(Reading time: 32 - 64 minutes)

ந்த புகைப்படத்தைப் பார்த்தப்படி பழைய நினைவுகளோடு பயணித்தவள், இன்னும் அந்த புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவனோடு இருந்த நாட்களின் சாட்சிகளாய் எதுவும் அவளிடம் இல்லை… ஒருக்கட்டத்தில் தன்னை விட்டு அவன் விலகும்போது, அவன் ஞாபகங்கள் பசுமையாய் மனதில் இருக்கும் என்றாலும், ஏனோ மனக்கண்களுக்கு தெரிவது, நிஜக்கண்களுக்கும் தெரிய வேண்டுமென்று தான் இந்த புகைப்படம் வேண்டுமென்று நினைத்தாள்… ஒருக்கட்டத்தித்கு மேல் இது மட்டுமே அவளோடு வரப்போகிறது என்பதை அறிந்து தான், இதை தயார் செய்திருந்தாள்… ஆனால் இதுவரை அந்த சந்தர்ப்பம் அமையவில்லை… ஆனால் இனி அமைந்துவிடுமோ..?? ஏனோ அதை  அவள் எதிர்பார்த்தாலும், அந்த தருணம் வந்துவிடுமோ..?? என்ற வருத்தமும் மனதில் சூழ்ந்துக் கொள்வதை என்ன செய்தும் அவளால் விலக்கி வைக்க முடியவில்லை.

ர்மதா, செல்வாக்கிடையே அந்த பிரச்சனை நடந்து இரண்டு நாட்களாகிவிட்டது… இந்த இரண்டு நாளாக, நர்மதா செல்வாவிடம் எதுவும் பேசுவதில்லை..முதலில் அவளை சமாதானப்படுத்த முயற்சித்த செல்வா, பிறகு அந்த முயற்சியை விட்டுவிட்டான்… மன்னிப்பு கேட்பதாக அவளை தொல்லை செய்து, திரும்ப கோபப்படுத்தாமல்… கொஞ்சம் ஆறப்போட்டு, பிறகு மன்னிப்பு கேட்கலாம் என்று நினைத்திருந்தான்… கோமதி இருக்கும் சமயத்திலும் இருவருக்கிடையே இருக்கும் பிரச்சனையை அவர் அறிந்துக் கொள்ளாதபடி தான் இருவரும் நடந்துக் கொண்டனர், இருந்தும் கோமதி அவர்களுக்குள் ஏதோ சரியில்லை என்பதை அறிந்துக் கொண்டார்.

அன்று நர்மதாவும், சௌமியாவும் அறைக்குள் சென்றதும், அவர் விஜியைப் பார்க்க சென்றுவிட… திரும்ப அவர் வெளியே வரும்போது, கோபமாக சௌமியா படிக்கட்டுகளில் இறங்கி வந்தவள், இவர் ஏதோ பேச வந்து அதைக் கூட கவனிக்காமல் வீட்டை விட்டு வெளியேறினாள்… பின்னாலேயே வந்த நர்மதா கண்களில் கண்ணீர் வருவேனா என்றப்படி இருக்க, இவருக்கு அதைக் காட்டாமல் இருக்க, சமைலறைக்குள் புகுந்துக் கொண்டாள்… பின்னாலேயே சென்றவர், “என்னாச்சும்மா..?? ஏன் உன் ப்ரண்ட் கிளம்பிட்டா.. ஏதோ பிரச்சனை போல தெரியுதே..??” என்றுக் கேட்க, “அவளுக்கு ஏதோ அர்ஜண்ட் வேலை வந்துடுச்சு அத்தை.. அதான் அவசரமா கிளம்பிட்டா.. உங்கக்கிட்ட சொல்ல சொல்லிட்டு தான் போனா… கிளம்பன அவசரத்துல உங்களை கவனிக்கல போல..” என்று எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், சமாளித்துப் பேசினாள்.

