குலுங்கி அழுதார். பத்மா அழவும் ஏதோ புரிந்தும் புரியாத நிலையில் சித்து தனது அறைக்கு சென்று கதவை அடைத்துக் கொண்டான்.

"நீ குட் பாய் இல்ல அதான் சாமி உன் தங்கச்சி பாப்பாவ அவர்கிட்டேயே திரும்ப கூப்பிட்டுட்டார். உன் பேச்ச கா"  அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த காவ்யா சித்துவால் தான் தன் அம்மா அழுகிறாள் என உணர்ந்து நேரே அவனிடம் சென்று இவ்வாறு சொல்லிவிட்டாள்.

அறையில் சுவரையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த சித்துவின் மனதில் எல்லாம் சேர்ந்து பெரும் ரணமாக வேரோடியது. காவ்யா சித்துவிடம் சொன்னது அப்போதைக்கு யாரும் அறியவில்லை.

அன்றிலிருந்தே அவனுக்குத்  தன் மேல் கோபம் கடவுள் மேல் கோபம் முக்கியமாக காவ்யா மீதும் பத்மா மீதும் கோபம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.