(Reading time: 19 - 38 minutes)

10. தவமின்றி கிடைத்த வரமே - லேகா

Thavamindri kidaitha varameமொட்டை மாடியில் நின்று வெளியே தெரிந்த புல்வெளியையும் வானத்தையும் வெறித்தபடி இருந்தான் ப்ரனிஷ். மனதில் இருந்த குழப்பங்கள் முகத்தில் பிரதிபலித்தன. இருக்காதா பின்னே? இன்று முதல், சரியாக சொன்னால், இரவு 2:23 இல் இருந்து இவன் வாழ்வில் நடப்பது எதுவும் இவன் இசைந்ததினால் நடந்ததல்லவே! அவனையே மீறி நடந்தது. தன்னை இப்படி புலம்ப வைத்த அந்த காட்சியை நினைத்துப் பார்த்தான் ப்ரனிஷ்.

அன்றோடு அவன் ப்ரியாவின் வீட்டிற்கு வந்து பத்திற்கும் மேற்பட்ட நாட்கள் கழிந்திருந்தது. இத்தனை நாட்களில் அங்கிருந்த அனைவரும் (ப்ரியாவின் தந்தையைத் தவிர) அவனை அந்நியமாகப் பாராமல் அவர்களோடு ஒருவனாகவே பார்க்கத் தொடங்கியிருந்தனர். அவனும் அவர்களோடு ஒன்றிபோயிருந்தான். விடிந்தால் ப்ரியாவின் திருமணம். அதற்குப் பின் அவன் இங்கு தங்குவதற்கு எந்த காரணமும் இல்லாமல் போகும். அதனால், அடுத்து என்ன செய்வது என்று அந்த நடு இரவில் தன் அறையில் படுக்கையில் புரண்டு யோசித்துக் கொண்டிருந்தவனை அதனை செய்ய விடாமல் தொந்தரவு செய்தது ஒரு முனங்கல்.

அது வேறு யாருமல்ல, ப்ரனிஷின் ஆருயிர் தோழன் யாதவே. தற்பொழுது தன் காதலி அமிர்தாவுடன் அவன் அறியா தேசத்தில் டூயட் பாடியபடி தூங்கிக்கொண்டிருந்தான். அதனைக் கனவோடு நிறுத்தாது, தலைவியை நினைத்து தலையணையை அணைத்து புலம்பிக்கொண்டிருந்தான், ப்ரனிஷின் சிந்தனையையும் உறக்கத்தையும் செவ்வனே கெடுத்தபடி.

யாதவின் நிலைகண்டு, சங்க இலக்கியத்தில் காதலனை எண்ணி உருகும் தலைவி கூட தோற்றுப்போவாள் என்று எண்ணங்கொண்டான் ப்ரனிஷ். பின், இப்படி ஒரு காதற்பித்தனுடன் அறையை பங்குபோட வேண்டுமா இல்லை தனியறை வேண்டுமா எனக் கேட்ட அருளிடம் பெருந்தன்மையாக மறுதலித்த தன் மடமையை திட்டியவாறு எழுந்து அந்த அறையின் பால்கனிக்கு வந்து தோட்டத்தை நோக்கினான்.

பல வகையான மலர்களை உடைய தோட்டமது. ஒரு பக்கம், மல்லிகை, சாதிமல்லி, முல்லை போன்றவை தம் வெண்மைநிற அழகை அந்த நடுநிசியில் தன்னைத் தேடிவரும் வண்டினக் காதலர்களுக்கு கலங்கரை விளக்கமெனக் கொண்டு வழிகாட்ட, அதன் எதிர்புறமோ, கனகாம்பரம், ரோஜா, செண்பகம் என பல நிறங்களை உடைய மலர்கள் அணிவகுத்து நின்றன.

இதுவரை எத்தனையோ முறை இவ்விடத்தை அவன் கண்டிருந்தாலும், அன்று நிலவொளியில் காணும்போது அவன் மனம் கொள்ளை போனது. அத்தோடு நிற்காமல், இந்த மானிடனும் வண்டென பறந்தான் அங்கு செல்ல கீழிறங்கும் படிகளை நோக்கி.

