(Reading time: 19 - 37 minutes)

“ஹரிணி அம்மா அப்பாகிட்ட என்ன சொல்றதுன்னே தெரியல. எனக்கு இங்க இருக்க ஆசை தான். அன்னிக்கு லவ் கிவ்ன்னு பேசவும் தான் பயமா போச்சு. அதான் அழுதுட்டேன்” ரஞ்சனி சொல்லவும் ஹரிணிக்கு சிரிப்பு தான் வந்தது.

“சரி வா உன் பேரெண்ட்ஸ்க்கு என்ன இன்ட்ரோ செய்து வை” என்றவள் ரஞ்சனியின் பெற்றோரிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள்.

“ஆன்டி ரஞ்சுவ நீங்க டிஸ் கன்டினியு செய்து கூட்டிட்டு போகப் போறீங்களா”

“ஆமா கண்ணு. புள்ள இங்க தனியா இருந்து எதுக்கு கஷ்டப்படணும்”

“நாங்க எல்லாம் இல்லையா. கொஞ்சம் நாள் போனா சரியாகிடும்” ஹரிணி சொல்ல ரஞ்சனியின் பெற்றோருக்கு இன்னும் சமாதனம் ஆகவில்லை. ஹரிணியும் எவ்வளோ சொல்லிப் பார்த்தாள். ஆனால் ரஞ்சனி தன் பங்கிற்கு ஏதேனும் சொன்னால் தானே. அவள் மௌனமாய் இருக்கவும் அவள் பெற்றோரிடம் ஹரிணியின் வாதம் எடுபடவில்லை.

ஆனால் ரஞ்சனியின் கண்கள் ஏதேனும் செய்யேன் என்று ஹரிணியைக் கெஞ்சி கொண்டிருந்தன.

கடைசியாக ஹரிணி எய்த அஸ்திரத்தில் ரஞ்சனியின் பெற்றோர் வாயடைத்துப் போயினர்.

“ஆன்டி அங்கிள் நாளைக்கு ரஞ்சனிக்கு கல்யாணம் ஆகி அங்க புகுந்த வீட்ல அவளுக்கு உங்க நியாபகம் வந்து அழுதாள்னா ஹஸ்பன்ட் வேண்டாம் நம்ம வீட்டுக்கே வந்திருன்னு சொல்லி கூட்டிட்டு போயிருவீங்களா” ஹரிணி ஒரே போடாகப் போடவும் கிராமத்து மனிதர்களான ரஞ்சனியின் பெற்றோர் அசந்து போயினர்.

“இது தான் ரஞ்சுவோட புகுந்த வீடுன்னு நினச்சு அவளை இங்க இருக்க சமாதானம் செய்ங்க. எத்தனை பேருக்கு இப்படி மெரிட்ல அதுவும் இந்தியாவிலேயே டாப் டென் மெடிகல் காலேஜ்ல ஒன்னான இந்த காலேஜில் சீட் கிடைக்கும். நமக்கு கிடச்ச இந்த பொக்கிஷத்தை அலட்சியப் படுத்தலாமா. சொல்லுங்க” ஹரிணி கேட்கவும் ரஞ்சனியின் தந்தைக்கு மிகுந்த ஆச்சரியம்.

‘மிஞ்சிப் போனா பதினேழு வயசிருக்கும். என்ன ஒரு தைரியம். என்ன ஒரு முதிர்ச்சி’ மனதில் நினைத்தவர் முகத்தில் புன்னகை அரும்பியது.

“சரி மா அப்போ ரஞ்சனிக்கு நீயே மாமியாராக இரு. எங்க பொண்ண உன்கிட்ட ஒப்படைச்சிட்டு போறோம். அவளை கண்கலங்காம பார்த்துக்கோ” தந்தை அவ்வாறு சொன்னதும் அதுவரை முகத்தைத் தொங்க வைத்துக் கொண்டிருந்த ரஞ்சனியும் சந்தோஷமாய் மகிழ அதை கவனித்த பெற்றோர் நிம்மதியாக விடைபெற்று சென்றனர்.

அன்றிலிருந்து ஹரிணி என்றாலே மனோரஞ்சனிக்கு கொள்ளைப் பிரியம். அவர்கள் இருவருக்கும் ஒரே அறை அலாட் ஆன போது ரஞ்சனி பெரிதும் மகிழ்ந்து போனாள்.

ஆனால் ஆரம்பக் காலங்களில் ஹரிணியின் குணம் புரிய சற்று கடினமாகத் தான் இருந்தது ரஞ்சனிக்கு.

“ஹரிணி இந்தா பிரிச்சு பாரு” பிரண்ட்ஷிப் தினம் அன்று பரிசுப் பொருளை நீட்டினாள் ரஞ்சனி.

“இது என்ன ரஞ்சு”

“கிப்ட் உனக்குத் தான் பிரிச்சுப் பாரேன்”

“எனக்கு வேண்டாம் ரஞ்சு. இந்த கிப்ட் எல்லாம் எனக்கு பிடிக்காது” ஹரிணி பட்டென்று சொன்னதும் ரஞ்சனியின் முகம் வாடிப் போனது.

“இப்போ நீ கிப்ட் குடுத்தா நானும் திருப்பி குடுக்கணும். இப்போ நீ எதிர்பார்க்கலைனாளும் என்னிகாவது உனக்கு தோணும். நட்பில் உறவில்  இந்த கொடுக்கல் வாங்கல் எல்லாம் எனக்கு பிடிக்காது”

அந்தக் கல்லூரியில் வடக்கில் இருந்தும் மாணவியர் பயின்றனர். அவர்கள் நடை உடை பாவனையில் ரஞ்சனி ஈர்க்கப்பட்டாள்.

பிரெஷ்சர்ஸ் விழாவின் போது பட்டுப்புடவை கல்செட் நகை மேக்அப் என்று அலங்கரித்துக் கொண்டாள் ரஞ்சனி. அவளைப் போலவே பல மாணவியரும் ஒப்பனை செய்து கொண்டனர்.

“ஹரிணி நீ புடவை கட்டிக்கலையா”

“என்கிட்டே புடவை இல்ல” என்றவள் எப்போதும் போல ஒரு சுரிதாரை அணிந்திருந்தாள்.

“என்கிட்டே வேற புடவை இருக்கு” என்று அலமாரியைத் திறந்து எடுத்துத் தர போனாள் ரஞ்சனி. அப்போது அந்த அறையில் ரேவதி சங்கீதா கவிதா வானதி எல்லோரும் இருந்தனர்.

“நான் மத்தவங்க டிரஸ் போடுறதில்லை ரஞ்சு. எனக்கு வேண்டாம்” என்று சொன்னதைக் கூட ரஞ்சனி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

“நான் எப்படி இருக்கேன்” புடவையின் முந்தானையை விரித்துப் பிடித்து அழகு காண்பிக்க மற்றவர் அனைவரும் “தேவதை மாதிரி இருக்க” “ஐயோ கண்ணு கூசுதே...அவ்ளோ ஜொலிக்கிற” “சூப்பர்” என்றெல்லாம் சொல்ல மிதந்து கொண்டிருந்த ரஞ்சனி ஹரிணி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கவும் அவளிடம் சென்றாள்.

“நீ எதுவும் சொல்லவில்லையே ஹரிணி” அவளது பாராட்டைப் பெற்று விடும் ஆவல் ரஞ்சனிக்கு.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.