இருந்தும் ஏதோ நடந்திருக்கிறது, அது என்னவாக இருக்கும் என்று யூகித்தப்படியே சமையலறையில் இருந்து கோமதி வெளியே வரும்போது, செல்வா படிக்கட்டுகளில் இறங்கி வந்துக்கொண்டிருந்தான். “இவன் எப்போது வீட்டுக்கு வந்தான்..” என்று யோசித்தவர், அதை அவனிடமே கேட்டார்…

“ஒரு முக்கியமான ஃபைல் எடுக்க வந்தேன்ம்மா.. எனக்கு ஆஃபிஸ்ல முக்கியமான வேலை இருக்கு.. வரேன்ம்மா..” என்று சொல்லிவிட்டு அவன் கிளம்பி சென்றான்… ஆனால் அவன் முகமும் வாட்டமாக இருக்க, ஏதோ பிரச்சனை என்பதை  யூகித்தார்… சரி அவர்களாக எதுவாக இருந்தாலும் சொல்வார்கள், என்று அவரும் அமைதியாக இருக்க, நர்மதா, செல்வாவிற்கு இடையில் இருக்கும் பனிப்போரை கவனித்துக் கொண்டு தான் இருந்தார்… இரண்டு நாட்களாகியும் அது சரியாகததால், செல்வாவிடம் என்ன விஷயம் என்றுக் கேட்டார்… என்னவோ இந்த பிரச்சனைக்கு காரணம் செல்வாவாக தான் இருக்கும் என்பது அவர் யூகம்… அதனால் அவனிடம் அதைப்பற்றி அவர் கேட்க, அன்று நடந்ததை ஒன்றுவிடாமல் கூறினான்..

“என்ன செல்வா.. ஒரு சின்ன விஷயத்தை எப்படி பெருசா ஆக்கி வச்சிருக்க..?? நர்மதாக்கிட்ட என்னல்லாம் பேசியிருக்க..?? என்ன செல்வா, அவ உன்னோட பொண்டாட்டி, அவக்கிட்ட இப்படியெல்லாம் பேசலாமா?? அதுவும் அவ ப்ரண்ட் முன்னாடி..” என்று கொஞ்சம் கோபமாகவே பேசியவர், பின் செல்வா அலுவலகம் போனதும் நர்மதாவை அழைத்தார்.

“நர்மதா… வேலையெல்லாம் முடிஞ்சுதா..?? இப்படி கொஞ்சம் உக்காரும்மா.. உன்கிட்ட கொஞ்சம் பேசனும்..” என்று அவளை அருகில் உட்கார வைத்தார்.

“ம்ம் சொல்லுங்க அத்தை..”

“நர்மதா… உன்னோட கல்யாணம் நடந்த சூழ்நிலை உனக்கே தெரியும்..?? நீயும் உன்னோட குடும்பமும் அப்போ என்ன நினைச்சிருப்பீங்கன்னு புரியும்… தன் மகனை சரிபடுத்தி, அவசர அவசரமா இந்த கல்யாணத்தை நடத்த தான் அவங்களா அவங்க வசதிக்கு குறைவா இருந்தாலும் நம்ம வீட்டுல பொண்ணு எடுத்திருக்காங்கன்னு நீங்க நினைச்சிருப்பீங்க..” அவர் சொல்லி முடிக்கும் முன்னரே,

“அய்யோ அப்படில்லாம் இல்ல அத்தை..” என்று நர்மதா அவசரமாக மறுத்தாள்.. உண்மையிலேயே மனதளவில் அப்படி ஒரு எண்ணம் நர்மதாவிற்கு இருந்தது தான்… இருந்தாலும் அதை அவரிடம் காட்டிக் கொள்ள அவள் விரும்பவில்லை… செல்வாவிடம் இவள் பேசியதை செல்வா சொல்லியிருக்க வேண்டும்.. அதனால் தான் இவர் இப்படி பேசுகிறார் என்பதை புரிந்துக் கொண்டவள், அவனுக்கு அறிவேயில்லை… ஏதோ கோபத்துல அவன்கிட்ட பேசியதை இவங்கக்கிட்ட அப்படியே சொல்லியிருக்கான்..” என்று அவனை மனதில் திட்டி தீர்த்தாள்..

