(Reading time: 14 - 27 minutes)

வசந்தின் முகம் மேலும் திடைப்படைந்தது. அமேலியா வரைந்து கொடுத்த ஓவியத்தில் இருந்த பெண், நிஜத்தில் அப்படியொன்றும் அழகாக தோன்றவில்லை.

நிலைமையை எப்படி கையாள்வது என டைரக்டர் விஷ்வா பரிதவித்தார்.

டைரக்டருக்கும் மாடல் பெண்ணிற்கும் காதல் என உடன் பணிபுரியும் நண்பர்கள் கிசுகிசுத்தத்தை வசந்த் அப்பொழுது நம்பவில்லை. இப்பொழுது எடுக்கும் விளம்பரத்திற்கு டைரக்டர் ஏன் இந்த மாடல் பெண் தான் வேண்டும் என விடாப்பிடியாய் இருந்தார் என பல கேள்விகளுக்கு கண நேரத்தில் விடையைக் கண்டுபிடித்தான் வசந்த்.

"ஹாய் வசந்த்"

"ஹாய் சார். சாரி, என் மேல தான் தப்பு. நான் கொஞ்சம் பொறுமையா காரை ஓட்டியிருக்கணும்"

"இல்லை வசந்த், நீ சரியா தான் வந்த. மிஸ்டேக் பண்ணது நான் தான்"

"ஓ! இவர் தான் வசந்தா?" என கூறியபடி மாடல் பெண் வசந்தை நெருங்கி வந்தாள்.

புன்னகையோடு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான் வசந்த்.

"சில ஷூட்டிங்கில் உங்களை நான் பாத்திருக்கேன். நீங்க தான் என்னுடைய ஓவியத்தை ரொம்ப அழகா வரைஞ்சு கொண்டு வந்திங்கன்னு விஷ்வா சொன்னாரு"

"நான் வரையல மேம்"

"நான் என்ன சொல்ல வரேன்னா, புது ஓவியர் ஒருத்தர் கிட்ட இருந்து என்னுடைய ஓவியத்தை வரைஞ்சு கொண்டு வந்தீங்கன்னு சொல்றேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. விஷ்வா கூட என்னுடைய ஓவியம் பிரமாதமா வந்திருக்குன்னு கூப்பிட்டாரு. நான் அவர் சொன்னத பெருசா நம்பலை. ஏன்னா என்னுடைய முகத்தை ஓவியமா நிறைய தடவை பார்த்துட்டேன். ஆனா இன்னைக்கு நான் பார்த்த ஓவியம்...அதை எப்படி சொல்லுறதுனு எனக்கு தெரியல. எக்ஸலண்ட்!"

"தேங்க்யூ மேம்"

"ஓவியம் வரைஞ்சது லேடின்னு சொன்னாங்க. அவங்க பேரு?"

வசந்த் தயங்கினான்.

"என்ன வசந்த் முழிக்கிறீங்க? அவங்க பேரு தானே கேட்டேன்"

"அமேலியா"

"அவங்க எங்க இருக்காங்க? அவங்களை நான் பார்த்தே ஆகணும்"

வசந்த் அதிர்ந்தான். என்ன பதில் கூறுவது என்று குழம்பினான்.

"இப்போ வேண்டாம் மேம். அவங்க ரொம்ப பிஸியா இருப்பாங்க. இன்னொரு நாள் பாக்கலாம்"

"விஷ்வா" ஏக்கத்தோடு அழைத்தாள் மாடல் பெண்.

"இன்னைக்கே அமேலியாவை பாக்கலாமே வசந்த்"

"சொன்னா புரிஞ்சிக்கோங்க சார். இன்னொரு நாள் கண்டிப்பா பாக்கலாம்"

"ஓகே வசந்த். ஹனி! இன்னொரு நாள் ஓகே வா?"

"ஓகே டார்லிங். கண்டிப்பா அவங்களை நான் பார்த்தே ஆகணும்" மாடல் பெண் பிடிவாதமாக கூறிவிட்டு காரில் ஏறினாள்.

கார் கிளம்பியது.

வசந்த் தலையைப் பிடித்துக்கொண்டு பித்து பிடித்தார் போல் அங்கேயே நின்றான். 

ழை விட்டாலும் தூவானம் விடாத கதையாகி போனது வசந்தின் வாழ்க்கை. ஒரு பிரச்சனை முடிவுக்கு வந்தாலும் மற்றொன்று விடுமுறை கூட அளிக்காமல் உடனே வருவது வசந்தை வேதனைப்படுத்தியது. மாடல் பெண்ணும் டைரக்டரும் அவன் நிம்மதியைக் குலைக்க வந்த கடவுள் அனுப்பிய அரக்கர்கள் என எண்ணியபடியே வீடு வந்து சேர்ந்தான் வசந்த்.

அமேலியாவும் நிலாவும் வாசலில் அமர்ந்து கைகளைத் தட்டி விளையாடிக்கொண்டிருந்தனர். வசந்தைக் கண்டதும் அமேலியாவின் மகிழ்ச்சி மறைந்து போனது. எழுந்து சமயலறைக்கு சென்று தன்னை மறைத்துக் கொண்டாள்.

"ஏன் மாமா, நீ வந்தாலே அக்கா பயந்து ஓடுறாங்க?"

"நிலா, பயங்கர தலைவலில இருக்கேன். தொந்தரவு பண்ணாத"

"பெரியவங்களுக்கு ஏன் தான் அடிக்கடி தலைவருதோன்னு தெரியல"

"பெரியவங்க நிறைய யோசிப்பாங்க அதான்"

"அது, யோசிக்குறவங்க பேசணும் மாமா"

"அடிங்க.." என்றபடி கோபத்தில் நிலாவை அடிக்கப் பாய்ந்தான் வசந்த்.

நிலா பயந்து ஓடினாள்.

அந்நேரத்தில் மார்க்கெட் சென்றிருந்த மேகலா, வாங்கி வந்த பொருட்களோடு வீட்டினுள் நுழைந்தாள்.

"அக்கா, அவசரமா எனக்கொரு காபி வேணும். இல்லன்னா என் தலையே வெடிச்சிடும்"

"ரொம்ப டென்ஷனா இருக்க போல"

"நான் என்னைக்கு சந்தோசமா இருந்திருக்கேன்"

"உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் வசந்த்"

"என்ன அக்கா?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.