(Reading time: 19 - 37 minutes)

ஆம் மெச்ச தான் செய்தாள் ரஞ்சனி. ஒரே வயது தான் இருவருக்கும். இருப்பினும் ஹரிணிக்கு இருந்த தைரியத்தையும், தெளிவையும் முதிர்ச்சியையும் கண்டு வியந்து போயிருக்கிறாள்.

ல்லூரி வாழ்க்கை என்பது ஒரு பொற்காலம் என்றே சொல்லலாம். அது வரையில் குடும்பத்தின் அரவணைப்பில் பெற்றோரின் சிறகுகளுக்குள் பாதுகாப்பாய் இருந்த சிட்டுக்கள் சிறகு விரித்து கவலை ஏதுமின்றி சிறகடித்து பறக்க துவங்குவது கல்லூரி வானில் தானே.

ஆனால் திடீரென ஓர் புதிய சூழலில் வந்து சேரும் போது தடுமாற்றங்கள், தயக்கங்கள் தனிமை உணர்வு எல்லாம் ஏற்படுவதுண்டு. அப்படியான சூழலில் கல்லூரியின் சீனியர் மாணவர்களே சரணாலயம்.

ரேகிங் என்பது சீனியர் ஜூனியர் மாணவர்களிடையே ஓர் இணைப்பை ஏற்படுத்தும் பாலமாகும். ஜூனியர் மாணவர்களின் தனிமை உணர்வு ஹோம் சிக்னெஸ் இவற்றைப் போக்க அவர்களை ஹாஸ்டல் வாழ்க்கைக்குத் தயார்படுத்த என ஆரோக்கியமான ஒன்றே. ஆனால் ஒரு சிலர் அதை தவறாகப் பயன்படுத்தி தாழ்ந்த செயல்களிலும், வன்முறை செயல்களிலும் ஈடுபடுவதால் ரேகிங் ஓர் குற்றமாக பார்க்கப் படும் நிலைக்கு போய்விட்டது.

அந்த மருத்துவக் கல்லூரியிலும் ஆன்டி ராகிங் கமிட்டி மிகவும் கட்டுப்பாடாக இருந்தது. அதனால் சீனியர் மாணவிகள் வெறும் அறிமுகம், சிறு சிறு விளையாட்டுகள் போன்றவற்றில் ஜூனியர் மாணவியரை ஈடுபடுத்தி வந்தனர்.

அன்று முதாலம் ஆண்டு மாணவியர் அனைவரையும் மெஸ்க்கு வெளியில் நிற்க வைத்து சில சீனியர் மாணவியர் பட்டி மன்றம் நடத்திக் கொண்டிருந்தனர்.

“ஹ்ம்ம் ரெண்டு க்ரூப்பா பிரிஞ்சுக்கோங்க. ஒரு க்ரூப் லவ் மேரேஜ் தான் பெஸ்ட்ன்னு வாதிடணும். இன்னொரு க்ரூப் ஆரேஞ் மேரேஜ் பெஸ்ட்ன்னு ஆர்கியூ செய்யணும்” சீனியர் மாணவி ஒருத்தி சொல்ல ரஞ்சனிக்கு கிடைத்தது லவ் மேரேஜ் பெஸ்ட் என்ற வாதம்.

அங்கு அவள் ஊரைச் சேர்ந்த இரு சீனியர் மாணவியரும் இருந்தனர். ரஞ்சனிக்கோ உள்ளுக்குள் நடுக்கம். எங்கே தான் லவ் மேரேஜ் தான் சரி என்று சொல்லி வைத்தால் அது பெற்றோர் காதுகளுக்குப் போய்விட்டால்...

அங்கு ஹரிணியும் இருந்தாள். அவள் அரேஞ் மேரேஜ் பக்கம் பேசுவதாக இருந்தது.

ரஞ்சனியின் முறை வந்ததும் எதுவும் சொல்ல முடியாமல் பரிதவித்துப் போனாள். லவ் என்று சொல்லே தப்பு என்று வளர்ந்து வந்தவள்.

