(Reading time: 12 - 24 minutes)

தொடர்கதை - கானல் நீரினால் காய்ந்த நதிகள் - 01 - ரேவதிசிவா

Kaanal neerinal kaaintha nathigal

 

ண்முன் தோன்றுவன அனைத்தும் உண்மையல்ல

காணாத நிகழ்வுகள் அனைத்தும் பொய்யுமல்ல

கண்டதே காட்சி! அதுவே அனைத்திற்கும் சாட்சியென்றால்?

காய்ந்து போவோம் நாமும் கானல் நீரினால்

தியாகிய நான்

வாழ்க்கை என்பது ஒரு பயணம்என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்!வாழ்க்கையைப் பற்றி பல விதங்களில் பல அறிஞர்கள் பலவற்றைச் சொல்லியிருந்தாலும்,முன்னே சொன்னததுதான் எனக்கு மிகவும் பொருந்திய ஒன்றாய் தோன்றுகிறது. ஆம்!பிறப்பில் தொடங்கும் பயணம் இறப்பில் முடிகிறது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.ஆனால் இந்த இடைப்பட்ட பயணத்தில் மனிதன் பலவகைப் பயணங்களை மேற்கொள்கிறான்! அறிந்துக்கொள்ளுவதற்காக, சாகசத்திற்காக, மகிழ்ச்சியில் திளைப்பதற்காக,கடவுளைத் தேடி என்று அவை இருக்கும்.மனதிற்கு இன்பத்தையோ திருப்தியையோ தருகின்ற பயணங்களைப் பற்றி கூறினேன்,இப்பொழுது அதனின் மறுபக்கத்தையும் கூறுகிறேன். பிறப்பிலிருந்து இறுதி யாத்திரை செல்லும் வரை, ஒவ்வொரு வினாடியையும் துன்பத்திலும்,ஏக்கத்திலும்,கண்ணீரிலும்,பயத்தில் மட்டுமே பயணிக்கும் பயணிகள் பலர்!

பல மக்கள்,பூலோகம் என்னும் இப்புவியில், நரகத்தில் நசுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர்.இன்பமயமாய் சொர்க்கத்தில் மிதக்கும் மனிதர்களுக்குத், தெரியுமோ? இல்லை தெரிந்தும் தெரியாததாக இருக்கும் கானல் நீராய்! தங்களின் சக மனிதனின் துயரங்களைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.பல மனிதர்களுக்கு உண்மையில் துன்பத்தில் பயணிக்கும் பயனிகளைப் பற்றி தெரிவதேயில்லை! கல்லாமையால் என்றால் இல்லை,இது அறியாமை!என்ன? புரியவில்லையா! கல்வி நிலையங்களில் சென்று பல பட்டங்கள் வாங்கியவர்களிடம் கல்லாமை இருக்காது.அவர்தான் பல கலைகளில் வல்லவராய் இருக்கிறாரே! அறியாமை என்பது நடந்துக் கொண்டிருக்கும் உண்மை நிகழ்வுகளை அறியாமல்,தான் கொண்ட துறைக்கல்வியைக் கொண்டு வாழ்நிலை உண்மையை தெரியாமல்,தான் உணர்ந்தப்படிதான் இவ்வுலகம் சென்று கொண்டிருக்கின்றது என்று கானல் நீரை, உண்மையாகக் கொண்டு வாழ்வது.

வல்லவர்கள்,சான்றோர்,இளைஞர்கள் எனப் பலர் இந்த அறியாமையில் தான் உள்ளனர்! என்பது மறுக்க முடியாத வேதனைக்குறிய விஷயம்.

கதிரவனின் கதிர்கள், பூமியின் ஒரு பகுதிமேல் படும்பொழுது நமக்குப் பகலாகவும், மற்றொரு பகுதி இரவாகவும் மாறி வருகிறது.அதுபோல் பல மக்களுடையப் பயணம் துன்பமும் இன்பமுமாக மாறி வரும். இப்புவிக்கூடப் பகல் இரவு என்று இருநிலைகளைப் பார்க்கும் பொழுது,இதில் ஜனித்த பாதிக்கும் மேலான மக்கள் மட்டும், வெறும் துயரங்களையே பார்த்து வந்துக்கொண்டிருக்கின்றனர் என்பது எவ்வளவு கொடுமை!

இரயில் பயணங்களிலோ அல்லது பேருந்துகளிலோ யாரேனும் தவறி விழுந்தாலோ அல்லது மற்றவரால் நெரிசலில் தள்ளப்பட்டாலோ பதறும் மனம்,வாழ்க்கை பயணத்தில் தவறிப்போகிறவர்களை கண்டு கொள்ளாமல் இருப்பது தகுமா?

சரி,இவ்வாறு பிதற்றிக்கொண்டிருப்பவன் யார்? எதற்காக பிதற்றுகிறான் என்று கேட்பவர்களுக்கு என்னைப் பற்றிய அறிமுகம்.

என் பெயர் ஆதி. இப்பெயருக்கு காரணம் பெரிதாக ஒன்றுமில்லை.இனி நீங்கள் வாசிக்கப் போகும் கதையினை தொடங்கி வைப்பதோடு(பெரும்பாலும் அத்தியாயத்தின் ஆரம்பத்தில் வருவேன்),நான் இல்லாமல் கதை இல்லை என்பதால் இப்பெயர் (பகுதி நேர கதை சொல்லும் பணியை மேற்கொள்வதால்). கதையின் நிகழ்வுகளில் பல இடங்களில் வந்து தொந்தரவு தரமாட்டேன்! என்று என்னால் உத்தரவாதம் தர முடியாது, அதேபோல் சில நேரங்களில் கதையில் நிகழ்வதை, விமர்சிக்கும் வேலையையும் செய்வேன்.ஆதனால், வாசக நண்பர்கள்! சிறிது பொறுமை கொண்டு, இந்த பிரியனின் பிதற்றல்களைக் கண்டு கோபம் கொள்ளாமல் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் தயாராய் இருக்கின்றீர்களா? சரி!

கதை சொல்லவதற்கு முன்,இக்கதை பல உண்மைகளைத் தழுவி வருவதால்,பல இடங்களில் இன்பச்சுவை இருக்காது! கசப்பும் காரமும் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும்!(நான் உணவு பிரியன்,அதனால்தான் சுவை என்று பேசிக்கொண்டிருக்கிறேன்) உங்களுக்காக நானே பல இடங்களில் விகடகவியாகவும் (?) வேலை செய்து சிலவற்றை நிரப்ப இருக்கிறேன். சொல்லாமல் காணமலும் போவேன், பகுதி நேரப்பணி செய்யும் எனக்கு? ஆசிரியர் ஊதியம் சரியாக தருவதில்லை என்கிற காரணத்தால் இப்படி சில நேரங்களில் காணாமல் போய் விடுவேன்! உனக்கு மட்டுமல்ல எங்களுக்கும்தான் என்று சொல்கிறீர்களா? என்ன செய்வது நண்பர்களே! இந்நிலை மாற போராடுவோம். கதைக்குள் போவோம். வாருங்கள்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.