நடுஇரவில் கைகளைத் தலையணையாக்கொண்டு தான் உருவாக்கிய உலகில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறாள் அச்சிறுமி.
அவளின் கற்பனை உலகத்தின் சிறுப்பகுதி இதோ!
நீரோடை தான் போகும் வழியில் வருகின்ற எல்லாவற்றையும் ஒருவித இசையுடன் தழுவி செல்வதுப்போல் அக்குழந்தை தன்னுடன் வருகின்ற அனைவரிடமும் அன்பாகப் பேசியப்படி உற்சாகத்துடன் தன் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தாள்..
அவள் மட்டுமல்ல கூட வரும் பல தேவதைகளின் முகமும் மகிழ்ச்சியைப் பிரதிபலிக்கிறது.
அக்கணத்தில், தோளில் கனம் இருந்தாலும் அவர்களின் மனம் கனமில்லாமல் பார்க்கும் அனைத்தையும் இரசிக்க செய்தது.
பார்க்கும் குருவியிலிருந்து படிக்கும் பாடம்வரை அனைத்தை பற்றியும் ஒருவித சிணுங்கலோடான பல பேச்சுகள்,அவ்வீதியை அலங்கரித்தது.
யார் சொன்னார்கள்? மேடும் பள்ளமும் உள்ள வீதி அழகில்லையென்று!
ஆளில்லா வீதியை அலங்கரித்து வைத்தாலும், அவை அழகு சேர்க்காது, பிள்ளைகள் அதில் நடமாடதவரை!
அவரவர் வீடுகள் வர அனைவரும் பிரிந்து சென்றனர்.பிரிவு மறுநாள் வரைதான் என்பதால், வருத்தம் இல்லாமல் மகிழ்வுடன் சென்றனர்.
வீடுவந்தவுடன், மகிழ்வுடன் அன்னை அவளின் கன்னத்தில் முத்தம் வைத்து புத்தகப்பையை வாங்கி, அவளைச் சுத்தப்படுத்தி வர சொல்லிவிட்டு சிற்றுண்டி எடுத்தவர உள்ளே சென்றார்.
அன்னையின் சொற்படி வந்த குழந்தையின் முன் எளிமையான சிற்றுண்டி!
குழந்தைகள் உணவு உண்ணும் அழகே வெகு அழகுதான்! அதை கண்டால் அனைவருக்கும் உள்ளம் உவகையில் பொங்கும்.அப்படியிருக்கையில் ஈன்ற தாயின் மனநிலையை வர்ணிக்கவும் வார்த்தை உண்டா!
அத்தகையக்காட்சி எந்தவொரு ஆர்பாட்டமுமில்லாமல் அழகாய் அங்கு அரங்கேறியது.
சிறிதி நேரத்தில் அவளின் தந்தையும் வர இனிமை பன்மடங்காகியது.
படிப்பறிவில்லா பெற்றோராயினும் பட்டறிவுள்ளவராக இருந்ததால், அக்குழந்தை பள்ளி செல்கிறது.
பெண் படிப்பதைப் பார்த்து, புரியாவிட்டாலும் மனமகிழ நோக்கினர் அத்தம்பதியினர்.
தாய்தந்தையின் அருகில் அமர்ந்து அவர்கள் சொல்லும் கதையினை உள்வாங்கியப்படி உறங்கினாள்.
இக்கற்பனை உலகை உருவாக்கும் திறன் இன்றோடு அவளை விட்டு விடைப்பெறப்போகிறது ! அதுமட்டுமா?
இனிதான உறக்கம்.கனவிலாவது அவளுக்கு இன்று கிடைக்கட்டும்.
(வாருங்கள் நண்பர்களே! இக்குழந்தை உறங்கட்டும், நாம் அங்கு வேறொருவனை சந்திப்போம்.
சிலர் செய்யும் செயலுக்கு இவர்களையெல்லாம் பெயரிட்டு அழைக்க வேண்டுமா?என்று தோன்றும்.பெரிதாக தப்பு செய்பவர்களைவிட, அதற்கு துணை போகின்றவர்கள்தான் உண்மையில் மிகப்பெரிய தீயவர்கள்.குற்றத்தில் சிறிதென்ன பெரிதென்ன என்றாலும், அது மிகப் பூதாகரமாக வளருவது பலரின் துணை செயல்களால்தான்! அவர்களைதான் உண்மையில் இச்சமுகத்திலிருந்து களையெடுக்க வேண்டும்.)
இப்போ உனக்கு என்னதான் பிரச்சினை? என்று கேட்டான் புல்புலின் தந்தையோடு வந்தவன்.
இல்ல, போனதடவை கொஞ்சம் பெரியவ, இவ ரொம்ப சின்னப் பெண்ணாக தெரிகிறார்களா? அதான் கொஞ்சம் பயமாக இருக்கு, என்றான் புல்புல்லின் தந்தை.
உண்மைய சொல்லனும் என்றால், இந்த மாதிரி சிறு பெண்ககளுக்குத்தான் பணம் அதிகம் கிடைக்கும். அவர்கள் ஏலத்தில் நல்ல விலையில் வாங்கப்படுவார்கள். உனக்கும் முன்னவிட அதிக பணம் தருகிறேனே, பிறகென்ன நான் சொன்னப்படி எல்லாம் சரியா இருக்கனும் என்றான்.
இந்த எட்டு வருடத்தில்,நாங்கள் கொஞ்சம் மோசமான நிலைக்கு வந்து விட்டோம், அதோடு இப்பவெல்லாம் இங்க ரொம்ப கண்காணிப்பு அதிகமாயிடுத்து,முன்னமாதிரி எல்லாம் இங்க எல்லாரையும் சமாளிக்க முடியாது.அதனால் நீங்க இன்னும் கொஞ்சம்கூட சேர்த்துதான் கொடுக்கனும் என்றான் புல்புல்லின் தந்தையாகப்பட்டவன்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே நம் பூதகி வந்தாள்.
(ஐயோ!பூதம் ....பூதம்! நண்பர்களே! எங்கே இருக்கிறீர்கள்?
ஹப்பா! இப்பதான் நிம்மதி. எனக்கு பூதம் என்றால் மிகவும் பயம் நண்பர்களே! அதுவும் இவளைப் பார்த்தால் ரொம்பவும் பயம்! இங்கிருந்து நான் தப்பிக்கப் போறேன்!என்னை இப்ப தேடாதீங்க!பயப்படாதீங்க பூதத்தோடு கண்ணுக்கு நீங்க தெரியமாட்டீங்க, அதனால நீங்க இங்க இருங்க! ஹி ஹி பாதியில் விட்டுட்டு போறேன் கோவப்படாதீங்க.சரியான நேரத்திற்கு திரும்ப வந்திடுவேன்.திரும்பி வரும்போது உங்களுக்கு மிட்டாய் தருகிறேன்.சரியா?)