(Reading time: 16 - 32 minutes)

தொடர்கதை - சண்முகசுந்தரியும்... சிங்காரவேலனும்... - 01 - ஸ்ரீலக்ஷ்மி

SS

'அயிகக வாஹிநி மோஹினி சக்ரிணி

ராக விவர்த்தினி ஜ்ஞானமயே

குண கண வாரிநி லோக ஹிதைஷிணி

ஸ்வரஸப்த பூஷித கானனுதே !

ஸகல ஸுராஸுர தேவ முநீச்'வர

மாநவ வந்தித பாதையுதே

ஜய ஜய ஹே மதுஸூதந காமிநி

ஸ்ந்தானல்க்ஷ்மி ஸ்தா பாலயமாம் !!

இருபத்தி இரண்டு வருடங்களுக்கு முன்....

சென்னை மாநகர ஒதுக்குப்புறத்தில், அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகள் முளைத்திருந்த அந்த புறநகர்ப் பகுதியில், ஓரு பெரிய வீட்டின் பூஜையறையிலிருந்து ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது ஓர் கனத்தக் குரல்.. சாரீரத்திற்கே ஏற்பப் பெரிய சரீரமும்தான்..

சுந்தரவடிவாம்பாள் என்ற பெயரைச் சொன்னாலே அக்கம்பக்கம் அழுதப் பிள்ளைகளும் வாய் மூடும் என்றால், ஊர்ப் பெரிய மனுஷன் என்று பீற்றிக் கொள்ளும் சண்முகசுந்தரம் மட்டும் எம்மாத்திரம்..

"அய்யோ ஆத்தாடி.. ஆரம்பிச்சிடாங்கப்பா.. உங்கம்மாவுக்கு வேற வேலை வெட்டி என்ன.. காலையில அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்லறேன்னு தொடங்க வேண்டியது.. ஊர்ல உள்ள எல்லாப் பெண் தெய்வங்களையும் பிலாக்கணம் பாடி அழைக்க வேண்டியது.. பார்த்தீங்களா சாமி.. நானும் பார்த்தாலும் பார்த்தேன்.. அதுவும் அந்தச் சந்தானலஷ்மி மேல பாட்டை எப்படிக் கர்ணக்கொடூரமாய்க் கத்திகத்தி அழைச்சி வைக்குது.. இப்படி எல்லாம் பாடினா மட்டும் அவங்க அண்ணன் மவளுக்கு மடித் தெறந்திடுமா என்ன?.. எல்லாம் வாங்கி வந்த வரமில்ல?.."

மூத்த மருமகள் ரேணுகாவின் கட்டைக் குரலில், வீட்டுக்கடைசியில் இருந்த அடுப்பங்கரையில் இட்லிப் பாத்திரங்களைக் கோபமாக எடுத்து வைத்த ஜோரில் அந்த இடமே அனலடித்தது கிடுகிடுக்க வைத்தது.

"அடியே ரேணு?.. காலங்கார்த்தாலே எங்க ஆத்தாவை வம்புக்கிழுக்கலைன்னா நீ வைச்ச இட்லி வேகாதா என்ன?.. விடுடி.. பாவம்.. அதுவும்தான் என்ன பண்ணும்?.. தங்கச்சிக்கு ஒரு புள்ளைப் பிறக்காதான்னு வேண்டாத தெய்வம் இல்லை.. யாரோ சொன்னாங்கன்னு இப்போ புதுசா அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்லுது.. சந்தானலட்சுமிக்குப் பூஜையெல்லாம் செய்யச் சொன்னாங்களாம்.. அத்தோடு அவங்க அண்ணன் மகளுக்கு மட்டுமில்லடி.. நீயும் வாயும் வயிறுமா இப்போ இருக்கே?.. நம்ம வீட்டுக்கு எல்லா ஐஸ்வர்யத்தோடு பொறக்க அஷ்டலட்சுமியும்மில்லக் கூப்பிடுது.. அப்படி யோசியேன்.. உனக்கேன்டி இந்தக் கடுப்பு.."

"போதும் சாமி.. உங்க தம்பி பொண்டாட்டியைத் தப்பா ஒரு வார்த்தைப் பேசிடப்படாதே.. ரோஷம் பொத்துக்கினு வந்திடுமில்ல.. என்னதான் அவள் உங்க மாமன்மகள்.. முறைப்பொண்ணு வேற.. ஏதோ உங்க நல்லவேளை உங்களுக்கும் அவங்களுக்கும் பத்து வருஷ வயசு வித்யாசம்னு உங்க தம்பிக்குக் கட்டிகிட்டாங்க.."

"அதான் நீயே என் நல்லகாலம்னு சொல்லிட்ட இல்லை.. அப்புறம் என்ன?.. விடுவியா?.. பாவம்டி தமயந்தி.. என்னோடு கூடப் பொறாக்காத தங்கச்சிடி.. இனி இப்படிப் பேசி வைக்காதே.. யார் காதுலையாவது விழுந்தா ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்காது.." என்று சற்றே குரலை உயர்த்திக் கண்டிப்பாகச் சொன்னப் பலராமன்.. பெயருக்கேற்பப் பெரியவராய், தன் தம்பிக்கு நல்ல அண்ணனாய் என்றும் இருப்பவர்.

"உங்க தங்கக்கம்பியும், உடன்பொறவா தங்கச்சியையும் ஒண்ணும் சொல்லிடக்கூடாதே.. வரிஞ்சிக் கட்டி உங்க மொத்தக் குடும்பமும் வந்துடுமில்ல.. நான் வெள்ளன எழுந்து சமையல் கட்டுல வெந்து வேக, அவப் பெரிய வீட்டு மகாராணி.. வெள்ளிக்கிழமை…விடியும் வேளை.. வாசலில் கோலமிட்டேன்னு ஒரு மணிநேரமா தெருவில உட்கார்ந்து இருக்கா?..”

“என்னத்தான் சொல்லு நான் அல்லு அசலுதானே சாமி.. வெளியே இருந்து வந்தவள்.. ஏழைச் சொல்லு அம்பலம் ஏறுமா சொல்லுங்க?.. எவ்வளவு தைகிரியம் இருந்தா உங்காத்தாவும் எங்கிட்ட புள்ளையைக் கொடுப்பியான்னு கேப்பாங்க?.. ரெண்டு மாசம் கூட இன்னும் கர்ப்பம் பூர்த்தியாகலை.. அதுக்குள்ள அவங்க அண்ணன் மகளுக்குத் தத்துக் கொடுக்கணுமாமில்ல.. இது எந்த ஊர் நியாயமுங்க?.. எல்லாம் எங்கத்தைச் சுந்தரவடிவாம்பா வீட்டு நியாயம்தானுங்களே?.."

தன் கண்களைக் கசக்கி வராத கண்ணீரை வலுக்கட்டாயமாக வரவழைக்க முயன்றத் தன் அருமை மனைவியை என்ன சொல்லிச் சமாதானப்படுத்துவது எனத் தெரியாமல் கைகளைப் பிசைந்தார் பலராமன்.

பாவம் அவரும்தான் என்ன செய்ய முடியும்?.. அவர் அன்னையும் அப்படிக் கேட்டிருக்க வேண்டாம்.. ஏதோ ஒரு ஆற்றாமையில் தன் சின்ன மருமகளுக்காகப் பிள்ளை வரம் தாவென மடிப்பிச்சைக் கேட்டு விட்டார்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.