(Reading time: 5 - 10 minutes)

14. வானவிழியழகே - நிஷா லக்ஷ்மி

Vaana Vizhi Azhage

வானில் உள்ள இந்த நீல விழிகள் காயப்பட்டு கலங்கப்பட்டு நிற்கிறதா..என்னைப் போல!

மாலை நேர வேளையில் அவந்திகாவின் மனதில் தோன்றிக் கொண்டிருந்த எண்ணங்கள் தான் இவை.

ஏன் இப்படி யோசிக்கிறோம்! அவளுக்கு புரியாமல் இல்லை.சில நீண்ட நாட்களுக்கு பிறகு,வலுக்கட்டாயமாக ஏற்படுத்திக் கொண்ட தனிமையின் கணம் அவளை உலுக்கிக் கொண்டிருந்தது.பிறந்தது முதல் இன்று வரை இதுபோன்ற வேதனையை அனுபவித்ததே இல்லை.

அம்மா பிரிந்த போதும்,அப்பா கால் இழந்த போதும் மனதில் ஏற்பட்ட வலி போல இது இல்லை.அப்போது தேற்றுவதற்கு நிறையே பேர் இருந்தார்கள்.வாழ்க்கை வாழ்வதற்கே என்று கற்றுக்கொடுப்பதற்கு கூட ஆட்கள் இருந்தார்கள்.

ஆனால் இன்றோ..இதயம் வலிப்பது போல..தொண்டைக்குள் எதுவோ சிக்கிக் கொண்டது போல..பூமிப்பந்து அதிவேகமாக சுழற்றி அவளை மண்ணுக்குள் இழுப்பது போல உணர்ந்தாள்.

வருத்தப்பட்டே ஆக வேண்டுமா-தன்னையே மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டாள்.அழுதால் ஆறுதல் கிடைக்குமென்று மனம் ஆலோசனை கூறியது.

கதவை அடைத்துக்கொண்டு ஒருமூச்சு சத்தம் வராமல் அழுது தீர்த்தாள்.கண்ணீர் வற்றியும்,நெஞ்சுக்கூட்டில் இருந்த பாரம் குறைவது போல் இல்லாமல் அதிகரித்துப் போனதே!!

இந்த அளவுக்கா என் மனம் பலமில்லாமல் போனது!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அவளது இவ்வளவு சிந்தனையின் மத்தியிலும் இடைவிடாது பாடல் ஓடிக் கொண்டிருந்தது.

ஒரே ஒரு பாடல் தான்.இதுநாள் வரை தன்னுடைய பொழுதை போக்கவும்,ரசனைக்காகவும் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்த பாடல்,இன்று தொல்லையாக,தனக்கு வருத்தமளிக்கக் கூடியதாக மாறிப்போகுமா-விடையில்லா கேள்விக்கு விடை அறியும் முயற்சியில் ஈடுபட்டு தோற்றுப்போனவளாய்,படுக்கையில் விழுந்தாள்.

எதையும் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளும் குணம் கொண்டவளால் இன்று ஏனோ அப்படி இருக்க முடியவில்லை.

ஏன் ஏன்-இது போன்ற கேள்விகளினாலையே சோர்ந்து போயிருந்தாள்.

இத்தனை வருத்தமும்,கண்ணீரும் வேறு யாருக்காகவும் அல்ல.அவளுக்காக கூட அல்ல-யஷ்வந்திற்காக மட்டுமே!

அவளது முதல் காதல்.ஈர்ப்பை தாண்டி வெற்றி பெற்று,அனைவரின் சம்மதத்தோடு மணமேடை  வரை அரங்கேற்றமான காதல்.அது ஏன் தோற்றுப் போனது!!

உண்மையிலையே தோற்றுத்தான் போனதா!

யோசிக்கையில் மேலும் இதயம் வலிப்பது போல இருந்ததில்,தன்னுடைய நெஞ்சை இறுக்கிப்பிடித்துக் கொண்டு படுக்கையில் அழுந்த புதைந்தாள்.

ஒருவேளை நிரேஷ் எதுவும் செய்யாமல் என்னை அங்கேயே விட்டிருந்தால்-எல்லாம் நிம்மதியாய் அரங்கேறியிருக்குமா!

அவசரமாய் கழுத்தில் கிடந்த செயினை தொட்டுப் பார்த்துக் கொண்டாள்.அங்கே மாங்கல்யம் இல்லாது போனது.அதுதான் கட்டவேயில்லையே.

எதற்காக இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்ற எண்ணத்திலையே மீண்டும் அந்தப் பாட்டின் வார்த்தைக்குள் புதைந்துகொண்டாள்.

பெரிதாய் அர்த்தம் கொண்ட ஆழமான பாடல் எல்லாம் இல்லை தான்.இசையில் கூட அதிக ரசிப்புத்தன்மை அவளிடம் இல்லை தான்.ஆனால் அன்று ஒரு நாள் யஷ்வந்த் அவளுக்கே அவளுக்காக பாடினானே.

“சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்ச நாளாய்”இந்த வரிகள் பாடாய்படுத்தியதோ இல்லையோ..அதைப் பாடியவன் குரலிலுள்ள வசியத்தால்,அவளை தன்வசப்படுத்த அவன் பாடியதால் ஏற்பட்ட மயக்கம் இன்றளவும் தீரவில்லை.

திருமண பந்தத்தால் கணவன் மனைவிக்குள் நடக்கும் உறவு பற்றி அறியாதவள் அல்ல.பள்ளியில் படிக்கும் போதே,எல்லாம் இயற்கையாய் ஏற்படுகின்ற உணர்வுகள் தான் என்பதை ஆண் பெண் இருபாலருக்கும் உணர்த்தும் விதமாக ஆரோக்கியமான முறையில் சொல்லிக் கொடுத்த பாடம் தான்.

தற்காப்பு கலைக்காக,பெண்கள் தங்களை காத்துக்கொள்ள வேண்டியதற்காய்,விஷயம் இது தான் என்று உணர்த்திய பாடம் தான்.அப்போதெல்லாம் உணர்வுகளோ,உணர்ச்சிகளோ கொந்தளிக்கப்படவில்லை.

சில ஆண்டுகள் நடனப்பள்ளியில் இருந்த போதும்,சிலருடன் ஆடிய போதும்..நிரேஷுடன் ஒரு சில பார்ட்டிகள் சென்ற போதும் கூட அங்கு நடக்கும் சில நிகழ்வுகளால் ஏற்படாத தடுமாற்றம்-காதலினால் மட்டுமே ஏற்படுத்தக் கூடிய கிளர்ச்சியை அவள் மனதில் அந்த சில நாட்களில் போனிலையே விதைத்திருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.