(Reading time: 19 - 38 minutes)

நீ தான் பொய் சொல்ற. நாங்க ஒரு வருஷமா லவ் பண்றோம். அவன் வீட்டுல ஒத்துக்கலை. எங்க வீட்டுலையும் என்னைக் கேட்காம நிச்சயம் பண்ணிட்டாங்க. இத இவங்கிட்ட சொன்னப்போ, நாம இரண்டு பேரும் எங்கேயாவது போய்விடலாம்ன்னு தான் என்னை பையோட வர சொன்னான். கொஞ்ச தூரம் போனதும் பயமா என்னன்னு தெரியலை. என்னை திரும்ப வீட்டுக்குப் போக சொல்லிட்டான். நான் மறுக்க, இவன் என்னை இங்கே இழுத்துட்டே வந்துட்டான். இப்போ உங்க எல்லாரையும் பார்த்ததும் மறுக்கறான்”

“ஏது… நான் உன்னை லவ் பண்ணேனா? சரி. அப்படியே வெச்சுப்போம். எப்போவோ ஓடிருக்கலாமே. எதுக்கு இன்னைக்கு வரைக்கும் வைட் பண்ணனும்?” என்று எதிர்கேள்வி கேட்டான் ப்ரனிஷ்.

நடப்பதை நம்பமுடியாமல் பார்த்திருந்தது நம் இளைஞர் பட்டாளம் (வர்ஷினியும் யாதவும் அருளும். வானதி அருகில் இருக்கும் அவள் வீட்டில் இருந்ததால் இவை அவளுக்கு செவி வழி செய்தியாகவே கிட்டியது).

“அது… அது…” எனத் தடுமாறிய ப்ரியா, சட்டென்று சுதாரித்துக் கொண்டு கூறினாள், “நீ எப்படியாவது இவங்க மனசுல இடம் பிடிச்சு இந்த திருமணத்தை நிறுத்தறேன்னு சொன்னியே! அதனால தான் வைட் பண்ணேன்” என மேலும் அடுக்கடுக்காகக் கூறினாள் ப்ரியா.

“ஏய்ய்ய்….” எனக் கத்தி ப்ரியாவை நோக்கி ப்ரனிஷ் அடியெடுத்து வைக்க, “நிறுத்துடா” என கர்ஜித்தார் கைலாசநாதன். வேகவேகமாக ப்ரனிஷின் அருகே வந்த அவர், அவன் சட்டையை கொத்தாக பிடித்து, அவனை நோக்கி, “இதுக்குத் தான் எங்க வீட்டுக்கு வந்தியா?” எனக் கேட்க, துடிதுடித்துப் போனான் ப்ரனிஷ். இந்த வார்த்தை அவன் எதிர்பார்த்ததுதான். ஆனால், இத்தகைய நிலைமையில் அல்ல. அவரை அதிர்ச்சியுடன் பார்த்தான் ப்ரனிஷ்.

“ச்சீ…” என அவனை உதறியவர், அவனை விட்டு சிறிது தள்ளி இருந்த ப்ரியாவின் அருகில் சென்றவர், அவளை ஓங்கி கண்ணத்தில் ஒன்று விட்டார்.

“நீயும் என் முதுகுல குத்தீட்ட இல்ல?? நான் உன்னைப் பத்தி நினைச்சது உண்மைன்னு நிரூபிச்சுட்டியே…. உன்னை…” என உக்கிரமாகக் கூறிக்கொண்டு, அவளை இன்னொரு முறை அடிக்க கையை ஓங்க, வலி தாங்காமல் ப்ரியா பயத்துடன் பின்னடைய, அதற்குள் அவரது அருகில் வந்திருந்த விஷ்வநாதன், அவரைத் தடுத்திருந்தார்.

“என்னை விடுங்கண்ணே” என தன்னிடம் இருந்து விலக முயன்ற கைலாசநாதரை மற்றவர்களிடம் ஒப்படைத்து உள்ளழைத்துச் செல்லக் கூறிவிட்டு, அவர்கள் விலகியதும், அங்கே திக் பிரமை பிடித்து நின்றிருந்த இருவரிடமும் வந்தார் அவர்.

