(Reading time: 16 - 32 minutes)

"என்ன பெரிய மருமவளே.. காலைப் பலகாரம் தயராகிடுச்சா?.. சின்ன மருமவ எங்கே காணம்?.. ஏண்டா பெரியவனே இங்க என்ன பண்ணறே?.. போய் உங்கப்பாருக் கிட்ட இன்னிக்கு என்ன வேலைன்னு கேட்டு வேலையைப் பழகிக்கோ.. ரெண்டுப் புள்ளைக்குத் தகப்பனாகப்போற?.. இன்னும் பொண்டாட்டிப் பின்னால சுத்தாமத்தான் இருந்தா என்ன?.." வாய்த் தன் பாட்டிற்குப் பேசிக்கொண்டே போக.. கைகளோ அன்றைக்குத் தேவையான சமையலுக்குக் காய்கறிகளை ஆராயத் தொடங்கி இருந்தது.

"தோம்மா.. காப்பிக் குடிக்கலாம்ன்னு உள்ளார வந்தேன்.." என முனகி நகர..

"என்னங்க.. இந்தாங்க காப்பித்தண்ணி.. அப்படியே சின்னவருக்கும், மாமாவுக்கு எடுத்துட்டுப் போவீங்களாம்.." எனத் தட்டில் காப்பி டம்ளர்களை அடுக்கி நீட்டினாள் ரேணுகா அத்தனை நேர தங்கள் பிணக்கை மறந்து மெல்லத் தன் கணவனை உரசியபடி.

‘இவங்க புருஷன் மட்டும் கட்டையை நீட்டுற வயசுலையும் அவங்க பின்னாடிச் சுத்தலாமாம்.. என் புருஷன் என் முந்தானியைப் பிடிச்சா அது ஆகாதாம்.. இது எந்த ஊரு நியாயம் சாமி.. எல்லாம் சுந்தரவடிவாம்பா வீட்டுப் பொல்லாத நியாயமில்ல..” மனம் பொருமிக் கொண்டிருந்த்து..

வந்த வேலை முடிந்த திருப்தியில் மனைவியின் சின்ன உரசலில் மகிழ்ந்துப் போய், வாயெல்லாம் பல்லாகக் காப்பியுடன் பலராமன் நகர்ந்தார்.. அவர் ஒரு காப்பி ப்ரியர்.. ஒரு நாளைக்கு ஐந்தாறு முறையாவது காப்பி வேண்டும் அவருக்கு.

"ஏம்மா ரேணுகா?.. நீ உன் சத்துமாவுக் கஞ்சியைக் குடிச்சியா?.. இந்தச் சமயத்துல உன் உடம்பைப் பார்த்துக்க வேணாமா?.. நகரு நான் மத்த வேலையைப் பார்க்கிறேன்.."" என்றபடி மருமகளுக்கு உதவத் தொடங்கினார் அங்கே நடந்த நாடகத்தைக் கண்டும் காணாமல் அந்தப் பெரியவர்.

"அத்தை நான் பார்க்கிறேன்.. நீங்க போங்கத்தை.. மாமா உங்களை எதுக்கோ கூப்பிடறாங்க.." என்றபடி அச்சமயத்தில் உள்ளே நுழைந்தாள் தமயந்தி அந்த வீட்டுச் சின்ன மருமகள்.

"என்னம்மா.. இத்தனை நேரமா எங்கம்மா போன?.. பாருப் புள்ளத்தாய்ச்சி புள்ள காலையில் இருந்து வேலைப் பார்க்குது.. இந்தச் சமயத்தில் நீ அவளுக்குக் கொஞ்சம் உதவ வேணாமா?.." என்று தன் அண்ணன் மகளைக் கடிந்துக் கொண்டவர் அன்றைய வேலைகளை அவளுக்குப் பட்டியிலிட்டுச் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றுச் சென்றார்.

சுந்தரவடிவாம்பாள் மருமகள் இருவரையும் தன் சொந்த மகள்கள் போலவே பார்த்துக் கொண்டாலும், ஏனோ ரேணுகாவிற்கு அவர் அண்ணன் மகள் தமயந்தி மேல் மட்டும் அதிகப்படி அக்கறை காட்டுவதாகவே எப்பொழுதும் எண்ணம்..

