(Reading time: 19 - 38 minutes)

கேட்டை விட்டு கண் இமைக்கும் நேரத்தில் மறைந்தான் அவன். இதைக் கண்ட ப்ரனிஷும், மற்றவர்களை அழைப்பதை விட நாமே சமாளித்துக்கொள்ளலாம் என்று நினைத்து அவசரமாக ஒரு எட்டு எடுக்க வேண்டிய இடத்தில் மூன்று, நான்கு தாவல்களாக சத்தம் வராமல் பின்னே நடந்தான். அவ்வாறு இருந்தும் அவனால் பிடிக்க முடியாமல் போனது.

முழுவதும் கருப்பாகவே உடையணிந்திருந்த அந்த உருவம் அந்த தெருவின் கடைசிக்குச் சென்று தன்னை யாரேனும் தொடர்கிறார்களா எனத் திரும்பிப் பார்த்தது. உடனே ப்ரனிஷும் இருளில் தன்னை மறைத்துக்கொண்டான்.

யாரும் இல்லை என உறுதி செய்த அந்த கள்வன், அங்கே கூடும் மற்ற இரு தெருக்களையும் எட்டிப் பார்த்து அதையே மீண்டும் உறுதி செய்துவிட்டு, ஊருக்கு வெளியே செல்லும் வழியை நோக்கித் திரும்பினான். ஆனால், அதற்குள் ப்ரனிஷ் மின்விளக்கில்லாத அந்த இருட்டையே சாதகமாக்கி அவன் அருகில் வந்திருந்ததால் அவனை தப்ப விடாமல் பிடிக்க வாகாக இருந்தது.

அவன் கையை இழுத்த வேகத்தில் அதிர்ச்சியில் ஒரு குரல் வெளிப்பட்டது. அதிர்ச்சியில் உரைந்தான் ப்ரனிஷ். அது ஆணல்ல, ஒரு பெண். தாமதிக்காது முகத்தினை அருகே மிக மிக குறைவாக வெளிச்சம் தந்துகொண்டிருந்த அந்த விளக்கின் ஒளி படுமாறு நிறுத்திப் பார்த்தான் ப்ரனிஷ். ஆம்! அங்கிருந்தது ப்ரியா.

“ப்ரியா?” என அதிர்ச்சியோடு கேட்டான் ப்ரனிஷ்.

யாரோ எவரோ என்று பயத்தோடு இருந்த ப்ரியாவும் ப்ரனிஷின் முகம் கண்டதால் கொஞ்சம் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாலும், இவனிடம் இருந்து எப்படி வெளியேறுவது என்று அசூயை கொண்டாள். எனவே, அவனைக் கண்டுகொள்ளாதவாறு செல்ல எத்தனித்தாள். அதனைக் கண்ட ப்ரனிஷ், அவள் கையை விடாதபடி பற்றினான். திமிறி விலகப் பார்த்த ப்ரியா, அது முடியாததால் அவனிடமே கேட்டாள்.

“ப்ளீஸ் ப்ரனிஷ். என்னை விடு”

“இந்த நேரத்துல எங்கே போற நீ? அதுவும் இன்னும் இரண்டு மணி நேரத்துல உன் மேரேஜை வெச்சுட்டு?”

கசப்பாக புன்னகைத்த ப்ரியா, “மேரேஜ்? அதுல இருந்து தப்பிக்கத் தான் போறதே” என அலச்சியமாகக் கூறினாள்.

இதனைக் கேட்ட ப்ரனிஷிற்கு பயங்கர அதிர்ச்சி. “அப்படின்னா? ஓடிப்போகப் போறியா?” பற்களைக் கடித்தபடி கேட்டான் ப்ரனிஷ்.