கீழ்த்தளத்தில் உற்றார் உறவினர்கள் என வந்திருந்தவர்களில் பெரும்பாண்மையானோர் உறக்கத்தில் இருக்க, மற்றவர்களோ, குழுக்களாகக் கூடி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இவர்கள் அனைவரையும் தாண்டி அவன் வாயிலைக் கடந்து அடியெடுத்து வைக்க, அவனை குளிர்க் காற்றோடு தலையசைத்து வரவேற்றன அங்கிருந்த செடிகள். அவன் வருகையை எதிர்பார்த்தே காத்திருந்தனவோ அவை? அதனை ஏற்றுக்கொண்டதாக ஒரு புன்னகையை சிந்தியவன், தன் கைகளை மாருக்குக் குறுக்கே கட்டியவாறு நடக்கத் தொடங்கினான்.

தோட்டத்தின் இரு ஓரங்களிலும் ஆங்காங்கே ஓய்வாக அமர்வதற்காக பென்ச்சுகள் போடப்பட்டிருக்கும். அவற்றில் ஒன்றை உள்ளிருந்து கசிந்து வந்த ஒளியின் உதவியால் கண்டறிந்து அமர்ந்து கொண்டான் ப்ரனிஷ். அவனது மனமோ, அங்கு அவன் கண்ட காட்சியிலும், இரவின் அமைதியிலும் லயித்திருந்தது. தன் கூறிய நாசிகள்மூலம் அங்கு கமழ்ந்த நறுமணத்தை நுகர்ந்து ரசித்தபடி மீண்டும் தன் எண்ணங்களில் மூழ்கினான் நம் நாயகன்.

சிறிது நேரத்தில் உள்ளிருந்து மெலிதாக கேட்ட குரல்களும் ஒவ்வொன்றாய் அடங்கிப் போயின. வெளியே தோட்டத்திலேயே அமர்ந்திருந்த ப்ரனிஷும் தன்னை ஆள வந்த நித்திராதேவியிடம் தன்னை முழுவதும் தந்துவிட்டு அந்த இடத்திலேயே அமர்ந்தவாக்கில் துயில் கொண்டான்.

எத்தனை நாழிகைகள் கடந்ததோ, அவன் அறியான். ஆழ்ந்த உறக்கம் என்னும் கோட்டை நோக்கி அவன் ஓடிக்கொண்டிருந்தான். அப்போது, சின்னதாக ஒரு சத்தம் ‘டட்’ என. அந்த சிறு ஓசை ப்ரனிஷின் காதுகளில் துல்லியமாக விழ, அவன் துயிலுணர்ந்து என்னவென்று காண தன் கண்களால் துளாவினான். அந்த இருட்டிற்கு தன்னை சிறிது பழக்கப்படுத்திப் பார்த்தபோது பார்வையில் விழுந்தது அது.

ஒரு ஆண் உருவம் கையில் எதையோ எடுத்துக்கொண்டு கேட்டின் அருகே பதுங்கிப் பதுங்கி சென்றுகொண்டிருந்தது. சட்டென்று சுற்றும் முற்றும் பார்வையை சுழற்றியவன், யாரும் இல்லை என அறிந்து கொண்டான். அவனது யூகத்தின்படி, அப்போது மணி ஒன்றைக் கடந்திருக்க வேண்டும். இது கள்வர்கள் களவுக்கு வரும் நேரமல்லவா? விழித்துக்கொண்டது அவன் மூளையும். வீட்டினுள் அவ்வாறு யாரோ நுழைந்து திருடிச் செல்கின்றனரா? இது நிச்சயமாக அவ்வாறு தான் இருக்கும் என்று யூகித்தவன், அந்த திருடனை கையும் களவுமாக பிடிக்க எண்ணங்கொண்டு இருட்டில் மறைந்து அவனைத் தொடர்ந்தான். இன்னும் சிறு அடிகளில் அது கேட்டை அடைந்துவிடும். அதன்பின், அந்த கும்மிருட்டில் தேடுவது கஷ்டம் என நினைத்து, யாரையேனும் அழைக்க எண்ணினான். ஆனால், அதற்கு தாமதமாகும் என்கிற காரணத்தால் அதனை விடுத்து அந்த ஆடவனைப் பின்தொடர்ந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.