“இல்லம்மா… நீயின்னு இல்ல, இந்த இடத்துல யாரா இருந்தாலும் அப்படித்தான் நினைப்பாங்க… ஏன் நானே உன்னோட அப்பா, அம்மா சூழ்நிலையில் இருந்தாலும் அப்படித்தான் நினைச்சிருப்பேன்… ஒருவிதத்துல அது உண்மையும் கூடத்தான்… ஆனா நான் மனசார சொல்றேன்ம்மா… சாதாரணமா என்னோட ரெண்டு பசங்களுக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்திருந்தாலும், உங்களை மாதிரி ஒரு குடும்பத்துல இருந்து தான் பார்த்திருப்பேன்… என்ன அவசரப்படாம நிதானாமா தேடியிருப்பேன்… அப்பவும் உன்னை பார்த்திருந்தா, உன்னை என்னோட மருமகளா ஆக்கிக்க துடிச்சிருப்பேன்…

என்னடா இவங்க நம்மல சமாதானப்படுத்தவோ, இல்ல ஐஸ் வைக்கவோ இப்படி சொல்றாங்கன்னு நினைச்சுக்காதம்மா… மனசார தான் சொல்றேன்… ஏன்னா நானும் அந்த சூழ்நிலையில இருந்து தான் இந்த வீட்டுக்கு மருமகளா வந்திருக்கேன்… என்ன எங்க தாத்தா காலத்துல நாங்க வசதியா வாழ்ந்தோம்… ஆனா அப்பா அரசியல்ல சேர்ந்து ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க முடியாம, கட்சிக்கு உழைக்கிறேன்னு எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா அழிச்சிட்டாரு… கடைசியா எங்களுக்குன்னு இருந்த பெரிய வீடும், பெரிய வீட்டுக்காரங்கங்கிற பேரும் மட்டும் தான் இருந்துச்சு… மத்தப்படி எங்களுக்கு எந்த வசதியும் இல்ல… அப்படி இருந்தும் உங்க மாமா என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டாரு….

நான் மட்டுமில்ல, செல்வாவோட பாட்டியும் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்துல இருந்து தான் மருமகளா வந்தாங்க… இதெல்லாம் எதுக்காக சொல்றேன்னா… இந்த குடும்பத்துல என்னைக்கும் அந்தஸ்து, வசதி வாய்ப்புன்னு யாருமே பிரிச்சு பார்த்ததில்ல… உன்னோட மாமாவும் சரி, அவரோட அப்பாவும் சரி, கஷ்டம்னு ஒன்ன பார்க்காம வளர்ந்தவங்க… இருந்தாலும் நான் பணக்காரன்னு என்னைக்குமே அவங்க கர்வத்தோட இருந்ததில்ல… எங்கக்கிட்ட பணம் இருக்குன்னு அகங்காரத்தோட திரிஞ்சதில்ல… எல்லோர்க்கிட்டேயும் நல்லப்படியா தான் பழகுவாங்க… தனக்கு கீழே இருக்கவங்களையும் மதிப்பு மரியாதையா தான் நடத்துவாங்க…

 ஒன்னுமில்லாத சமயத்துல கூட என்னோட அப்பாவும் சரி, தம்பியும் சரி… ஜாதி, மதம், அந்தஸ்துன்னு எல்லாத்தையும் கட்டிக்கிட்டு அழுவாங்க… தனக்கு கீழ இருக்கவங்களை எப்பவும் ஒரு அடி தள்ளி வச்சு தான் பார்ப்பாங்க… அவங்களை வீட்டுல கூட சேர்க்கமாட்டாங்க… ஆனா உன்னோட மாமாவும், செல்வாவோட தாத்தாவும் அப்படியில்லாம இருந்ததை பார்த்து நானே ஆச்சர்யப்பட்டுப் போயிருக்கேன்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.