(Reading time: 8 - 15 minutes)

"மா...அந்தக்கிழவி மொத்த சொத்தையும் அவ பேர்ல எழுதிட்டா!இனி தந்திரமா தான் அவளை அடிக்கணும்!"

"மாமாக்கு இது தெரியுமா?"

"தெரியும்!அவரும் அமைதியா இருக்கார்.என்ன இருந்தாலும் அவர் பொண்ணு தானே!அண்ணன் கட்சி மாறினாரு அவளை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அழிக்க முடியாது!"

"இப்போ என்ன செய்யணும்?"

"கடைசி அஸ்திரம் இருக்கு!

"என்ன?"

"பல்லவி!"

மைதியாக தனது காரை அந்த சாலையில் செலுத்திக் கொண்டிருந்தாள் நிர்பயா.மனதில் ஒருவித புது நம்பிக்கை!எனை அழிக்க இறைவனை தவிர எவராலும் இயலாது என்ற நம்பிக்கை!அசைக்க இயலாத மாற்றம்!அந்த விழிகளில் மீண்டும் உதித்திருந்தது வைராக்கியமும்,கர்வமும்...!

மென்மையான குழலிசை அவள் மனதிற்கு ஆறுதல் வழங்கிக் கொண்டிருந்தது.

இனி ஆற்ற வேண்டிய பணிகள் பல உள்ளன என்ற உண்மையை உணர்ந்திருந்தாள் அவள்!விதியை மாற்றும் அஸ்திரம் அவளிடம் மீண்டும் வழங்கப்பட்டிருந்தது.ஆம்..!நம்பிக்கை என்னும் அஸ்திரம்!

ஒரே மன ஓட்டத்தில் வந்தவளின் எதிரே வந்து நின்றது மற்றொரு கார்.

சட்டென தனது வாகனத்தை நிறுத்தினாள் அவள்.

உள்ளிருந்து இறங்கி வந்தது சங்கரனின் ஒட்டு மொத்த குடும்பமும்!குறிப்பாக ஸ்வேதா!

தலையெழுத்தே என்று இவளும் இறங்கினாள்.

"அப்பறம் மேடம்?கல்யாணம் நின்றுவிட்டதாமே!"

".............."-அவள் கைகளை கட்டியப்படி அவள் முகத்தையே பார்த்தாள்.

"என்ன ஆட்டம் ஆடின நீ?இப்போ!ஓரமா நிற்க வைத்துட்டாங்களாமே!"-சத்தியமாய் அங்கு நடக்கப்போகும் பிரளயத்தை பல்லவியை தவிர எவரும் அறிந்திருக்கவில்லை.

"இப்போதாவது என் அண்ணன் யாருன்னு புரியுதா?"-அவள் கூறியது தான் தாமதம் கலகலவென சிரித்தாள் நிர்பயா.அவளின் ஏளனத்தின் இரகசியம் எவரும் விளங்குவதாய் இல்லை.

"எ..என்ன உன் அண்ணன் பெரிய வீரன் மாதிரி பேசுற?எதிர்த்து நிற்க தைரியம் இல்லாம கோழைத்தனம் செய்திருக்கான்!நீ என்னடான்னா வில்லன் ரேஞ்சுக்கு பில்டப் தர?நீங்களாம் அவ்வளவு தான்!"

"ஏ..!"

"உஷ்..!கையை இறக்கு!நான் ஒரு கலெக்டர் என்ன தைரியமிருந்தா என் முன்னாடி விரல் நீட்டுவ?யார் நீ எனக்கு?நான் நினைத்திருந்தா எப்போதோ உன்னை நசுக்கி இருப்பேன்.போனா போகுது பொண்ணாச்சே!விவரம் தெரியாம பேசுறன்னு பார்த்தா!ரொம்ப தான் ஆணவத்துல ஆடுற?அடக்கிடும்...!"

"........."

"உன் அண்ணன் தெரியாம எனக்கு ஒரு நல்லது பண்ணிட்டான்!என்ன தெரியுமா?இந்த விஷயம் ஒருவேளை என் கல்யாணம் நடந்த பிறகு தெரிந்திருந்தா,நான் எழுந்திரிக்க முடியாம போயிருக்கும்!கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லி ஒரு கெட்டவன்கிட்ட இருந்து என்னை காப்பாற்றி இருக்கான்."-கார்த்திக்கின் விழிகள் கூர்மையாயின.

"நீ என்ன நினைத்துட்ட?கல்யாணம் நின்னுடுச்சேன்னு கண்ணை கசக்கிட்டு வீட்டோட அடைந்திருப்பேன்னா?நீ என் பலவீனத்தை உன் பலமாக்குன!நான் உன் பலத்தை உனக்கே எதிரா திருப்பினேன்!என்னை யாராலும் அழிக்க முடியாது!என்னை எரித்து போட்டாலும்,என்னோட சாம்பலில் இருந்து நான் எழுந்து வருவேன்!பழி வாங்குறது என் நோக்கமா இருந்தா இந்நேரம் இந்த குடும்பமே இல்லாம போயிருக்கும்!கடைசி முறையா எச்சரிக்கிறேன்!நீ பிடித்திருக்கிறது சிங்கத்தோட வாலை!ஒரு சின்ன கர்ஜனை போதும் தன்னை புலின்னு நினைத்துக் கொண்டிருக்கிற எலி எல்லாம் உயிரை விட!நான் நிர்பயா!எதுக்கும் பயப்பட மாட்டேன்.புரிந்துக்கொண்டால் உங்களுக்கு நல்லது!"-என்றவள் திரும்பி ஓரடி வைத்தாள்,ஏதோ ஒன்று அவளை தடுத்தது.

"தெரிந்தோ,தெரியாமலோ இந்தக் குடும்பத்தை சேர்ந்த ஒருத்தரால மறுபடியும் என் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கு!நான் நன்றி மறக்காதவள்!செய்த உபகாரியத்துக்கு பலனாக,சங்கர் ஃப்ராப்பர்ட்ஸ் ஃபைல் எந்த குளறுப்படியும் இல்லாம என் டேபிளுக்கு மறுபடியும் வந்தா,எந்த ஊழலும் இல்லாம அதை நிர்வகிக்கிறதா இருந்தா!அதை நான் அப்ரூவ் பண்றேன்!"-என்றவள் திரும்பி பார்க்காமல் நடந்தாள்.அவ்வளவு நேரமும் அவள் பேசுவதையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த சங்கரனின் கண்களின் முதல்முறையாக அவளால் விளைந்த பெருமிதம் மிளிர்ந்தது!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.