(Reading time: 16 - 32 minutes)

பெரியவர் எல்லாவற்றையும் மறந்துச் சின்ன மருமகளுக்காகக் கடவுளிடம் இன்னும் மனுப் போட்டு, இல்லாத பூஜைகளையும், வேண்டாத தெய்வங்களையும் வேண்டிக் கொண்டு அவளின் பார்வையில் கேலிப் பொருளாகவும் இதோ இன்றளவு மாறத் தொடங்கி இருந்தார்.

காலமும், நேரமும் யாருக்காகவும் காத்திருக்காமல், அந்தப் பெரியவரின் மனம் குளிர, அவரின் அண்ணன் மகள், இளைய மருமகள் தமயந்தியின் வயிறும் நிறைந்து அவளும் கர்ப்பிணியானாள்.. பெரியவளுக்கும், சின்னவளுக்கும் இரண்டே மாதங்கள் வித்தியாசத்தில் கரு உருவாகியிருக்க அந்தப் பெரிய குடும்பமே சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருந்தது.

இரண்டு மருமகளையும் தன் கண்ணுள் வைத்துப் போற்றினாலும், ஏனோ சின்னவள் தமயந்தி முதல் முறையாகக் கருவுற்றதால் அவள் மேல் அவர்கள் அறியாமலே கவனம் அதிகமாயிருந்தது ரேணுகாவுக்குப் புகைச்சலாய் இருந்தாலும், தனக்குப் பெண் குழந்தைக் கட்டாயம் பிறக்கும், தன் மாமனார் பெண் வாரிசை முதலில் பெற்றுக் கொடுக்கப் போகும் தனக்குப் பலசரக்குக் கடை வந்து சேரும் என நம்பிக் கொண்டிருக்க..

விதியின் சதியை யார் என்ன சொல்வது?..

மூத்தவள் ரேணுகாவிற்குப் பிரசவ நேரம் நெருங்கிக் கொண்டிருக்க, இளையவள் தமயந்திக்கோ எட்டாம் மாதம் முடிவில் குறைப் பிரசவத்தில் ரேணுகாவிற்கு முன்பே அழகிய பெண் குழந்தை முதலில் பிறந்துவிட.. அடுத்த ஒரே வாரத்தில் ரேணுகாவிற்குப் பெண் மகவு பிறந்தது..

இரு பெண் குழந்தைகள் அவ்வீட்டில் சந்தோஷத்தை அள்ளிக் கொடுத்தாலும், கொடுத்த வாக்குப்படி முதலில் பிறந்த சின்னவன் ஜெயராமன் மகள் சண்முகசுந்தரிக்குப் பலசரக்குக் கடை எழுதி வைக்கப்பட, பெரியவன் பலராமனுக்கோ புதியதாய்த் தொடங்கியிருந்த துணிக்கடையைப் பாகம் பிரித்து வைத்து விட்டார் சண்முகசுந்தரம்..

அத்துடன் முதல் பெண் வாரிசைப் பெற்றுக் கொடுத்த தமயந்தியின் மகளுக்குத் தன் பெயரையும், தன் மனைவியின் பெயரையும் இணைத்துச் சண்முகசுந்தரி எனப் பெயர்ச் சூட்டி மகிழ்ந்தனர்.

வழிவழியாய் வந்த பலசரக்குக் கடைத் தங்களுக்கு வராத ஆத்திரம் ரேணுகாவிற்கு....இதோ பெரியவர்கள் காலமானாலும், ஒற்றுமையாய் இருந்த குடும்பத்தையே பிரித்துத் தனிக்குடித்தனம் வரை வந்து இன்று அண்ணன் தம்பி இருவரும் சகஜமாய்ப் பேசிக் கொள்ளும் நிலையில் இருந்து தள்ளி நிற்க வைத்து விட்டது.

ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாய் இருந்தவர்கள் இன்று எதிரெதிரே தனித்தனிப் பங்களாவைக் கட்டிக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பது இதுதானோ?..

காலம் இவர்கள் குடும்பத்தை மீண்டும் இணைக்குமா?.....பொறுத்திருந்துப் பார்ப்போம்..

தே இருபத்தி இரண்டு வருடங்களுக்கு முன்னால்... வேலூர் மாவட்டம்.. அருகே வாழையூர் என்ற சின்னக் கிராமம்..

வானம் பார்த்தப் பூமி.. வருணபகவான் மனம் வைத்து மும்மாரிப் பெய்ந்தால் அந்த வருடம் விவசாயம் அமோகமாய்ப் பொன்னாய் விளையும்.. அதே அவருக்குத் தன் மேகக் காதலியுடன் பிணக்கம் வந்து முகம் திருப்பினால் பொன் விளையும் பூமி சுடும் பாலைவனமாய் மாறி வறட்சியில் வாடியும் வதங்கும்.

விவசாயத்தை நம்பி இருப்பவர் பாடு என்றும் இன்னிலைதான்.. என்று விளையும்.. என்று பொய்க்கும் எனச் சொல்ல முடியாத ஒரு நிலை..

வாழையூரில் இவ்வருடம் வருணபகவானின் மனம் தன் மேகக்காதலியால் குளிர்ந்ததோ என்னவோ, நல்ல மழையைப் பொழிந்துப் பூமியைக் குளிரவைத்து விளைச்சலை இரண்டெடுப்பாக்கியிருந்தார்.. ஊர் மக்கள் சந்தோஷத்தில் திளைத்திருக்க.. பச்சைப் பசேலென இருந்த பயிர்களெல்லாம், முற்றிப் பொன்மணியாய் அறுவடைக்குத் தலை நிமிர்த்தி இருக்க..

அந்தோ பரிதாபம் அச்சமயத்தில்..

ஊர் பெரிய தனக்காரர் என்று போற்றப்படும் நல்லசிவத்தைப் பாம்புக் கடிக்க உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.. ஏற்கனவே மனைவியை இழந்திருந்தவர் ஒரே மகன் முத்துசாமியுடனும், மருமகள் மங்கையர்க்கரசியுடன் வசித்துக் கொண்டிருந்தார்.

ஊரே அவரைச் சூழ்ந்திருக்க..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.