(Reading time: 12 - 23 minutes)

தொடர்கதை - மறைந்துவிடாதே  மாயா – 06 - லதா சரவணன்

Marainthu vidaathe Maaya

சிறு மெளனப்போராட்டம் நம்மிடையே குனிந்திருந்த முகத்தை விரல்கொண்டு நிமிர்த்தினாய். அடுத்த நொடியில் உன் பிடியில் நான் என் கைகள் உன்னில் வெகு பாதுகாப்பாய் ! எப்படி அவை உன்னைச் சேர்ந்தன ? நீ உறுதியானவன் என்பதை நான் அறிவேன். ஆனால், உன் அணைப்பிலும் தொடுதலிலும் அத்தனை மென்மை, மேகம் தொடுவது போல், குழந்தையை வலிக்காமல் பற்றுவதைப் போல், கனவுலகத்தில் சஞ்சரிக்கும் பிரமையெனக்கு !.

ண்ணாடிக்குடுவையில் இருந்த பாதாம் அல்வாவை ருசித்து அருந்திக்கொண்டிருந்தாள் பர்வதம்மாள். ஒவ்வொரு விள்ளலுக்கும் இரண்டு முந்திரிப்பருப்புகள் எட்டிப்பார்த்தது, சந்துரு கோபத்தோடு அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தான். வாடா சாப்பிடுறீயா ?

ஆமாம்மா தலைக்கு மேலே வெள்ளம் போயாச்சு நீ என்னடான்னா கூலா உக்கார்நது அல்வா சாப்பிட்டு இருக்கே ?

வேறயென்னடா பண்ணச் சொல்றே ? காலுக்கு உதவாததை கழட்டி எறிங்கிற மாதிரி அவளை தொலைச்சு தலை முழுகியாச்சு இப்போ இருக்கிறதை அனுபவிச்சிட்டு நிம்மதியா இருக்காம ஏன் இப்படி குழம்பித் தவிக்கிறே ?

என்னம்மா பேசுறே ?நீ அனுபவிச்சா மட்டும் போதுமா ?! இந்த சொத்துக்களை எல்லாம் நமக்கு உரிமையாக்கிக்க வேண்டாமா ?

வேணும்தான் ! அதுக்குத்தான் அந்த மாயாவை உனக்கு கல்யாணம் செய்து வைச்சிட்டு நிம்மதியா இருக்கலான்னு நினைச்சேன், அவ பெரிய குண்டா தலையிலே தூக்கிப் போட்டுட்டு போயிட்டா ?

விடும்மா போனவளைப் பத்தி பேசி என்னாகப்போகுது ?

பேசாம எப்படிடா இருக்க முடியும், கூடவே இருந்திட்டாளே பொன் முட்டை போடற வாத்தோட வயித்தை அறுத்த மாதிரியில்லே ஆகிப்போச்சு நம்ம நிலைமை ? ஆமா நம்ம வக்கீலைப் போய் பார்த்தியா ?

அதைத்தான யோசித்துக் கொண்டு இருந்தேன் நாளை மறுநாள் 16வது நாள் காரியம் அதற்கு அவரை அழைப்பதைப் போல அழைத்திருக்கிறேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் அவர் வர்றதா சொல்லியிருக்கார். நீயென்னடான்னா சாவகாசமா உட்கார்ந்திருக்கே ? போ போய் மாயா படத்துக்கு முன்னாடி கண்ணீர் விடுவதைப் போல் உட்காரு ?

டேய் நீயேன் கவலைப்படறே ? அதையெல்லாம் நான் பார்த்துக்கறேன். இப்போ என் கவலையெல்லாம் அவளோட செகரட்டரி வினிதா மேலதான் மாயாவும் அவளும் ரொம்பவும் நெருக்கம். என்ன விஷயம் எல்லாம் அவகிட்டே சொல்லி வைச்சு இருக்கான்னு தெரியணும். மாயாவோட இறுதி சடங்கில் கலந்துகிட்டு இங்கிருந்து போனவ திரும்பி வரவேயில்லையே ?!

