(Reading time: 19 - 37 minutes)

“ஹரிணி”

அவளது பெயரைக் கேட்டவர் முகத்தில் ஓர் ஆச்சரிய மின்னல் பளிச்சிட்டது.

“என் பையன் ஹரியை இன்னிக்கு தான் இங்க சேர்த்தேன். உன் கிளாஸ் தான். உன் கையில் தடிமனான மெடிகல் புக்ஸ் இருக்கவும் தான் கேட்டேன்” அவர் விளக்கம் சொன்னார்.

அவர் கைகாட்டிய திசையில் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு தூண் மீது ஒய்யாரமாய் சாய்ந்து கொண்டு மழையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் பக்கவாட்டு உருவம் தான் தெரிந்தது.

“பாய்ஸ் ஹாஸ்டல் எப்படி மா போறது. வழி சொல்றியா” அவர் அவளைக் கேட்கவும் அவள் வழி சொன்னாள்.

அவளது தலையை வருடி கொடுத்து நன்றி சொல்லிவிட்டு அந்தப் பெண்மணி சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்தவனிடம் சென்று ஹரிணியை நோக்கி கை காட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.

கார்மேக காரிருளில் நிழலாய் அவளுருவம். அதில் அதிகம் பதிக்கவில்லை அவனும் தன் கவனம்.

மழை சற்றே ஓயவும் விடுதி வந்த ஹரிணி  குளித்து முடித்து மெஸ்ஸில் இருந்து காபியை வாங்கிக் கொண்டு தனது அறைக்கு வந்தாள்.

‘அந்தி மாலை; மழை; மரம்; ஜன்னல்; காபி’ இவையாவும்  ஓர் புத்தகமும் மெல்லிய இசையும் இல்லாமல் எப்படி பூரணமாகும்.

ரஞ்சனி வைத்திருந்த டேப்ரிகார்டரில் இளையராஜா இன்ஸ்ட்ரூமென்டல் ஒலிக்க விட்டு சிட்னி ஷெல்டன் நாவலில் லயித்தாள்.

“ரஞ்சு நீ படிக்க போறதா இருந்தா பாட்டை நிறுத்திடறேன்” ஹரிணி சொல்லவும் வேண்டாம் என்று ரஞ்சனி கூறவே அந்த அறையில் ஓர் இனிமையான அமைதி சூழ்ந்திருக்க அதை கலைக்கவே அவர்கள் வகுப்புத் தோழிகள் கங்கணம் கட்டிக் கொண்டு வந்தனர் போலும்.

ரஞ்சனியோ தலையில் அடித்துக் கொண்டு பாடப்புத்தகத்தை விரித்து வைத்தாள். ஆனால் அவர்களின் பிரின்ஸ் என்ற சொல்லில் ரஞ்சனிக்கும் உள்ளுக்குள் ஓர் ஆவல் பிறந்தது என்னவோ உண்மை தான்.

ஞ்சனி பெரிய மிராசு குடும்பத்துப் பெண். வீட்டில் மிகுந்த கட்டுப்பாடு. பன்னிரண்டாம் வகுப்பில்  மாவட்டத்தில் முதலாவதாக அவள் தேர்ச்சி பெறவும் பெருமைக்காக தான் மருத்துவக் கல்லூரியில் சேர்த்து விட்டிருந்தார் அவளது தந்தை.

“காலேஜ் போனமா படிச்சோமா வந்தோமான்னு இருக்கோணும் கண்ணு. பசங்க கூட பேச்சு பழக்கம் எல்லாம் வச்சுக்காத. நம்ம குடும்பத்து மரியாதையை மனசில வச்சுக்கோணும் ராசாத்தி” சென்னை நகரில் கல்லூரியில் சேர்க்க முதலில் தயங்கிய அவள் தாய் அவர்கள் ஊர்  பெண்கள் இருவர் அங்கே ஏற்கனவே படிக்கவும் சற்றே நிம்மதி அடைந்தார்.

“வடதுருவமும் தென்துருவமும் ஒரே ரூம்ல எப்படி டி சேர்ந்து இருப்பாங்க” ஹரிணிக்கும் ரஞ்சனிக்கும் ஒரே ரூம் அலாட் செய்திருந்த போது அனைவரும் வியந்தனர்.

தோழிகள் அனைவரும் ரவுண்ட் கட்டி அமர்ந்து கொள்ள ஹரிணி படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்தாள்.

“ஹரிணி. அவன் பேரு ஹர்ஷவர்தன்” சங்கீதாவும் ரேவதியும் கோரஸாக சொல்ல

“அதனால” அலட்சியமாக வினவினாள் ஹரிணி.

“ரோல் நம்பர் படி உனக்கு அடுத்து வருவான்” இப்போது கவி தொடர

“அதனால”

“அதனாலயா. நீ தான் அவனுக்கு டேபிள் மேட். அப்புறம் அடுத்த வருஷம் அப்புறம் எல்லா வருஷமும் க்ளினிகள்ஸ் எல்லாத்திலும் யூனிட் மேட்” இதைச் சொல்லும் போது அங்கே பொறாமையின் அனல் தகதகவென எரிந்தது.

“அதுக்கு நான் என்ன செய்யணும். என் பேரை மாத்திக்கணுமா” பட்டென்று சொல்லிவிட்டு மறுபடியும் மூடிவைத்த புத்தகத்தைத் தொடர்ந்தாள்.

“அவ தான் திமிரு பிடிச்சவன்னு தெரியுதுல. வாங்கடி போகலாம்” அவளிடம் தங்கள் அஸ்திரம் பயனற்று போனது குறித்த ஏமாற்றத்தில் பொரிந்தனர்.

“ஏன்டி பார்க்க சுமாரா கூட இல்ல. போன பிசியோ அசஸ்மன்ட்ல கூட ஜஸ்ட் பாஸ் தான். அப்புறம் எங்க இருந்து இவளுக்கு இவ்வளவு கர்வம் திமிர் எல்லாம் வருது” இப்போது அரட்டை கூட்டம் ரஞ்சனியின் படுக்கை மீது அமர்ந்து கொண்டு அவளை தாளித்துக் கொண்டிருந்தனர்.

“நீ பாஸ் கூட செய்யல கவி. அண்ட் கிளாஸ்ல பாதி பேரு பெயில். நானும் ஹரிணியும் ஜஸ்ட் பாஸ். பர்ஸ்ட் மார்க் எடுத்த விக்னேஷ் கூட எங்களை விட அஞ்சு மார்க் தான் அதிகம்” ரஞ்சனி மெலிதான குரலில் சொன்னாலும் அதில் ஒரு அதட்டல் இருந்தது.

“உன் ரூம்மேட்டை நீயே மெச்சிக்கோ” அங்கிருந்து அவர்கள் சென்றுவிட பெருமூச்சு ஒன்றை உதிர்த்தாள் ரஞ்சனி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.