“என்ன ப்ரியா இது? என்னிடம் சொல்லியிருக்கலாமே?” என அக்கறையாகக் கேட்டார் அவள்மீது தூய்மையான அன்பு கொண்ட அந்த மனிதர்.

“என்னை மன்னிச்சுடுங்க பெரியப்பா… எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை” என்று அழுகையோடு அவர் தோளில் சாய்ந்தாள் ப்ரியா.

“ஷூ… இனி ஒன்னும் கவலைப் படாதே… நான் பார்த்துக்கறேன்” என்றவர், அவள் முகம் நிமிர்த்தி, “உனக்கு அந்த பையனை ரொம்ப பிடிச்சிருக்காமா?” என வினவினார்.

“ம்ம்ம்….” என்று மேலும் கீழுமாக தலையாட்டினாள் ப்ரியா.

“தம்பி… உங்களுக்கு…” என்று கேட்க ப்ரனிஷின் பக்கம் திரும்பியவர், அவன் கொலை வெறியுடன் ப்ரியாவை நோக்கிக்கொண்டிருக்க, அவர் நெற்றியில் முடிச்சு விழுந்தது.

வீட்டை நோக்கித் திரும்பியவர், தன் மனைவியையும் பவானியையும் வர்ஷினியையும் அழைத்து ப்ரியாவை உள்ளே அழைத்துச் செல்லுமாறு கூறி அவளை அவர்களுடன் அனுப்பிவைத்தார்.

பின் ப்ரனிஷிடம் வந்தவர், “தம்பி, உங்களிடம் கொஞ்சம் பேசனும். என்னோடு வர்றீங்களா?” என அவனை அழைத்துக்கொண்டு அருகில் இருந்த மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகளில் ஏறினார்.

“இவரிடமாவது முழு உண்மையையும் கூற வேண்டும்” என்று நினைத்து அவரைப் பின்தொடர்ந்தான் ப்ரனிஷ்.

மாடியில் வெளிச்சமாக இருந்த ஒரு இடத்திற்கு இருவரும் செல்ல, ப்ரனிஷை நோக்கி, “சொல்லுங்க தம்பி… என்ன சொல்லனும்?” என கேட்டார் விஷ்வநாதன்.

“அங்கிள், என்னை நம்புங்க… நாங்க லவ் பண்ணலை… அவ சொன்னது எல்லாமே பொய்…” என உண்மையை உடைத்தான் ப்ரனிஷ்.

ப்ரனிஷின் முகப்பாவனையை வைத்தே இதனை சிறிது யூகித்திருந்த அவருக்கு இது அந்த அளவுக்கு அதிர்ச்சியைத் தரவில்லை.

“நீங்க ப்ரியாவை கீழே பார்க்கும்போதே தெரிஞ்சுருச்சு தம்பி, என் பொண்ணு பொய் சொல்லிருக்கான்னு… ஆனா, இப்போ, அவ சொன்னதை திருப்ப எடுத்துக்க முடியாது… அத்தனை பேர் முன்னாடியும் உங்களை பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டா… சின்னப் பொண்ணு… அதோட விளைவுகள் புரியலை. இது கிராமம் தம்பி… நாங்க என்ன தான் டெக்னாலஜி, அது இதுன்னு வளர்ந்திருந்தாலும், இன்னும் சில விஷயங்களில் நாங்க பழையபடிதான் இருக்கோம்ப்பா… இதுக்கப்புறம் எங்க பொண்ணுக்கு வேறு பையனைக் கட்டி வைக்கிறதுங்கறது, முடியாத காரியம், அது சரிபட்டும் வராது. வார்த்தைங்கறது கிணத்துல போட்ட கல்லு மாதிரி தம்பி… திருப்பி எடுக்க முடியாது… சரி பண்ணத்தான் முடியும்… அத சரி பண்ணத் தான் உன்னிடம் கேட்கறேன்… நான் கேட்கறதுக்கு ஒத்துப்பியாப்பா?” எனக் கேட்டார் அவர்.

அவர் தன்னை நம்புகிறார் என்ற சந்தோசத்தில் இருந்தவன், “சொல்லுங்க அங்கிள்… எதுவா இருந்தாலும் செய்யறேன்” என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.