அதற்கேற்ப அவ்வீட்டின் நிகழ்வுகளும் நடந்திருந்தன.. தமயந்திக்குத் திருமணம் முடிந்து ஏழு வருடங்களாகிவிட்டன.. ஏனோ கடவுள் அவள் பக்கம் கண்ணைத் திறக்கவில்லை.. அவளுக்கு மக்கட் செல்வத்தைக் கொடுக்க மறந்திருந்தான்.

ரேணுகாவின் மூத்த பிள்ளை சண்முகவேலனுக்கு எட்டு வயதாகி, அவள் அடுத்த வாரிசுக்கு இப்பொழுது தயாராகிக் கொண்டிருந்தாள்.. இங்கே தமயந்தியோ திருமணமாகிப் பிள்ளை வரம் வாய்க்காமல் எல்லாக் கடவுளுக்கும் மனுப்போட்டு வேண்டிக் கொண்டிருக்க, அந்தச் சமயத்தில்தான் பெரியவர் சந்தரவடிவாம்பாள் ஒரு சின்னத் தவற்றைச் சில நாட்களுக்கு முன் செய்திருந்தார்.

தன் அண்ணன் மகள் மேல் இருந்த பாசத்தில், மூத்த மருமகள் ரேணுகாவிடம் அவளுக்குப் பிறக்கப் போகும் குழந்தையைச் சின்னவனின் வாரிசாக, தமயந்திக்கும், ஜெயராமனுக்கும் தத்துக் கொடுத்துவிடக் கோரிக்கை வைக்க, அங்கே ஆரம்பித்தது எல்லா அனர்தனங்களும்.

கேட்டதில் தப்பில்லைதான்.. ஆனால் கேட்கப்பட்ட நபர்தான் தப்பானவர்.. அவரையும் தப்புச் சொல்வதற்கில்லை.. எந்த ஒரு பெற்ற தாயும் தன் பிள்ளையை, ஏற்கனவே ஒரு பிள்ளை இருந்தாலும் மற்றவர்களுக்காகப் பிரிய நினைப்பாளா?.. அதில் ரேணுகாவையும் தப்புச் சொல்வதற்கில்லை.. தன்னால் பிறக்கப் போகும் பிள்ளையைத் தரமுடியாது என ஒரேடியாக மறுத்துவிட.. அத்தோடு விட்டிருந்தாலும் பரவாயில்லை..

ரேணுகா சற்று அளவுக்கதிகமாய் வார்த்தைகளைவிட்டார்.. 'அண்ணன் மகள் என்பதால் பிள்ளை இல்லையென்றாலும், வீட்டில் மருமகளாய் இருக்க முடிகிறது.. இதே தான் ஒரு வாரிசைக் கொடுத்திருக்காவிட்டால் தன் கணவனுக்கு வேறு ஒருத்தியை இந்நேரம் மணமுடித்திருப்பார்கள் அல்லவா?.. எல்லாம் பணம் படுத்தும்பாடு..' எனச் சொல்லி சுந்தரவடிவாம்பாளை அவமானமும்படுத்திவிட..

அதையும் அந்தப் பெரியவர் அமைதியாகவே எடுத்துக் கொண்டார் அவளின் மனம் புரிந்தும், தன் தவறைப் புரிந்துக் கொண்டும்.. என்ன இருந்தாலும், ஒரு பெண்ணிடம் உன் பிள்ளையைத் தத்துக் கொடு என்று கேட்டது பெரிய விஷயம்தானே.

அந்தச் சமயத்தில்தான் பெரிய மருமகள் மனம் குளிர, சண்முகசுந்தரமும் அந்த வீட்டில் முதல் பெண் வாரிசு அடுத்துப் பிறந்தால் அவர்களுக்கு வளர்ந்து வரும் தங்கள் பலசரக்குக் கடையாய் இருந்து சற்றே பெரிய அளவில் டிப்பார்மெண்ட் ஸ்டோராக இப்பொழுது மாறி இருந்த கடையை எழுதி வைப்பதாக வாக்குறுதிக் கொடுத்திருந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.