ப்ரியாவின் மௌனமே அவள் பதிலைக் கூறிட, “லூசாடி நீ?” என ஏறத்தாழ கத்தினான் ப்ரனிஷ். ஏற்கனவே பலகாலம் முன்பு நடந்த இத்தகைய ஒரு சூழ்நிலையையும் அதனால் எழுந்த பிரச்சனையையும், அவமானங்களையும் சரி செய்யவே அவன் இங்கு பாடுபட்டுக்கொண்டிருக்க, ப்ரியா வேறு அதையே செய்யப்போகிறாள் என்னும்போது அவனுக்கு மேலும் கோபம் வரவே செய்தது. ஆனால், அவை எதுவுமே ப்ரியாவிற்குத் தெரியாது என்பது அவனுக்குத் தெரியாமல் போனது.

“இப்போ நீ செய்யுற காரியத்தால எத்தனை ப்ராப்ளம் வரும் தெரியுமா?”

“எப்போ நான் சொல்றத அவங்க கேட்கலியோ, அதுக்கப்புறம் எனக்கு அதைப் பத்தி கவலை இல்லை” என அவள் கூற, இருந்த கோபத்தில் பளார் என்று அறைந்திருந்தான் ப்ரனிஷ். அதன் எதிரொலி அந்த இருளைக் கீறிக்கொண்டு சென்றது. அவன் அறைந்ததில் செவிப்பறை கிழிந்துவிட்டதோ என்ற ஐயத்துடன் திக்பிரமை பிடித்து நின்றிருந்தாள் ப்ரியா.

அவள் அவ்வாறு மெய்மறந்து! நிற்கவும்தான் ப்ரனிஷ் தான் அவளை அடித்ததை உணர்ந்தான். “சே! நானா அடிச்சேன்?” என தன்னையே திட்டிக்கொண்டு, மிரண்டு போயிருந்த ப்ரியாவின் அருகே சென்று அவள் கைப்பற்றி, “சாரி ப்ரியா! ஏதோ தெரியாம…. ரொம்ப சாரி” எனக் கூறிக்கொண்டிருந்தான்.

தன் இடக்கண்ணத்தை ஒரு கையால் தாங்கிப்பிடித்து, கண்ண்களில் குளம் கட்டி நின்றிருந்த ப்ரியாவைக் காண்கையில் அவனுக்கு இருந்த கோபமெல்லாம் தன் மேலேயே திரும்பியது. அடித்த தன் கையே வெகுவாக காந்தியது என்றால், அவள் கண்ணம்? இந்த எண்ணம் வந்தவுடன் அது எவ்வாறு இருக்கிறது என பார்க்க மெல்ல அவள் கண்ணம் தொட்டான்.

ப்ரியா வலி பொறுக்க முடியாமல் பின்னடைய, ப்ரனிஷின் கண்களில் அவள் கண்ணீரைப் பார்த்ததும் ஒரு வலி. காரணம் தான் புரியவில்லை அவனுக்கு.

ஒரு நொடி, ஒரே ஒரு நொடி, ப்ரியாவிற்காக வருந்தியது அவன் உள்ளம். அவளுக்கு இது விருப்பமில்லா திருமணம் என்று அவனும் அறிவான். தன் தமக்கையுடனேயே இருந்தவனாயிற்றே அவள் திருமணத்தில்.

முன்பொரு காலத்தில் தன் தாயால் இங்கு ஏற்பட்ட அனைத்தும் கண்முன் தோன்ற, அது மீண்டும் நிகழக் கூடாதென மனதைக் கல்லாக்கி, அவளை ஏறத்தாழ இழுத்துச் சென்றான் அவள் வீட்டை நோக்கி.

ப்ரியாவும் எவ்வளவோ முயன்று பார்த்தாள், அவன் இரும்புப் பிடியில் இருந்து விலக; முடியவில்லை. இறுதியில் ப்ரனிஷ் நிற்க, எங்கே அவன் தன் வழிக்கு வந்துவிட்டானோ? என்ற எண்ணத்தில் ப்ரனிஷின் முகத்தை நோக்கியவள், அவன் கலவரத்துடன் எதிரே பார்ப்பதைக் கண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.