(Reading time: 16 - 32 minutes)

லராமனும், ஜெயராமனும் ... சண்முகசுந்தரத்துக்கும், சுந்தரவடிவாம்பாளுக்குப் பிறந்த ரெண்டு பிள்ளைகள்.. பலராமன் ஜெயராமனை விட ஐந்து வயது மூத்தவர்.. சண்முகசுந்தரம் ஊரில் பணம் காசு உள்ளப் பெரிய மனுஷன் என்றாலும், சுந்தரவடிவாம்பாளின் பிறந்தகத்துச் சொத்துக்குச் சற்றே வசதியில் கீழானவர்தான்.. அவரின் குணத்தைப் பார்த்து சுந்தரவடிவாம்பாளைத் திருமண முடித்தவர்கள், அவர்களின் பெயர்ப் பொருத்தத்தில் மகிழ்ந்து தங்கள் செல்ல மகளுக்கும் நிறைக்கச் சீர் செய்து அனுப்பி வைத்திருந்தனர்.

சுந்தரவடிவாம்பாளின் அண்ணன் மகள்தான் தமயந்தி.. பின்னாளில் வடிவாம்பாள் தன் அண்ணன் மகளைத் தன் மகனுக்கு முறைப்படிப் பெண்ணெடுக்க நினைத்துத் தன் மூத்தமகன் பலராமனை எண்ணித் தன் பிறந்தகத்தில் பேச விழைய, அவர் அண்ணனுக்கோ, சின்னவர்களின் பத்து வயது வித்தியாசம் மனம் உறுத்த, சின்னவன் ஜெயராமனுக்குப் பெண் கொடுப்பதாய் வாக்குக் கொடுத்துத் தங்கையைக் குளிர்வித்தார்.

எப்படியும் அண்ணன் பெண் தங்கள் வீட்டிற்கு வரப்போகிறவள் தானே என்றெண்ணி இவர்களும் பலராமனுக்கு அசலூரின் இருந்து பெண் எடுத்தனர்.. அப்படி உள்ளே பலராமனின் மனைவியாய் அந்த வீட்டிற்கு அடியெடுத்து வைத்தவள்தான் ரேணுகா.

அசலூர் என்றாலும் அவளுமே எப்பொழுதோ தொலைந்து மறந்துப் போன ஒன்று விட்ட ரெண்டு விட்டத் தொட்டும் தொடாத உறவுதான்.. என்ன.. ஒன்று அவர்களை விடக் கொஞ்சம் வசதிக் குறைச்சல் அவ்வளவே.. மற்றொன்றோ அந்தக் காலத்திலேயே அவர்கள் சமூகத்தில் படித்துப் பட்டம் பெற்ற மகனுக்கு எஸ்.எஸ்.எல்.சி படித்த மனைவியாய் அவர் வாய்த்திருந்தார்.

அடுத்தச் சில வருடங்களில் சின்னவன் ஜெயராமனுக்கும், சுந்தரவடிவாம்பாளின் அண்ணன் மகள் தமயந்திக்கும் சீரும், சிறப்புமாய்த் திருமணமும் முடிந்தது.. அதுவரை எல்லாமுமே சிறப்பாய் ஓடிக் கொண்டிருந்தது.

தமயந்தி நல்ல அடக்கமான பெண்தான்.. அதிலெல்லாம் எந்தக் குறையும் இல்லை.. அவள் மேலும் எந்தத் தப்பும் சொல்லமுடியாது.. என்னவொன்று அண்ணன் மகளல்லவா, சற்றே அவளுக்கு அந்த வீட்டில் உரிமை அதிகமாய் இருந்தது.. தனக்குப் பெரியவளான ரேணுகாவை சொந்த அக்காவாக இவள் மதிப்பும், மரியாதையுடனும் பழகினாலும், பெரியவளுக்கு உள்ளுக்குள் எப்பொழுதும் புகைச்சலே..

தன்னைவிட, ஏன் அவளது கணவன் பலராமனைவிட அதிகம் படித்தவள் தமயந்தி.. அந்தக் காலகட்டத்தில் பெரிய புகழ்பெற்ற மகளிர் கல்லூரியில் கணிதத்தில் மேற்படிப்புப் படித்தவள்.. அவர்கள் குடும்பத்திலேயே அந்தச் சமயத்தில் எந்தப் பெண் பிள்ளைகளும் படிக்காத போதும் இவள் அதிகம் படித்துப் பட்டம் பெற்றிருக்க, அது வேறு ரேணுகாவுக்கு உறுத்தலாக.., அவளுடன் வந்து சேர்த்திருந்த பொருட்செல்வங்களும் இன்னும் அவள் மனதில் வன்மத்தை வளர்த்து விட்டிருந்தது.

இதெல்லாம் போதாது என்று இரண்டு மாதங்கள் முன்பு நடந்த நிகழ்வொன்று மொத்தமாக அவள் மேல் பொறாமையும், பகையுணர்ச்சியையும் தூண்டி நன்றாக விசிறிவிட்டிருந்தது.

"ரேணு.. என்னடி என்ன பலமான யோசனை?.. இன்னும் நீ அதை விடப் போவதில்லையா?.. விடுடி.. இப்போ உன் வயத்துல நம் பிள்ளையைச் சுமக்கற.. நல்ல எண்ணம்தாண்டி உனக்கும் நல்லது.. வயத்துல இருக்கிற புள்ளைக்கும் நல்லது.. நல்லதே நினைடி.. நமக்கும் நல்லது நடக்கும்.." என்ற பலராமன் தன் மனைவியைப் பின்னாலிருந்து கட்டிக் கொண்டு..

"ஏன்டி.. ரேணு.. அதெப்படிடி நீ இன்னும் அழகாவே இருக்கே?.. பாரு அன்னிக்குக் கல்யாணம் கட்டி வந்தவ மாதிரி இன்னும் கட்டுக் குலையாமல் இருக்க?.. உனக்கு யாராவது எட்டு வயசுல மகன் இருக்கான்னு சொன்னாத்தான் நம்புவாங்களா?.. ம்.. நல்லா வாசமா இருக்கடி என் பட்டுகுட்டி.. தலைக்கு என்னத்தை அரைச்சிக் குளிச்ச?.. இப்படி மணக்குது?.."

"ம்.. அரப்புப்பொடியில புண்ணாக்கை அரைச்சி குளிச்சேன்.. ஆளப்பாரு.. மொசப்புடிக்கிற மூஞ்சியைப் பார்த்தாளே தெரியுதில்ல.. மொத்தல்ல தள்ளி நில்லுங்க சொல்லிப்புட்டேன்.. இப்ப என்னா வேணும்.. அடித்த டோஸு காப்பிக்கு இப்படி ஐஸ் வைக்கணுமாக்கும்.. முதல்ல வெளியே போங்க.. உங்க ஆத்தா எந்த நேரமானாலும் உள்ளே வந்து தலையை நீட்டும்.. எல்லாம் எடுத்து வந்து நீட்டறேன்.. போய் நம்ம பெரியவனை எளுப்பி விடுங்க.. நம்ம பிள்ளைங்கன்னு நினைப்பு எப்பவும் இருக்கட்டும்.. போங்க சாமி.. ஸ்கூலுக்கு நேரமாச்சுல்ல.." என ரேணுகா அவரை வெளியே பிடித்துத் தள்ள..

அதே நேரத்தில் சமையலறைக்குள் நுழைந்தார் சுந்தரவடிவாம்பாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.