(Reading time: 18 - 35 minutes)

ரொம்ப ஆடம்பரமான வாழ்க்கை எங்களுக்கு இல்லைத்தான்.. ஆனால் சந்தோஷத்துக்கு மட்டும் பஞ்சமே இல்லை. நான், அம்மா,அப்பா ரொம்ப சின்ன குடும்பம்.. ஆனால் எங்கள் பிணைப்புக்கு ஈடு இணையே இல்லை..

எனக்கு வளர வளரத்தான் என் அப்பாவின் தொழில், அதற்கு பின்னாடி என் அம்மா மனசுல இருக்குற பயம் எல்லாமே புரிஞ்சது. ஒவ்வொரு நாளும் என் அப்பாவை கடலுக்கு அனுப்பிட்டு அவர் திரும்பி பத்திரமா வந்திடனும்னு கண்ணுல ஜீவனை தேக்கி வெச்சு காத்திருப்பாங்க என் அம்மா..

என்கிட்ட அடிக்கடி சொல்லுவாங்க, “ உனக்கு இந்த வாழ்க்கை வேணாம் சஹீம்மா..நீ நல்ல குடும்பத்தில் வாக்கப்பட்டு சந்தோஷமாய் வாழனும்..” ன்னு.. முதலில் சலிப்பாகத்தான் இருந்தது.. ஆனால், சில விஷயங்கள் புரிய ஆரம்பிக்கும்போதுதான் என் அம்மாவின் பயமும் கவலையும் எனக்கு புரிய ஆரம்பிச்சது”. தன் அன்னை,தந்தையை பற்றி பேச ஆரம்பித்ததுமே அவள் முகத்தில் புன்னகை விரிந்தது. தன் குடும்பத்தை பற்றி சொல்லி கொண்டே போனாள் அவள்.

“ ஆனா, இந்த சந்தோஷம் எல்லாமே மாறிடும்ன்னு நினைக்கவே இல்லை..இப்போ கூட என்ன நடந்துச்சுன்னு எனக்கு ஞாபகம் இல்ல..அதை நினைச்சு பார்க்கும்போது தலை ரொம்பவும் வலிக்கிறது.. தண்ணி..எங்களை சுத்தி தண்ணி இருந்துச்சு .. நான் மூச்சு விட முடியாம திணருறேன்..அம்மா.. அப்பா யாருமே என் கண்ணுக்கு தெரியல.. ஒரே இறைச்சல்..அழற சத்தம்.. அப்போத்தான் ஏதோ வேகத்துல தூக்கி எறியப்பட்டு , தலை ரொம்ப வலிச்சது” என்றவள் கண்ணீருடன் கேவினாள்.

“ அதுக்கு அப்பறம் எனக்கு ஒன்னுமே தெரியலையே..என்ன ஆச்சுன்னு தெரியல..அம்மா அப்பா எப்படி இருக்காங்களோ! நான் இல்லாம தவிச்சு போயிருப்பாங்க” என்றாள் அவள். அவள் சொன்னதை புகழால் நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை,

தன்னை தவிர்ப்பதற்காக பொய் சொல்லுகிறாளா என்று கூட கொஞ்சம் சந்தேகம் எழுந்தது தான். ஆனால், இப்போது அதற்கென்ன அவசியம் வந்தது? என்று தன்னையே கேட்டுக் கொண்டான் அவன்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "நிர்பயா" - சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் பெண்ணின் கதை...

படிக்க தவறாதீர்கள்..

மனதில் இருக்கும் பாரங்களை சொல்லிவிட்டதினால் கொஞ்சம் தெளிவானது சஹீபாவின் மனம்.

“ உன்னால எனக்கு உதவி செய்ய முடியுமா?”

“ சொல்லு ஆ..” ஆயிஷா என்று சொல்ல வந்தவன் பாதியில் நிறுத்தி,

“சஹீபா” என்றான். ஏதோ ஒரு வகையில் அவன் பேசும்விதம் அவளுக்கு ஆறுதல் அளித்தது.

“ முதல்ல உன் பேரை சொல்லு”

“ என் பேரு புகழ்”

“ அழகான பேரு” என்று சொல்லி புன்னகைத்தாள் அவள். புகழின் அடிமனதில் அடைமழை பெய்வது போல ஓர் உணர்வு.

“தேங்க்ஸ் “ என்றான்.

“ புகழ், என்னை எங்க ஊருக்கு கூட்டிட்டு போ! நான் என் அம்மா அப்பாவை பார்க்கனும்… அவங்க எப்படி இருக்காங்க , நான் எப்படி இங்க வந்தேன் எல்லாம் எனக்கு தெரியணும்.. உன்னால எனக்கு உதவி பண்ண முடியுமா?” என்று கேட்டாள் அவள். புகழால் அவளது மனநிலையை புரிந்து கொள்ள முடிந்தது. தான் நேசிக்கும் பெண் என்பதையும் தாண்டி, யாருக்குமே இப்படி ஒரு நிலை வரகூடாது என்றே தோன்றியது அவனுக்கு.

அதே நேரம் அவன் மனதில் அந்த இருவர வந்து நின்றனர். சஹீபாவின் இப்போதைய அம்மா அப்பா! இவளை எண்ணி தவித்துக் கொண்டிருப்பார்களே! என்றே தோன்றியது அவனுக்கு. ஆனால் என்ன சொல்லி இவளை வீட்டிற்கு அழைத்து செல்வதாம்? யோசித்து கொண்டிருந்தான் புகழ்.

“ நீ அமைதியா இருக்குறதை பார்த்தா ரொம்ப கஷ்டம்னு புரியுது..இட்ஸ் ஒகே பரவாயில்லை !” என்று எழுந்து கொண்டாள் அவள் .

“ ஹேய் .. இரு இரு… என்ன கடல் அலை மாதிரி நீயும் ஓயாமல் துடிதுடிப்பா இருக்க ?” என்று கேட்டான் புகழ். தன்னை அவன் கடல் அலைகளுடன் ஒப்பிட்டு பேசியதும் சஹீபாவின் முகத்தில் புன்னகை படர்ந்தது.

“நான் கடல்மாதாவுடைய பொண்ணாக்கும்.. அப்படித்தான் இருப்பேன்” என்று மிடுக்குடன் சொன்னவளை தன்னையும் மீறி ரசிக்க ஆரம்பித்திருந்தான் புகழ். அவனது பார்வையின் பொருள் உணர்ந்து சொடுக்கு போட்டாள் சஹீபா.

“ பாஸ்போர்ட் வீசா இல்லாமல் என்னால ஃபாரின் லொகேஷன்ல டூயட் பாட முடியாது பாஸ்” என்றாள் அவள்.

“ஓஹோ அப்போ நீ டூயட் பாட ரெடியாகத்தான் இருக்கீயா?” என்று கேட்டே விட்டிருந்தான் அவன்.

“புகழ்!!?”

“ஹும்கும்… நீ சஹீபாவும் இருந்தாலும் சரி, இல்ல வேற எப்படி இருந்தாலும் சரி, என் விஷயத்துல மட்டும் ரொம்பவே தெளிவாக இருக்கம்மா” என்று கை கூப்பினான் புகழ்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.