(Reading time: 16 - 32 minutes)

விவேக் ஸ்ரீநிவாசன் - 12 - வத்ஸலா

vs

ச்சு அசலாய் விவேக்கின் அப்பாவை போலவே இருக்கிறாரே இவர்!!! இது அதிர்ச்சியா, வியப்பா, சந்தோஷமா என புரியாத உணர்வுடன் ஹரிணி அனுப்பிய அந்த புகைப்படத்தையே பார்த்திருந்தான் சுதர்ஷன்

மும்பையின் அந்த மருத்துவமனையில் அவனது அப்பா இருக்கும் அறையில்தான் இருந்தான் சுதர்ஷன். இப்போது சற்றே தெளிந்திருந்தார். எழுந்து அமர்ந்து மெல்ல மெல்ல  சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.  

அன்று விமானத்தில் நடந்ததை நினைத்தால் இன்னமும் உயிர் வரை நடுக்கம் பரவுகிறது சுதர்ஷனுக்கு. போக இருந்த அவனது தந்தையின் உயிர் திரும்பி இருக்கிறது. அதற்கு காரணம் விவேக் மட்டுமே.

அவன் ஒரு நல்ல நண்பன். அதையும் தாண்டி ஒரு மனிதாபிமானம் மிக்க மனிதன் என்பதை நிரூபித்து இருக்கிறான் ஆனால் நான்??? அவன் செய்த அந்த மிகப்பெரிய தவறு எப்போதும் போல் இப்போதும் மனதை அழுத்த ஆரம்பித்தது.

கல்லூரி காலத்தில் ஹாஸ்டலில் தங்கி படிக்க வேண்டிய நிர்பந்தம் சுதர்ஷனுக்கு. அப்போதெல்லாம் அவனுக்கு உணவு, பணம், உடல்நலம். அன்பு என எதில் குறை ஏற்பட்டாலும், எது தேவையாக இருந்தாலும் அதை தேடி அவன் தஞ்சம் அடையுமிடம் விவேக்கின் வீடு மட்டுமே.

‘எத்தனையோ நாட்கள் தன் கையாலேயே சமைத்து அவனுக்கு மனதார பரிமாறி இருக்கிறார் அவன் அப்பா. ஏன் தர்ஷன் இவ்வளவு கம்மியா சாப்பிடறே. அப்பா சமையல் பிடிக்கலையா???’ கேட்பார் இதமாய்.

இவனுக்கு திருமணம் நிச்சியம் ஆனதும் கூட மிகவும் மகிழ்ந்து போனவர் விவேக்கின் அப்பா!!! ஆனால் அவன் மகிழ்ச்சியாய் திருமணம் செய்துக்கொண்ட போது அவரின் நிலை???

‘அதான் நான் கூட இருக்கேன்ல அப்புறம் ஏன்டா கவலை படறே???’ தடுமாறி நின்ற பல தருணங்களில் கைகொடுத்து அரவணைத்திருக்கிறான் விவேக்.

இவன் செய்யவில்லையே. அவனுக்கு கை கொடுக்க வேண்டிய நேரத்தில் கை கொடுக்கவில்லையே. எல்லாவற்றையும்  அந்த தருணத்தில் எப்படி மறந்து போனேன். எப்படி அப்படி ஒரு சுயநலவாதியாக மாறிப்போனேன்???

மூன்றாண்டுகளுக்கு முன்னால் வந்தது அந்த நாள்!!! இவனது திருமணதிற்கு முந்தைய நாள் இரவு பதினோரு மணி!!!

கோவையில்  நடக்கவிருந்தது அவனது திருமணம். சென்னையிலிருந்து கிளம்பினர் அனைவரும். அவனது உறவினர்கள் அனைவரும் முன்னால் சற்றே பெரிய வேனில் சென்றுக்கொண்டிருக்க, அவர்கள் பின்னால் நண்பர்களுடன் காரில் இவன். அந்த நண்பர்களில் ஹரிணியும் அடக்கம்.

மறுநாள் காலையில் திருமணம். நல்ல நாள் பார்த்து, நேரம் பார்த்து கிளம்புவதில் இத்தனை தாமதம் ஆகி இருந்தது. அதனாலேயே எல்லாரிடமும் ஒரு அவசரம் தொற்றிக்கொண்டிருந்தது. கோவையை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் பறந்துக்கொண்டிருந்தன இந்த வாகனங்கள்.

அப்போதுதான் நிகழந்தது அந்த விபத்து. பின்னால் காரில் வந்துக்கொண்டிருந்தவனுக்கு அந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்று புரியவில்லை. முன்னால் சென்றுக்கொண்டிருந்த இவர்கள் குடும்பத்தினரின் வேன் அவர்களுக்கு முன்னால் சென்றுக்கொண்டிருந்த அந்த காரை மோதி கவிழ்த்ததை மட்டும் நன்றாக பார்க்க முடிந்தது.

கொஞ்சம் எழும்பி உருண்டது அந்த கார்.. இவனது வாகனம் க்ரீச்சிட்டு நின்றது. இறங்கி ஓடி வந்தான் சுதர்ஷன். வந்தவன் காரில் இருப்பவரின் முகத்தை பார்த்ததும் மொத்தமாக அதிர்ச்சி கடலில் விழுந்தான். அதிலிருந்தார் விவேக்கின் தந்தை ஸ்ரீனிவாசன்!!!

ப்பா...’ தன்னாலே அலறினான் சுதர்ஷன்.

காரில் இருந்தது அவரும், அவரது ஓட்டுனரும். ஓட்டுனர் இப்போது அரை மயக்கத்தில் இருந்தார்., பின்னால் அமர்ந்திருந்த ஸ்ரீநிவாசனுக்கு பலத்த காயம். மயங்கியே விட்டிருந்தார் அவர்.

அந்த ஓட்டுனர் பல வருடங்களாக ஸ்ரீனிவாசனுடன் இருப்பவர். அவருக்கு சுதர்ஷனை நன்றாகவே தெரியும்.

‘தர்ஷன் தம்பி... ஹா...ஸ்..பிடல்..’ மெல்ல முனகினார் அவர்.

‘இதோ.. இதோ... போயிடலாம்... பதறினான் சுதர்ஷன்.

‘சுதர்ஷன் வேண்டாம். இது வேண்டாத வேலை’ சட்டென இடை புகுந்து அவன் அப்பா. ‘நாளைக்கு காலையிலே கல்யாணத்தை வெச்சுகிட்டு ஹாஸ்பிட்டல் அதுக்கு அப்புறம் போலீஸ்னு அலைய முடியாது. வா கிளம்பலாம்..’

‘ஆமாம் சார் நாம கிளம்பிடலாம். போலீஸ் வந்தாங்கன்னா நம்ம யாரையும் போக விட மாட்டங்க’ இது அந்த வேனை ஒட்டி வந்த டிரைவர். அவன் கவலை அவனுக்கு!!!

‘அப்பா என்னபா நீங்க? இவர் நம்ம விவேக்கோட அப்பா. எப்படிப்பா இவரை இப்படி விட்டுட்டு போறது. முதல்லே ஹாஸ்பிடல் போலாம்ப்பா’

‘யாரு அது விவேக்? உன் ஃப்ரெண்டா? அப்போ வேறே வினையே வேண்டாம். நாமதான் அவங்களை இடிசோம்னு தெரிஞ்சா சும்மா விடுவானாடா. பேசாம கிளம்புடா. நமக்கு முதல்லே கல்யாணம்தான் முக்கியம்.’ சொன்னார் அவனது மாமா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.