(Reading time: 21 - 42 minutes)

டுத்து சுவரிலிருந்து தீடிரென அருவருப்பை தரும் பெருங்குரலோடு வெளிவந்த ஒரு அகோர தலையை கண்டு உறைந்தாள் மைத்ரீ.  அதன் ஒரு கண் சிதைந்திருக்க அதிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.  சட்டென அதனுடைய கொப்பளங்களுடனான இரு கைகள் இவளை நோக்கி நீளவும் அங்கிருந்து பின்சரிந்து தப்பித்து வேகமாக முன்னேறினாள்.  மைத்ரீ ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கவும் அவளின் பயம் கொதிக்கும் நீரில் வைத்த வெப்பமானியின் (Thermometer) பாதரசத்தை போல உயர்ந்து கொண்டிருந்தது.

அடுத்திருந்த பகுதியில் நுழைந்த போது அங்கே பிணங்கள் (பிணங்களை போன்ற பொம்மைகள்) பிளாஸ்டிக் கவர்களில் சுற்றப்பட்டு அறையின் கூரையிலிருந்து தொங்கி கொண்டிருந்தன.  அப்பிணங்களின் கீழே நடந்து அவ்விடத்தை கடக்க வேண்டியிருந்தது.  அவ்விடத்தின் பாதி தூரத்தை கடந்திருந்த நிலையில் பிணங்கள் வேகமாக அசைந்து ஒன்றோடொன்று இடித்து கொண்டன.  திடீரென அது நிகழவும், மைத்ரீ சமாளிக்கும் முன்பாக அவளது முகத்திலும் தலையிலும் அந்த பிணங்கள் மோதின.  திகில் நிறைந்த அந்த நிமிடங்களில் பயத்தின் உச்சத்தை எட்டியிருந்த மைத்ரீ திக்கற்ற காட்டில் தனித்து விடபட்டவளாக உணர்ந்தாள்.  அங்கிருந்து தப்பிக்கும் நோக்கத்தில் போக வேண்டிய திசையறியாது அவள் கடந்து வந்த வழியை நோக்கியே ஓடினாள்.

சுற்றியிருப்பவைகளை பார்க்க விரும்பாமல் கண்களை இறுக மூடி “அம்மா!” என்று கத்தியபடி ஓடி கொண்டிருந்தவள் எதன் மீதோ மோதி கொண்டாள்.  அந்த நிலையிலும் கண்களை திறக்கவில்லை.   அது என்னவாக இருக்குமோ இன்னும் எத்தனை பயங்கரமாக இருக்குமோ என்ற எண்ணத்தில் அதை கடந்து ஓட முயற்சித்தாள்.  ஆனால் அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.  நினைத்தை செய்ய முடியாமல் போகவும் ‘இனி என்ன நடக்குமோ?!’ என்றெண்ணம் அவளின் பயத்தீக்கு நெய்யாக மாற தரையில் சரிந்து அமர்ந்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - அவனுக்கு அவள் கிடைப்பதற்கரிய அன்புச்சுரங்கம் அவளுக்கோ அவன்...?

படிக்க தவறாதீர்கள்..

இவளின் கூக்குரலை அங்கு ஒலித்த பயமெழுப்பும்படியான மற்ற சத்தங்கள் தோற்கடித்தன.  “மையு பயப்படாதடா! என்னை பாரு” என்று ஒரு குரல் மிகவும் மெலிதாக தெளிவில்லாமல் அவளுக்கு கேட்டது.  சட்டென கத்துவதை நிறுத்தி அந்த குரலை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தாள்.

“மையு என்னை பாருடா! நான் ராகுல்! நீ என் பக்கத்தில்தா இருக்க. பயப்படாத ப்ளீஸ்!”

கால்களை மடக்கி அதில் முகத்தை புதைத்து அழுது கொண்டிருந்தவளின் கைகளை பிடித்து அவளை தேற்ற முயன்றான் ராகுல்.

“கண்ணை திறந்து என்னை பாருடா மையு! நானிருக்கும் போது உன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது.  என்னை நம்புடா! உன்னை வெளியே கூப்பிட்டி போறேன்” அவளை உலுக்கினான் ராகுல்.

பயத்தில் நடுங்கியபடி குழப்பத்திலிருந்த மைத்ரீயின் காதுகளில் விழுந்த ராகுலின் கடைசி சில வார்த்தைகள் இங்கிருந்து தப்பிக்க முடியுமென்பதை உரைக்க மெல்ல கண்களை திறந்து தனக்கெதிரில் மண்டியிட்டிருந்தவனை நோக்கினாள்.

“உனக்கு ஒன்னுமில்லைடா! யு ஆர் சேஃப்” அவள் கண் திறந்து விட்டாள் என்ற நிம்மதி நெஞ்சத்தை நிறைத்து வார்த்தைகளில் தெரிக்க பேசினான்.

மடித்திருந்த கால்களை தளர்த்தி முன்சரிந்தவள் சட்டென அவனை அணைத்தாள்.

“ரொ….ம்….ப….வே பயந்…துட்டே…” என்று கண்களை மூடி அவன் தோள் சாய்ந்து கேவினாள் மைத்ரீ.

“நான் உன் பக்கத்திலேயே இருக்கேன்…. பயப்படாதே”

அவளுக்கு தைரியமூட்ட சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தான்.  தான் தனியாக இல்லை… ராகுல் உடனிருக்கிறான் என்பது அவளுக்கு நிம்மதியை கொடுத்தது.  அவளின் பயம் குறைந்து உடல் நடுக்கத்தையும் குறைத்தது.  அதை உணர்ந்தவன்

“எழுந்திருடா! வெளிய போகலாம்… உனக்கு இங்கிருப்பது பிடிக்கலைதானே? வா போகலாம்” இதமான அந்த குரலில் மயில் இறகின் வருடலை உணர்ந்தவள் மறுகணமே அவளிருக்கும் இடத்தின் பயங்கரத்தை உணர உடல் நடுங்க ஆரம்பித்தது.

“மறுபடியும் எதுக்குடா பயப்படற? உன்னோட நான் இருக்கும்போது நீ பயப்படலாமா? சொல்லு… நீ பயப்படலாமா?”  என்றபடி எழுவதற்காக அவளை விலக்கினான்.

அவன் அணைப்பின் இதமும் அது கொடுத்த தைரியமும் பாதுகாப்பு உணர்வென எல்லாவற்றையும் பிரிவதை ஏற்காத பெண்ணின் மனம் தவித்து போனது.  அவசரமாக எழுந்து அவன் வலது கையை இறுகப் பற்றி தோளோடு சாய்ந்து கண்களை மூடிகொண்டாள்.  

அவளின் செயலில் ராகுலின் இதழோரம் புன்னகைப்பூ ஒன்று பூத்தது.

அவன் நடக்க அவனோடு இணைந்து நடந்தாள் மைத்ரீ.  அதன்பிறகு அங்கு கேட்ட எந்த சத்தமும் அவளை பயமுறுத்தவில்லை.  அவனருகில் அத்தனை பாதுகாப்பை உணர்ந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.