மூங்கில் குழலானதே – 23 - புவனேஸ்வரி
உண்மைகள் உன்னதமானவை! கௌரவிக்கப்பட வேண்டியவை! அனைவராலும் மதிக்கப்படுபவை! இவையெல்லாம் உண்மையெனில், ஏன் உண்மையை மனிதன் புன்னகையுடன் எதிர்கொள்வதில்லை?
“அந்த கண்ணாடிய நீதான் உடைச்சியா? உண்மைய சொல்லுடா?”
“..”
“அம்மா அடிக்க மாட்டேன் உண்மையை சொல்லு” என்று ஓர் அன்னை ஊக்கிடவும், தண்டனைக்கு பயந்த பிள்ளை திக்கி திக்கி ஆமென தலையசைக்கிறான். அடுத்தநொடி தாயின் தண்டனை அவன் மீது அடியாய் விழுகிறது!
இப்போது உண்மையை உடைத்து குற்றம் புரிவது யார்? அந்த சிறுவனா? அல்லது அடிக்க மாட்டேன் என்றே கூறி கோபத்தில் கொதிக்கும் அன்னையா? உண்மை என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிந்தவராக இருப்பின் அவனை அடித்திருப்பாரா என்ன?
அந்த அன்னை மட்டுமல்லவே! நம்மில் அனேகர்கள் அப்படித்தான் இருக்கிறோம். உண்மையை விரும்புகிறோம்..உண்மையை எதிர்ப்பார்க்கிறோம்.. ஆனால் உண்மையை முழுவதுமாய் மொழிகிறோமா? நமக்கு சாதகமான நிலையில் மட்டும்தான் உண்மை வெளிப்படுகிறது.
ஆனால் நம்மை தேடி வரும் உண்மைகளை நாம் சாதகமாக்க நினைப்பதில்லை. உண்மை என்ற பெயரில் நமக்கு துரோகம் இழைக்கப்பட்டது அறியப்பட்டால், அதை ஏற்றுகொண்டு மன்னிக்கிறோமா? இல்லையே! “ச்ச இதுக்குத்தான் உண்மையை சொல்லாமலேயே இருந்தேன்!”என்று எதிராளியே புலம்பிடும் அளவிற்கு தண்டித்து விடுகிறோம்! உண்மையில், உண்மையை எதிர்கொள்ளும் சக்தி நமக்கு மிக குறைவாகவே உள்ளதோ? சிந்திக்கிறேன் சகிதீபன்!
மோகமில்லாத தீண்டல் அது!வெண்ணிலவும் அபிநந்தனின் மையலைக் கண்டு கருமேகங்களுக்குள் முகம் புதைத்துக் கொள்ள, மண்ணில் உதித்த நிலவென அவன் மார்பிற்குள் மறைந்துகொண்டாள் நந்திதா. முழுவதுமாய் அவளை ஆக்ரமிக்க மனமில்லை அவனுக்கு! என்னத்தான் நந்திதா மட்டுமே தன் துணையென அபி தெளிந்திருந்தாலும், அதே தெளிவை அவள் மனதிலும் நிறுத்திவிட வேண்டுமென என்றோ தீர்மானித்திருந்தான். அதிலிருந்து சற்றும் விலகாதவன், அவளது பிறை நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டு,
“ஐ லவ் யூ சோ மச் நிதூ” என்று உரைத்து அவளை விடுவித்தான். அவன் தந்த கதகதப்பில் நிம்மதியாய் உணர்ந்தவள்,முதலில் அவன் வார்த்தையை கவனிக்கவே இல்லை. கவனித்த மறுநொடியோ, அவனையே இமைக்காமல் பார்த்தாள்.
“என்ன சொன்னீங்க?”
“என்ன?”
“என்னை என்னன்னு கூப்பிட்டீங்க?”
“நந்துனு சொன்னேன்!”
“இல்லையே”
“ஆமாவே!”
“அ.,.பீ..” என்று அவள் பற்களை கடிக்கவும் அவன் மலர்ந்து சிரித்தான்.
“ஹா ஹா அதான் நல்லாவே கேட்டுச்சுல ? அப்பறம் என்ன மறுபடியும்கேட்குற?”
“ஏன் கேட்டா சொல்ல மாட்டீங்களோ?”
“நீ கேட்கவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கு!நிதூ!”என்றவனின் குரலில் இருந்ததுகுற்ற உணர்ச்சியா? வலியா? என்று தெரியவில்லைஅவளுக்கு. நந்திதாவின் கையைப் பிடித்து கொண்டான் அவன்.
அவனையே ஊடுருவி பார்த்தாள் அவள். அதே நேரம்தன்னிலையையும் எண்ணி வெகுண்டாள். “இதுதான் நீ அவனை தண்டிக்கிற லட்சனமா நந்திதா? அவன் தொட்டாலே உருகி போயிடுவியா? லூசு லூசு”என்று அவளது மனம் திட்டியது.
“வேண்டாம்.. இதை மீறிய நெருக்கம் வேண்டாம்!”என்று உள்மனம் எச்சரிக்க,அவளும் படுக்கையை விட்டு எழ முயன்றாள்.அவளது திடீர் ஒதுக்கத்தை தாளமுடியாதவன் போல அவளை கை நீட்டி இழுத்து தன்னுடன் அமர்த்திக் கொண்டான் அபி.
“ப்ச்ச்..என்ன இது?”
“எது?”
“நான் போகனும்..”
“ஏன்?”
“அத்தை தேடுவாங்க..”
“அம்மாதூங்கியிருப்பாங்க!”
“திடீர்னு முழிச்சா தேடுவாங்க..!”
“அது தெரிஞ்சும் நீயாதானேடீ வந்த?”
“வந்தேன்தான்! அதுக்காக இங்கேயே இருக்கேன்னு அர்த்தமா? அத்தை என்னை தேடி பார்த்துட்டு என்ன நினைப்பாங்க?”
“என்ன நினைப்பாங்க?அவங்களுடைய மகன்மீது மருமகளுக்கு ஆசையோ ஆசைன்னு நினைப்பாங்க” என்று சரசமாய் அவன் கூறிடவும், குப்பென முகம் சிவந்து போனாள் நந்திதா.