அவள் ஒன்றுமே பேசாமால் பொலபொலவென கண்ணீர் உகுக்க, அனைவரும் என்னவாயிற்று என்று தெரியமால் திகைக்க அந்த நேரம் பார்த்து ஆன்டி ரேகிங் கமிட்டி திடீர் விசிட் செய்ய வரவே அனைவர் முகத்திலும் பீதி.

வார்டன் ‘ஏன் இந்த பொண்ணு அழறா. எல்லோரும் ஏன் இங்க நிக்கிறீங்க’ என்று கேட்கவும் சீனியர் மாணவியரோ நடுக்கம் கொண்டனர்.

சூழ்நிலையின் விபரீதம் உணர்ந்த ரஞ்சனிக்கோ இன்னும் அதிகமாய் அழுகை வந்து தொலைத்தது.

“மேடம் நாங்க எல்லோரும் மெஸ்க்கு சாப்பிட வந்தோம். ரஞ்சனிக்கு ரொம்பவே ஹோம் சிக். சாப்பிடாம அழுதுட்டே இருந்தா. நான், அனு, ரேவதி எல்லோரும் சமாதனம் செய்தும் கேக்கவே இல்ல. அதான் நான் அவளை சரோஜினி அக்கா கிட்ட கூட்டிட்டு வந்தேன். அவங்க அவளோட ஊர் மேம். சீனியர் அக்கா எல்லோரும் அவளை சமாதனம் பண்ணிட்டு இருந்தாங்க. அப்போ தான் நீங்க வந்தீங்க” எந்த வித தங்குதடையின்றி மிகவும் தெளிவாக சரளமாக ஹரிணி சொல்லவும் வார்டனும் மற்ற ப்ரொபசர்களும் ஐயம் கொள்ளவில்லை.

மாறாக, “வெரி குட் கேர்ள்ஸ். சீனியர் ஜூனியர்ஸ் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இப்படி தான் இருக்கணும்” என்று பாராட்டு பத்திரம் வேறு வாசித்து விட்டு சென்றனர்.

வார்டனும் மற்றவரும் அங்கிருந்து அகல சீனியர் மாணவியர் அனைவரும் ஹரிணியைக் கட்டி கொண்டு கொண்டாடினர்.

ரஞ்சனிக்கோ நன்றி உணர்ச்சியில் வார்த்தை வரவில்லை. அன்று மட்டும் சீனியர் மாணவியருக்கு ஏதேனும் தண்டனை கிடைத்திருந்தால்.... அவளால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

ஆனால் அடுத்த நாளே ரஞ்சனியின் பெற்றோர் அங்கு வந்து நின்ற போது யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.

“கண்ணு வீட்டு நியாபகமா அழுதியாமே. வார்டன் போன் பண்ணி உங்க அப்பாக்கு சொன்னாங்க. அதான் ஓடியாந்துட்டோம். இனி நீ இங்க இருக்க வேணாம். நம்ம ஊர்ல இல்லாத காலேஜா...அங்கேயே ஏதாவது காலேஜில படி. இல்ல வீட்டிலே இரு” மகளை தடவி கொடுத்தபடியே ரஞ்சனியின் தாய் கூறவும் ரஞ்சனிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

“கண்ணு உன்னை நான் பெருமைக்காக தான் இந்த ஊர்ல இந்த படிப்புக்கு சேர்த்தேன். உனக்கு இவ்வளவு கஷ்டமா இருந்தா வேணாம்டா ராஜாத்தி” அவளது தந்தையும் ஒத்து பாட ரஞ்சனியின் பாடு பட திண்டாட்டமாக போய்விட ஆபத்வானனாக அந்நேரம் பார்த்து அந்தப் பக்கம் ஹரிணி வரவும் ரஞ்சனி ஓடி வந்து மடமடவென ஹரிணியிடம் பெற்றோர் கூறியதை ஒப்பித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.