(Reading time: 14 - 27 minutes)

அமேலியா - 28 - சிவாஜிதாசன்

Ameliya

ஜான் திடீர் திடீரென மாற்றமடைந்து கேள்விகள் கேட்டது வசந்திற்கும் ஜெஸிகாவிற்கும் கோபத் தீயை கொழுந்து விட்டெறியச் செய்தது.

"வசந்த் வா போகலாம்" என அங்கே நிற்க பிரியப்படாமல் அழைத்தாள் ஜெஸிகா.

"அதான் கூப்பிடுறாங்களே கிளம்புங்க வசந்த்" என்று கூறி தான் மிகப்பெரிய நகைச்சுவையை சொன்னது போல் சிரித்தான் ஜான்.

"வா ஜெஸ்ஸி உள்ளே போகலாம்" என ஜானை தள்ளிவிட்டு உள்ளே சென்றான் வசந்த்.

ஜெஸிகாவும் உடன் சென்றாள்.

"ஹேய் எங்கே போயிட்டு இருக்கீங்க வெளியே போங்க" என்று ஜான் கத்தினான்.

அவன் கத்துவதை அசட்டை செய்த வசந்த்.வீட்டின் நாலாபுறமும் தன் கண்களை அலைபாய விட்டான். வீட்டின் அழகும் வெளியில் நிலவும் இயற்கை சூழலும் அவன் மனதை பரசவப்படுத்தின.

"ஜெஸ்ஸி, டைரக்டர் ஏன் இந்த வீட்டை தேர்ந்தெடுத்தாருன்னு எனக்கு இப்போ தான் புரியுது. அருமையான லொகேஷன். ஜான், இந்த வீட்டை எப்படி கண்டுபிடிச்ச?"

"அமெரிக்காவை தேடி கொலம்பஸ் கூட வந்தப்போ இந்த வீட்டை பாத்தேன்" எரிச்சலோடு சொன்னான் ஜான்.

"எதுக்கு வந்திங்க?"

"உன்னை பார்க்க தான் ஜான்"

"வெளியவே நின்னு பார்த்திட்டு கிளம்ப வேண்டியது தான"

"நாங்க என்ன கூரியர் கொடுக்கவா வந்தோம். வெளியில நின்னு பார்த்துட்டு போறதுக்கு"

"வசந்த் நான் இங்கே நிம்மதியா இருக்கேன்"

"அதுக்கென்ன?"

"நீங்க வந்ததால என்னுடைய நிம்மதி போயிடுமோன்னு பயமாயிருக்கு".  ஜானின் கண்கள் ஜெஸிகாவை நோக்கின.

ஜானின் முகத்தை பார்க்க பிடிக்காமல் வேறுபக்கம் தன் கவனத்தை செலுத்தியிருந்தாள் ஜெஸிகா. அவளது மனம் படபடப்போடு இருந்தாலும் வசந்தின் துணை லேசாக ஆறுதலை தந்தது.

"உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும் ஜான். அதுக்கு முன்னாடி விருந்தாளிகளுக்கு காபி கொண்டு வா"

வசந்தை கோபத்தோடு நோக்கிவிட்டு சமயலறைக்குள் சென்ற ஜான், அடுத்த நிமிடத்தில் இரண்டு கோப்பை காபியுடன் வெளியே வந்தான். வசந்தின் முன்னால் இரு கோப்பைகளும் வைக்கப்பட்டன. அதில் ஒன்றை வசந்த் எடுத்துக்கொண்டு பருகத் தொடங்கினான். ஜெஸிகாவின் உடல் குளிரில் லேசாக நடுங்கியது. காபி கோப்பையை எடுக்க முயன்றாள்.

"சாரி, இது எனக்கு" என்று ஜான் எடுத்துக்கொண்டான்.

ஜெஸிகா முறைத்தாள். அவமானத்தால் அவளது கண்கள் சிவந்தன.

"உங்களுக்கு வேணும்னா சமயலறைக்கு போய் காபி போட்டுக்கோங்க"

ஜெஸிகா வாசல் பக்கம் சென்று தன் நிலையை எண்ணி வருந்தினாள். ஜான் மேல் அவளுக்கிருந்த வெறுப்பு அதிகமாகியது.

"என்ன விஷயமா வந்திங்க?" ஜான் கேட்டான்.

"உன்னுடைய உதவி வேணும்"

"என்கிட்டே என்ன இருக்கு"

"இந்த வீடு" என்றபடி காபி கப்பை கீழே வைத்தான் வசந்த்.

"என்ன, இந்த வீட்டை உங்களுக்கு எழுதி கொடுக்கணுமா?" ஜான் பதறினான்.

வசந்த் சிரித்தபடி, "இல்லை இல்லை இந்த வீட்டுல ஷூட்டிங் எடுக்க உன்னுடைய அனுமதி வேணும்"

"நடக்கவே நடக்காது" ஜான் திட்டவட்டமாய் சொன்னான்.

"நீ இதுக்கு சம்மதிக்கலன்னா ஜெஸிகாவோட வேலை போயிடும்"

"அவ வேலையை பத்தி எனக்கென்ன கவலை"

"ஜெஸ்ஸி உன்னுடைய காதலி"

"அதெல்லாம் மறந்து ரொம்ப நாளாச்சு"

"உண்மையான காதலை உடனே மறந்திட முடியாது ஜான். ஜெஸிகாவை உன்னால மறந்திட முடியுமா?"

"மறந்துட்டேன்னு இப்போ தானே சொன்னேன். இப்போ எதுக்கு தேவையில்லாம பேசிட்டு இருக்க வசந்த்"

"அப்படியா, அப்போ அந்த கூப்பருக்கு எந்த தடையும் இல்லை"

"யார் அந்த கூப்பர்?"

"எங்க கூட வேலை செய்றவன். ஜெஸிகாவை லவ் பண்றான்"

ஜான் முகத்தில் லேசான மாற்றம் தெரியத் தொடங்கியது. வசந்த் அதை நன்றாக கவனித்தான்.

"ஜெஸிகாவையா காதலிக்கிறான்? அவனுக்கு புத்தி என்ன மழுங்கி போயிருச்சா?" ஜான் சிரித்தான்.

"நீ நினைக்கிறா போல இல்லை ஜான் அவன் தீவிரமா இருக்கான்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.