சந்துரு தலைகுனிந்தான். மனதிற்குள் வினிதா ஒருமுறை வந்து போனாள். அழகான பெண்களைக் கண்டாலே ஆசை கொள்ளும் சந்துருவின் கைங்கரியம் பலிக்காமல் போனது மாயாவிடம் மட்டுமில்லை, அவளின் காரியதரிசி வினிதாவிடமும் தான். ஆனால் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதைப் போல அவளும் சற்றே கரையத்தான் செய்தாள்.

மறைமுகப்பார்வைகளில் தொடங்கி, ஜாடையாய் மாறின பாஷைகள். கண்கள் கலந்தன. அவன் நிற்கும் இடங்களில் வேண்டுமென்றே உலவ ஆரம்பித்தாள். கண்களால் காதலை அள்ளித்தந்தாள். இதையெல்லாம் பார்த்தும் சற்றே ஒதுங்கியவனைப் போல் நடித்தான் சந்துரு. வலையில் தானாக வந்து விழுந்த மீனல்லவா.....தகுந்த நேரம் பார்த்துக் காத்திருந்தான். ஆனால் எதிரில் சந்திக்கும் போது வணக்கம். சாப்பிட்டாச்சா என்பது போன்ற சம்பிரதாயக் கேள்விகள் மட்டும் கேட்பான். காலையில் அவள் வந்ததும் தான் கிளம்புவான்.

அவளின் வரவிற்காய் ஏங்கித்தவிப்பதைப் போல காட்டிக்கொண்டான். ஆனால் வாய்விட்டு பேசவில்லை, அவளே வருவாள் என்று ஏக்கக் கனலை மூட்டி விட்டுக்கொண்டிருந்தான். அன்று மாயா பெங்களூர் கிளம்பிக்கொண்டிருந்த சமயம் பார்த்து, உள்ளே நுழைந்த பர்வதம்மாள் மெல்ல பேச்சைத் துவங்கினாள்.

ஏம்மா வயசுப்பொண்ணு இப்படி ஊர் ஊராக போயிட்டே இருந்தா, என்ன அர்த்தம் பாக்குறவங்க என்ன நினைப்பாங்க ?

என்ன நினைப்பாங்கன்னும் நீங்களே சொல்லிடலாமே, அதையேன் என்னைக் கேட்கறீங்க அதை யோசிக்கிறே அளவுக்கு எனக்கு அவகாசம் இல்லை, அவள் பெட்டியை அடுக்குவதில் முனைப்பாய் இருந்தாள்.

வீட்லே ஒரு பெரிய மனுஷி இருக்கிறீயே அவதான் சின்னப்பொண்ணு ஒனக்கு ஒன்னும் தெரியாதா ?நீயாவது சொல்ல வேண்டியதுதானேன்னு கேட்பாங்களே ? ஆனா நீயெங்கே நான சொல்றதைக் கேட்குறே ?

என்ன கேட்கணும் ?

உனக்கு வயசு ஏறிட்டே போகுது காலாகாலத்திலே ஒரு கல்யாணத்தைப் பண்ணிட்டா அக்கடான்னு நீ பெத்துப்போடறதைப் பார்த்துக்கிட்டு நிம்மதியா கழிப்பனே ?! நீ ஒத்துக்கிட்டா சந்துரு தயாரா இருக்கான்

அதானே பார்த்தேன். அங்கே சுத்தி இங்கே சுத்தி கரெட்டா விஷயத்துக்கு வந்திட்டீங்க. இதுக்கு நான் ஒத்தக்கலைன்னா நீங்க என்ன பண்ணுவீங்க ? அத்தை நான் தெளிவா சொல்லிடறேன். எனக்கு இப்போ கல்யாணம் செய்துக்கிறதுலே விருப்பம் இல்லை அப்படியே நான் கல்யாணம் செய்துக்கிட்டாலும், உங்க பிள்ளைய நிச்சயமா இல்லை ?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.